தேவன் தனது ஊழியக்காரன் என்று குறிப்பிடப்பட்ட அனனியாவை அனுப்பத் தேர்ந்தெடுக்கிறார். அவனுடைய பார்வையில் அது ஆபத்தான அல்லது அபாயத்திற்குரிய பணியாக இருந்தாலும், அவன் தேவனுக்கு கீழ்ப்படிகிறான். இந்த நிகழ்வுக்கு முன்னரோ பின்னரோ அனனியா பற்றி எந்த தகவலும் இல்லை. அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவன் அவ்வளவே, அவன் பெரிய அப்போஸ்தலனோ அல்லது போதகரோ அல்லது தீர்க்கத்தரிசியோ அல்ல, அப்படி எதுவும் குறிப்பிடப்படவுமில்லை. ஆனால், வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாக இருந்தான் (அப்போஸ்தலர் 22:12). ஆம், தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்ற எளிய மக்களையும் தாழ்மையான மக்களையும் பயன்படுத்துகிறார்.
தேவன் அனனியாவிடம் ஒரு தரிசனத்தில் பேசினார். அவர் சில குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினார். முதலில், கர்த்தர் அவனை நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போகச் சொன்னார். இரண்டாவதாக, அவன் அந்தத் தெருவில் உள்ள யூதாஸின் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. மூன்றாவதாக, அவன் தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்ற நபரைத் தேட வேண்டும். நான்கு, அந்த சவுல் ஜெபித்துக் கொண்டிருப்பான். ஐந்து, அனனியா சவுலிடம் வருவதைக் கர்த்தர் ஒரு தரிசனத்தின் மூலம் அறிவித்தார்.
சவுல் ஜெபித்துக் கொண்டிருந்தான், ஆம், உண்மைதான், இப்போது ஜெபித்துக் கொண்டிருந்தான். முன்பு அவன் ஜெபம் என்பது ஒரு வழக்கமான செயல், சடங்கு, பாரம்பரியம் அல்லது ஒழுக்கம் என்று கூறினான். ஆனால் இப்போது தினசரி சொல்லும் மந்திரம் அல்ல, தேவனுடனான ஆவிக்குரிய உரையாடல் என்பதை புரிந்துக் கொண்டான். இப்போது, அவன் கர்த்தராகிய இயேசுவை மத்தியஸ்தராகக் கொண்டு தேவனிடம் ஜெபிக்கிறான். ஆம், நிச்சயமாக, அவன் இயேசுவின் நாமத்தில் ஜெபித்தான்.
அனனியா சவுலின் கடந்த கால மற்றும் தற்போதைய பணியை அறிந்திருந்தான். பரிசுத்தவான்களை எல்லாம் துன்புறுத்தின சவுலின் எதிர்கால பணியை அறியவில்லை. ஆனால் சவுல் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரம் என்று கர்த்தர் அனனியாவுக்கு வெளிப்படுத்தினார்; புறஜாதிகள், ராஜாக்கள் மற்றும் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைத் தாங்குவான் அல்லது சாட்சியளிப்பான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் மக்களை துன்பப்படுத்திய சவுல், இனிமேல் அவருடைய நாமத்திற்காக துன்பப்படுவான் (அப்போஸ்தலர் 9:13-19)
அனனியா கீழ்ப்படிதலுடன், கர்த்தரின் அறிவுறுத்தலின்படி சென்று சவுலை அடைந்தான். அவன் மீது கை வைத்தான். அனனியா சவுலை ‘சகோதரனாகிய சவுலே’ என்று அழைக்கிறான். சகோதரன் என்றழைத்தவுடன் உறவுகளின் தன்மை வெகுவாக மாறிவிட்டது. ஆம், அனனியாவின் முகத்தைப் பார்க்க முடியாதபடி சவுல் குருடனாக இருந்தான். ஆனால் சகோதரன் என்ற அன்பான தொடுதலும் இனிமையான வார்த்தையும் கர்த்தருடைய அன்பை அடையாளம் காண சவுலுக்கு உதவியது. பின்னர் சவுல் ஞானஸ்நானம் பெற்றான்.
என் வாழ்க்கையிலும் அனனியா போன்று ஊழியம் செய்த சகோதர சகோதரிகளுக்காக நான் கர்த்தரைத் துதிக்கின்றேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran