நிறைவானது வரும்போது...

தன் அலுவலக அறையில் அமர்ந்து தினதியானத்தில் தன் விழியைப் பதித்திருந்தார் குருவானவர் டேவிட்சன். ஆனால் அவர் மனமோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. தின தியானத்தை மூடி வைத்தவர் தனக்கு முன்னிருந்த இருக்கைகளைப் பார்த்தார் டேவிட்சன் உறக்கத்திலிருந்து எழுந்து வருவதற்கு முன்பே ஆட்களால் ஆட்கொள்ளப்படும் இருக்கைகள் இன்று வெறுமையாகக் காட்சியளித்தன. ஏனென்று அவருக்குத் தெரியாதா என்ன? ஒரு பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது. அவருக்கு எதிரேயிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள் டேவிட்சனின் தாய் ஞானம்மாள்!

“டேவிட்! ஏப்பா கவலையா இருக்க?

“பட்டமும், பதவியும் இல்லைன்னா மதிப்பும், மரியாதையுமிழந்த வெறும் மனிதனாயிடுறான் இல்லையம்மா?”

அந்நேரம் ஹார்லிக்ஸ் உடன் அவ்வறைக்குள் நுழைந்த டேவிட்சனின் மனைவி பிரிஸ்கில்லா,

“உன்னத தேவனின் கிருபை வரங்களும், அவனுடைய இலட்சிய வாழ்வும்தான் ஒரு மனிதனை உயர்ந்த மனிதன் ஆக்குமே தவிர வெறும் பட்டமும், பதவியுமல்ல!” என்று கூறியபடி, ஹார்லிக்ஸ் கப்புக்களை மேஜை மீது வைத்துவிட்டு தானும் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

“டேவிட்! உன் கவலைக்குக் காரணம் தெரியுதப்பா. உண்மையா யோசித்துப் பார்த்தா நீ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. சந்தோஷப்படணும்பா! நிர்வாகி என்ற பதவி போயிடுச்சேன்னு கவலைப்படுறையா? நான் ஒன்று கேட்கிறேன். உண்மையான பதில் சொல்லணும். நீ. நிர்வாகியா இருந்தப்போ... வேலை கேட்டு, வேலை மாறுதல் கேட்டு உன்னைப் பார்க்க அதிகாலையிலிருந்து இரவு வரை ஆட்கள் வந்து கொண்டேயிருந்தாங்க. இல்லையா? அவங்க எல்லோருமே உன்னை மதித்தார்கள். வாழ்த்தினார்கள் என்று திட்டமா சொல்ல முடியுமா?”

“அதெப்படிம்மா முடியும்? ஒரு பணியிடம் விழுந்தால் ஒன்பது பேர் முயற்சித்தாலும் ஒருவருக்குத் தானே கிடைக்கும். அந்த ஒருவர் வாழ்த்துவார் மற்ற எட்டுபேரும் வசை பாடுவர்” ஐயா! ஸ்தோத்திரம் நல்லாயிருக்கீங்களா? “அப்படீன்னு அக்கரையா அன்பா விசாரிக்கிறது கூட மாயையாத்தாம்மா இருக்கு. கமிட்டி அங்கத்தினர்கள் தம் கைப்பாவையா நான் ஆடணும்ன்னு எதிர்பார்க்கிறாங்க” பெருமூச்சுவிட்டார் டேவி.

“மாயையான அன்பும், போலியான கெளரவமும் தான் வேணும்ன்னு நினைக்கிறீங்களா?” பிரிஸ்கில்லா அவரை ஊடுருவிப்பார்த்தாள்.

“டேவிட்! கர்த்தருடைய ஊழியத்திற்கு உன்னை அனுப்புவதாக பொருத்தனை செய்துதாம்பா கடவுளிடமிருந்து உன்னைக் கேட்டு வாங்கினேன். வட இந்தியாவிற்கு உன்னை மிஷனெரியா அனுப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை. உன் அப்பா விருப்பப்படி நீ பாஸ்டர் ஆயிட்ட...”

“இது கர்த்தருடைய ஊழியம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா உன் பணியை உன் பரமபிதா பாராட்டும் அளவிற்கு உன்னால். செய்ய முடியலையே. காரணம் உனக்கிருந்த பல பொறுப்புகள் அதன் விளைவாக உன்னை எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் மனிதர் கூட்டம். சுந்தராஜ் மகன் ஹாஸ்பிட்டலில் இருந்தபோது. நீ போய்ப்பார்த்து ஜெபித்து விட்டு வந்த! முத்து சுகவீனமா இருக்கானே போவாயா? சுந்தர்ராஜ் மகனை நீ பார்க்கப் போலைன்னா... உன்னைக் கண்டபடி திட்டித்தீத்து, பொய் வதந்திகளைப் பரப்பிவிடுவார் என்ற பயம். ஆனா... முத்துவைப் பார்க்கலைன்னா உனக்கு எந்தத் தீமையும் வரப்போவதில்லை. எனவே நீ போகலை!”

