சுழன்றடித்த சூறாவளி!

தொடர் - 18

“இந்தாம்மா சாந்தி உன் மகன் ரொம்ப அழறான் தூக்கம் வரும்போல” ஆறு மாதக் குழந்தை சாமுவேலைக் கொண்டுவந்து கொடுத்தார். துரைராஜின் தாய் செண்பகம்.

“ஆமாம் அத்தை. அவன் தூங்கும் நேரந்தான்” என்று கூறியபடி குழந்தையை வாங்கியவள் தொட்டிலில் இட்டு ஆட்ட ஆரம்பித்தான்.

ஆரிரராராரோ எங்கள் அன்பே நீ கண்வளராய்
ஆண்டவர் அருளாலே அற்புதமாய் வந்த பொற்யாலா கண்வளராய் ... ஆ...ஆ

பார்த்திபன் தாவீதைப் போல் நீயும் பரமாக்குப் பிரியமாவாய்
கத்தியில் சாமுவேலாய் செல்வமே நீயும் சிறந்திட வேணுமடா... ஆரி

கிதியோன் வீரனைப் போல், சாத்தானின் சதிதனில்
கதியென வீழ்ந்திட்ட மாந்தர்களை மீட்டிட வேணுமடா.... ஆரி

நற்செய்தி உரைப்பதிலே சுந்தாசிங் ஆவாய் கண்ணே
நாடெல்லாம் போற்றவே நாதர் இயேசுவின், நற்சீடன் ஆவாய் கண்ணே... ஆரி

இறைவனைத் தேடுவதில் இணையற்ற தானியேல் ஆவாய்
ஈடில்லா ஞானத்தில் சாலொமோன் ராஜாவாய் ஜகத்தினில் விளங்கிடுவாய்... ஆரி

இன்னல் செய்தவர்க்கும் இன்னருள் புரிவதிலே
இனிய யோசேப்பாய் என்றென்றும் வாழ்வாய் எங்கள் செல்வமே.... ஆரி


சாந்தியின் இசை வெள்ளத்தில் கண்ணயர்ந்தான் சாமுவேல், செண்பகத்தம்மாவும் இசையில் அப்படியே லயித்துப் போய்விட்டாள்.

“ஏம்மா சாந்தி! இந்தப்பாட்டு எந்தப் புத்தகத்தில் இருக்கும்மா?”

இல்ல அத்தை! நம்ம கீர்த்தனையில் “ஆர் இவர் ஆராரோ?” என்ற இயேசுசாமியின் பிறப்பின் பாடல் இருக்கு ,அதே ராகத்தில் நானா எழுதினேன்.

“அப்படியா சாந்தி? நல்லா இருக்குடா, கிறிஸ்தவங்க வீடுன்னா, இப்படித் தாலாட்டுப் பாடறது நல்லதும்மா. ஞானப் பாலை தொட்டிலிலேயே ஊட்டுவதுபோல” சிறிது நிறுத்தியவள்.
“ நீ என்னை அத்தை ... அத்தைன்னு கூப்பிடும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? உன்ன மாதிரி ஒரு மருமக வர கொடுத்து வச்சிருக்கணும்... ஆனா உன் தங்கச்சி உன்ன மாதிரியில்லையேம்மா” ஒரு பெருமூச்சுவிட்டார்.

பகீரென்றது சாந்திக்கு! ஏனத்தை அப்படிச் சொல்றீங்க?

“துரைராஜுக்கும், அவளுக்கும் சேரவேமாட்டேங்குது, எப்பப்பார்த்தாலும் சண்டை, அதாவது. மெளன நாடகமா இருக்கும். ஒட்டுதலே இல்லை. இன்றைக்கு அவங்க அறையிலிருந்து சத்தம் பெரிசா வந்தது. அவன் கோபத்தோடே போறான். இவரும் இந்த இரண்டு நாளா ஊரிலே இல்லையா? எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு. வசந்தி வெளியே வரவேயில்லை. இப்ப சாப்பிடக் கூப்பிட்டேன். எரிந்து, எரிந்து பேசுறாள். சாமுவேல் வேறு அழுதான், தூக்கிட்டு வந்துட்டேன்” செண்பகத்தம்மாளின் கண்கள் கலங்கியிருந்தன.

“நீங்க. இங்க இருங்க அத்தை நான் போய் அவளைப் பார்க்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க, கொஞ்சம் நாளானா சரியாகிவிடும்” வேகவேகமாக துரைராஜ் வீட்டுக்குச் சென்றாள்.

“வசந்தி! வசந்தி!” கூப்பிட்டுக் கொண்டே அவள் அறைக்குச் சென்றாள் சாந்தி!.

தலைவிரி கோலமாக படுக்கையில் கிடந்தாள் வசந்தி! அழதழுது அவள் கண்கள் வீங்கியிருந்தன.

“வா, வா, நானே உன்னிடம் வர நினைத்தேன். உன்னிடம் எனக்குக் கல்யாணம் பண்ணிவை என்று கேட்டேனா? ஏன் இப்படி என்னை பாழுங் கிணற்றிலே தள்ளிட்டே!” பொரிந்தாள் வசந்தி.

“பாழுங்கிணறு?” தலைசுற்றியது சாந்திக்கு. பொறுமையை வரவழைத்துக் கொண்டாள். “வசந்தி! என்ன நடந்தது! ஏன் அழுதுகிட்டு இருக்க?”

“மேரேஜ் ஆகி என்ன பிரயோசனம்? அதற்கு முன்னாடியாவது நான் சந்தோஷமா இருந்தேன். இந்தப் பட்டிக்காட்டில் ஒரு சினிமா... டிராமா, ஒண்ணும் கிடையாது. இதில... கொலுசு போடாதே, மை போடாதேன்னு, ன்ப வள் வேற.... நான் என்ன இப்பவே கிழவி மாதிரி இருக்கணுமா?”

“வசந்தி! அவர் ரசிக்கத்தாண்டி நீ இருக்கணும். அவரே அதை விரும்பலைன்னா விட்டிட வேண்டியதுதானே! ஏன் வசந்தி! உனக்கு விதவிதமா நகை செய்து போட்டிருக்காரா இல்லையா! குடும்ப நகைன்னு வழிவழியா வர்ற நகைகளையெல்லாம் போட்டு மகாராணி மாதிரி உன்னை அழகு பார்க்கலையா? தலைநிறைய வைக்க மல்லிகைப் பூ வாங்கித்தரலையா? ஏண்டி இப்படிப் பேசற?”

“நீ என்னமாவது சொல்லி என்னை சமாதானப்படத்துவேன்னு எனக்குத் தெரியும். எனக்கு இங்க ஒரே போர் (Bore) நான் வேலைக்குப் போகணும்!”

“வேலைக்குப் போகணுமா? நீ வேலை பார்க்கணும்னு என்ன அவசியம்?”

“அவசியமோ, அவசியமில்லையோ! இந்த வீட்டில் நாள் பூராவும் அடைஞ்சி கிடக்க முடியாது. எனக்குப் பொழுது போகணும்!”

“வசந்தி! உனக்கு எம்பிராய்டரி போடத்தெரியும். நன்றாகத் தைப்பாய்! வயர் கூடை இதெல்லாம் அழகா போடுவாயே! வாசல் திரை, சன்னல் திரை, மேஜை விரிப்பான் என்று தைத்துப் பூப் போடலாம். பூச்சாடிகள். அழகுப் பொருட்கள் செய்து வீட்டை அலங்கரிக்கலாம்! நன்றாகப் பொழுது போகுமே!”

“ஆமா! ஆமா! இந்தப் பளிங்கு மாளிகையை அலங்கரிக்கணும்?” கோபமும், வெறுப்பும் கொந்தளித்தன. வசந்தியின் வார்த்தைகளில்.

