மரணமே உன் கூர் எங்கே?

மரணமே உன் கூர் எங்கே?

டேனியல் ராய் நேபாள கிறிஸ்தவர்களிடையே ஒரு சிறந்த தலைவராக இருந்தார். அவர் வேதாகமத்தை நேபாளி மொழியில் மொழிபெயர்த்தார், அதை லண்டன் திரித்துவ வேதாகம சொசைட்டி வெளியிட்டது. அவர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள காலிம்போங்கில் ஊழியம் செய்தார். ஊழியத்திற்காக ஹாங்காங் சென்றார், அங்கு அவர் நோய்வாய்ப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இந்தச் செய்தியை டேனியல் ராயிடம் தெரிவிக்க வருத்தப்பட்ட மருத்துவர், தயக்கத்துடன் வேறுவழியின்றி தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு டேனியல் ராய்: “ஆஹா டாக்டர்! இது என் காதுகளுக்கு இனிமையான செய்தியல்லவா! நான் விரைவில் பரலோகத்தில் உள்ள என் தந்தையைச் சந்திக்கப் போகிறேன்! இப்படி நல்ல செய்தியை சொன்னதற்காக நன்றி சொல்கிறேன்; சரி இப்போது நான் மருத்துவமனையை விட்டு செல்லலாமா?", என்றார். மரணத்தை எதிர்கொள்ள என்ன ஒரு மகிமையான தைரியமும் இரட்சகரின் சமூகத்தில் உடனடியாக செல்வோம் என்ற நம்பிக்கையும் அல்லவா! 

1) கடைசி எதிரி:
"பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்" (1 கொரிந்தியர் 15:26) என்பதாக பவுல் எழுதுகிறார். ஒரு சீஷனின் வாழ்க்கையில், பல சவால்கள், பிரச்சனைகள், இன்னல்கள், சோதனைகள் மற்றும் பாடுகள் என அனைத்தும் உள்ளன. ஆனால் இறுதி எதிரி மரணம். டேனியல் ராயைப் போலவே, விசுவாசிகள் மரணத்தை கேலி செய்கிறார்கள் அல்லது மரணத்தை வெற்றியாக தழுவுகிறார்கள்.

2) மரண பயம் இல்லை:
"ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்" (எபிரெயர் 2:15). தேவ ஜனங்கள் மரண பயத்திலிருந்து விடுதலையடைகிறார்கள், ஆனால் தேவனை அறியாதவர்களோ எப்போதும் மரண நிழலின் பயத்தில் வாழ்கிறார்கள் (எபிரெயர் 2:15). ஆம், டேனியல் ராய் கிறிஸ்துவை அறிந்ததால் மரணத்தைக் கண்டு பயமில்லை. 

3) உன் கொடுக்கு எங்கே?
மரணத்தை எதிர்கொள்ளும் போது விசுவாசிகள் பாவத்தையும் சாத்தானையும் ஜெயித்தவர்களாக ஒரு வெற்றி முழக்கமிடுகிறார்கள். "மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?" (1 கொரிந்தியர் 15:55). 

4) மரணம் என்னும் கதவு:
தேவனை நேசிப்பவர்களுக்கு, மரணம் என்பது பரலோகத்திற்கு செல்லும் வாசல். "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4). புற்றுநோய்க்கோ அல்லது மரணத்திற்கோ பயப்படாமல், மரண வாசல் வழியாக நித்தியத்திற்கு செல்வேன் என்று டேனியல் ராய் சந்தோஷமடைந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் மரணத்திற்கு பயப்படுவதில்லை, ஆகவே பூமியில் கண்களை மூடி தேவ பிரசன்னத்தில் கண்களைத் திறக்க தயாராக உள்ளனர்.

நான் மரணத்திற்கு அஞ்சுகிறேனா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download