“அம்மா!”

“உன்னைக் குற்றம் சாட்றேன்னு நினைக்காதே! உன்னைச் சூழ்ந்திருக்கும் மனிதக் கும்பலை விட்டுவர நேரம் கிடைக்கலை. ஆனால் அதிகாரம் போயிடுச்சின்னா இந்தப் போலிமரியாதைக் கூட்டம் உன்னைவிட்டு ஓடிப்போயிடும். நிறைவானது வரும்போது குறைவானது  ஒழிந்துபோம்” நிறைவான ஆசிர்வாதம் தேடிவருதப்பா! குறைவானது போயிடுச்சேன்னு நினைக்காதே!”

“அத்தை! சொல்றது நூற்றுக்கு நூறு உண்மைங்க! குருவானவர் ஒரு விரிவுரையாளர் அல்ல! சண்டே சர்வீசில் அழகா, அர்த்தமாப் பிரசங்கம் பண்ணினா மட்டும் போதாது. அவர் ஒரு மேய்ப்பர். தன் மந்தையை மேய்க்கணும். ஆடுகளைப் போஷித்தா மட்டும் போதாது, எந்த ஆடு சுகவீனமோ அதற்கு மருந்திட்டுக் கவனிக்கணும் எந்த ஆடாவது வழி தவறினா.”

“காலை ஒடிக்கணுமா? என் இரண்டு காலையும் ஒடச்சி உட்கார வைச்சிடுவாங்க” சத்தம் போட்டுச் சிரித்தார் டேவிட்சன்.

“காலை ஒடிக்கத்தாங்க வேணும் அதாவது வழி தவறும் மக்களை அவர்கள் வீட்டில போய்ப் பார்க்கணும். வேதவாக்கியங்களைச் சுட்டிக்காட்டி கடிந்து கொள்ளணும்.”

“டேவிட் தேவ சமூகத்தில் காத்திரு. ஆரோனை அழைத்தது போலக் கர்த்தர் ஊழியத்திற்கு உன்னை அழைத்துள்ளார். உன் பணியை பரம தகப்பன் பாராட்டும்படி செய்யமுடியும்பா! நீயும் வாழ்வாய் அநேகரை வாழவைப்பாய்” ஞானம்மாவின் வார்த்தைகளை ஆமோதிப்பது போல் சுவர்க்கடிகாரம் இரண்டுமுறை அடித்து ஓய்ந்தது. காலிங்பெல் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் பிரிஸ்கில்லா! முகமும் அகமும் மலர சாலமோன் நின்றிருந்தார்.

“ஸ்தோத்திரம்மா!”

“ஸ்தோத்திரம் ஐயா! வாங்க உட்காருங்க!”

“ஐயா இருக்காங்களா? எனக்குப் பேரன் பிறந்திருக்காம்மா! ஆபரேஷன்தான் வேற வழியே இல்லைன்னு டாக்டரம்மா சொல்லிட்டாங்க! ஐயா வந்து ஜெபம் பண்ணிட்டுப் போனாரம்மா. என் மகளுக்கு நார்மல் டெலிவரி. நாங்க ஆசைப்பட்டபடி பேரனே பிறந்திட்டான்!”” கேக் பாக்கட்டை நீட்டினார்.

பிரிஸ்கில்லாளின் உள்ளம் மகிழ்ந்தது. “ரொம்ப சந்தோஷம் ஐயா! முழு இரவு ஜெபம் நடத்த ஐயா பண்ணைவிளைக்குப் போயிட்டு, இன்று காலை 6மணிக்குத்தான் வந்தார்.

கொஞ்சம் அயர்ந்து தூங்குகிறார் அதுதான்... அவரை எழுப்ப யோசனையாயிருக்கு” தயங்கினாள்.

“வேண்டாம்மா! எழுப்பாதீங்க! அவர் செய்யறதுதாம்மா ஊழியம். யாருக்குச் சுகமில்லைன்னாலும் உடனே வந்திடுறாரே! ஏழை, பணக்காரன் வித்தியாசமோ. சாதி வேறுபாடோ எதுவுமே பார்க்காம, தன்னைக் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் ஓடி வர்றாரே! அவரு நல்லா இருக்கணும்மா!” இரு கரம் குவித்து வணங்கியவர், போயிட்டு வாரேம்மா!”” என விடை பெற்று விரைந்தார்.

வீட்டிற்குள்ளே திரும்ப நினைத்தவள் “அம்மா? என்ற குரல் கேட்டு நின்றாள். கிரேஸி டீச்சர் நின்றிருந்தார்கள்.

“வாங்க டீச்சர்! உட்காருங்க!”