கோபத்தை முதலில் தணிக்க வேண்டும் என எண்ணிய சாந்தி, “சரி வசந்தி! வேலை தேடுவோம், கிடைத்தவுடன் நீ பார்க்கலாம்”.

புயலாய்ச் சீறியவள் தென்றலாய் மாறினாள். “உண்மையாகவா சொல்ற அக்கா! வேலை தேட வேண்டிய அவசியமே இல்லை. நம்ம பக்கத்து ஊர் மயிலாடும் பாறையில் புதிய இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கு டீச்சாஸ் தேவையாம். நான் ட்ரெயினிங் படிச்சிருக்கிறேனல்லவா எனக்கு நிச்சயம் கிடைக்கும். அத்தான் கிட்ட பெர்மிஷன் மாத்திரம் வாங்கிக் கொடுக்கா” சாந்திக்கு ஷாக் அடித்தது.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”

“கோடி வீட்டு ராதா சொன்னாள்! அவள் பி.ஏ., படித்தவள் தானே! அவளும் போகப் போகிறாள் அக்கா! நானும் வேலைக்கு போறேன். நீ சொன்னா கேட்பாருக்கா!” சாந்திக்கு இவர்களது சண்டையின் காரணம் புரிந்தது. என்ன சொல்வது? எப்படி சமாதானப்படுத்துவது எனப் புரியவில்லை. அமைதியாக இருந்தாள்.

“என்னக்கா பதில் சொல்லாம இருக்கே!”

“வசந்தி உன் பெரிய அத்தான், துரைராஜ் மாமா எல்லாம் வரட்டும் பேசுகிறேன். இப்ப எந்திரி! முகம், கை, கால் கழுவிட்டு சாப்பிடு, தலைசீவி அந்தப் பூவை எடுத்து வை!” வசந்தியும் எழுந்தாள். “நீ சென்னபடி நான் கேட்கிறேன். நீ எப்படியாவது வேலைக்குப் போக அனுமதி வாங்கிக் கொடு, அக்கா! நான் வேலைக்குப் போக பெர்மிஷன் கிடைக்கலைன்னா.... அப்புறம்... இங்கு இருக்க மாட்டேன்”.

“என்ன சொல்ற வசந்தி!”

“ஆமா. இந்த உலகத்திலேயே இருக்க மாட்டேன். வயலுக்குப் போடுற பூச்சி மருந்துகள் நிறைய இருக்கு. காரியத்தை முடிச்சிடுவேன். ஜாலியான வாழ்க்கை தான் இல்லை. வேலை பார்த்தாலாவது நிம்மதி இருக்கும் அதுவும் இல்லையன்னா..... எதுக்கு வாழணும்?.” விரக்தி அவள் வார்த்தைகளில் தொனித்தது.

வசந்தியை சாப்பிட வைத்த பின் வீட்டிற்கு வந்தாள் சாந்தி, ஒரே குழப்பமாக இருந்தது.

மாலை நேரம்! சாந்தியின் மூலம் அனைத்தையும் அறிந்தார் ஜெபா. அவர் எதிர்பார்த்தது தான். எனவே அதிர்ச்சியடையவில்லை. சாந்தியின் கண்கள் குளமாகியிருந்தன.

“சாந்தி வா ஜெபிப்போம்!” இருவரும் முழங்காலில் நின்றனர். ஜெபத்தை முடித்து எழும்பவும் வாசற் கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது.

கதவை திறந்தாள் சாந்தி. துரைராஜ் நின்றிருந்தான். அண்ணி! அண்ணன் என்னை வரச் சொன்னாங்களாம்” அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.
“வாங்க தம்பி! அண்ணன் உள்ளே தான் இருக்கிறார்கள்” சோக கீதமாக ஒலித்தது.

“வா துரை! இப்படி உட்கார்!” ஜெபசிங் வரவேற்று அவனை அமரச் செய்தார். அவன் முகத்தை உற்று நோக்கினார். மழை முகம் காணா பயிர் போல் வாடியிருந்தது.

“உனக்கும் வசந்திக்குமிடையில் மனவேறுபாடா?” ஜெப சிங்கின் நேரடிக் கேள்வி துரைராஜை ஒரு கலக்கு கலக்கியது. ஜெப சிங்கை கண் கொட்டாமல் பார்த்தான்.

“அண்ணே! எனக்கு ஏண்ணே மேரேஜ் நடந்துச்சு! முன்பு செய்த பாவத்துக்கு தண்டனையா?” வேதனையின் குரலாக வெடித்தது. மேலே தன் பார்வையை செலுத்தினான். கண்களில் பொங்கிய கண்ணீரை கீழே வழியாதவாறு இமைத்தான். பெரூமூச்சு ஒன்று அவனிடமிருந்து வெடித்தது. துரையை பார்த்த ஜெபாவிற்கு பரிதாபமாக இருந்தது. “துரை! நீ உன் திருமணத்திற்காக ஜெபித்தாயா?”

“அண்ணே! ஜெபித்தேன். உபவாசமிருந்து ஜெபித்தேன். கர்த்தருக்கு சித்தமானால் மட்டும் நடக்கட்டுமென மன்றாடி ஜெபித்தேன் அண்ணா” உணர்வுகள் பொங்கிப் பிரவாகித்தன வார்த்தைகளில்.

“ஜெபத்தைக் கேட்ட பரம தகப்பன் தவறு செய்வார் என்று நினைக்கிறாயா?” அழுத்தமாக கேட்டார் ஜெபா. “இல்லை” என்பது போல் தலையை அசைத்தான் துரை.

“துரை மனைவி என்பவள் மண்பொம்மையல்ல. அவளுக்கும் உணர்வுகள், ஆசைகள் எல்லாம் உண்டு. நாம் சொல்வதை அவள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. அவள் “மனம் மகிழும்படி மாலை வேளைகளில் உலாவ அழைத்துப் போ. வேலை... வேலை என்று இருக்காதே!” “உலாவ அழைத்துப் போனால் “இந்தப் பட்டிக்காட்டில் "என்ன இருக்கு?” என்கிறாள். அவளுக்கு சினிமா, டிராமா வேண்டும்” விரக்தியாகச் சொன்னான்.

“துரை! எல்லோரும் குழந்தையிலிருந்தே கடவுளுக்குப் பிரியமான பிள்ளைகளாக வளர்ந்திட முடியாது. சிலர் வாழ்வில் ஏதாவது அற்புதம், அதிர்ச்சி, ஆபத்து அடைவர். அதன் பின் கடவுளுக்கு மிக மிக பிரியமானவர்களாக தியாக வாழ்க்கை வாழ்வர். நீ வசந்தியை வெறுக்காதே. அவள் வேலைக்கு போக விரும்பினால் போகட்டும்.”

“அண்ணே! பக்கத்து கிராமத்திற்கு தினம் இரண்டு மைல் நடந்து போகணுமாண்ணே? அவ அப்படிப் போய் வேலை பார்க்கணுமாண்ணே?” ஆத்திரத்தோடு கேட்டான். “துரை! அவ வேலைக்குப் போகட்டும் சீக்கிரம் அவளே வேலையை விட்டு நின்னிடுவா! ஏதோ ஒரு பெரிய பாடம் ஆமா... வாழ்க்கைப்பாடம் படிக்கப்போறா. என் மனதில் அப்படித்தான் தெரியுது” தீர்க்கமாகச் சொன்ன அவரை நிமிர்ந்து பார்த்தான். ஒளி வீசும் அவர் விழிகள் அவனை சரி சொல்ல வைத்தன. 

இதன் தொடர்ச்சி  அனுபவம் புதுமை!  என்ற தலைப்பில் உள்ளது.

இந்த கதை  இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Latchiya Deepam - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download