“அம்மா! என் மகன் என் குடும்பத்துக்கு அவப்பெயர் தேடித் தந்திடுவானோ என்று நினைச்சேம்மா. அவரில்லாததுனால எனக்கு அடங்க மாட்டேங்கிறானேன்னு கடவுள் பாதத்திலே கண்ணீர் வடித்தேன். என் ஜெபத்தை கடவுள் கேட்டாரம்மா! அவனைத் தொடர்ந்து சந்தித்து, தங்கக் கம்பியா மாத்திட்டாரே! வாலிபர் மீட்டிங்ல ஒழுங்காக கலந்துக்கறான். வேதம் வாசிக்காம, ஜெபம் பண்ணாமப் படுக்கவே மாட்டான்மா!” முகத்தில் மலர்ச்சி பொங்கி நின்றது.

“உங்க மக லில்லி நல்லாயிருக்காளா?”

“அம்மா!. லில்லி விஷயமாத்தாம்மா உங்கள பார்க்க வந்தேன். இன்னைக்கு மாலை 6 மணிக்கு லில்லியைப் பெண்பார்க்க வாறாங்கம்மா! நீங்களும் ஐயாவும் எங்க வீட்டுக்கு வந்து ஜெபம் பண்ணிட்டு. ஆவிக்குரிய தாயும் தகப்பனுமாக அந்த நேரம் நீங்கதாம்மா இருக்கணும்! கரம் குவித்தாள்.

“ஸ்தோத்திரம்மா! ஐயா எங்கம்மா?” உற்சாகமாக கூவிக்கொண்டு உள்ளே வந்தான். டீன் ஏஜ் இளைஞன் ஒருவன்.

“வா, சுந்தர்! இஞ்சினியரிங் காலேஜில் இடம் கிடைத்து விட்டதாமே! அது தான் இந்த குஷியா?”

“ஆமாம்மா! இன்னைக்கு புறப்படுறேன். ஐயாகிட்டே ஜெபம் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்.” என்று கூறவும்,

“வா! சுந்தர்!” என்று கூறியபடியே டேவிட்சன் அவ்வறைக்குள் நுழைந்தார்.

“ஸ்தோத்திரம். ஐயா!” சுந்தரும், கிரேஸியும் கரம் குவித்தனர். விவரம் கேட்டறிந்து, ஜெபித்து அனுப்பி வைத்தார்.

காலை சிற்றுண்டி நடந்து கொண்டிருந்தது.

“இன்னும் ஒரு தோசை சாப்பிடுங்க! நேற்றும் உபவாசம்” என்று கூறியபடி ஒரு தோசையை வைத்தாள் பிரிஸ்கில்லா!

“ஓ! நேற்று உபவாசம்னா இன்றைக்கு நேற்றுச் சாப்பாட்டையும் சோத்து சாப்பிடணுமா?” சிரித்தார் டேவிட்.

“டேவிட்! ரொம்ப உபவாசமிருந்து உடம்பை கெடுத்துக்காதப்பா” வேற ஊருக்குப் போறப்ப கூடவா உபவாசம் இருக்கணும்?”

“அம்மா அதிகாலையில் “இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேற எவ்விதத்தினாலும் புறப்பட்டு போகாது” என்ற வேத வாக்கியத்தைச் சுட்டிக் காட்டி நான் உபவாசத்தோடு முழு இரவு ஜெபத்தில் கலந்துகொள்ளும் படி தேவன் உணர்தினாரம்மா! அதனால் தான் உபவாசம் இருந்தேன். பரிசுத்த ஆவியின் நிறைவு, கூட்டத்தின் ஆரம்ப முதல் இருப்பதை உணர்ந்தேன். ஜெப வேளையில் இரு கால்களும் செயலிழந்த 12 வயதுடைய தனது மகனை அழைத்துக் கொண்டு ஒரு பெண் முன்னே வந்து கண்ணீரோடு முழங்கால் படியிட்டாள். அவனுக்கு ஐந்து வயதிருக்கும் போது விளையாடி விட்டு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவன் ஜுரத்தால் படுத்துவிட்டானாம். இரு கால்களும் செயலிழந்து விட்டனவாம். என்னுள்ளத்தே சொல்லொண்ணா இரக்கம் நிறைந்ததம்மா! தேவனை நோக்கிப் பார்த்தேன். ஒரு வல்லமை என்னுள் பாய்வதையுணர்ந்தேன். பிசாசு தான் இதற்குக் காரணம் என உணர்த்தப்பட்டேன். பிசாசினை அதட்டினேன். பையன் அழறிக் கொண்டு விழுந்தான். மறு வினாடி நன்றாக நடந்தானம்மா! எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்கம்மா! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சிம்மா! நான் உபவாசத்துடன் போகலைன்னா இது நடக்குமா? நீங்கதானம்மா சொன்னீங்க “நீயும் வாழணும். பிறரையும் வாழ வைக்கணும்ன்னு!” 

பிரிஸ்கில்லாவின் மனம் ஆனந்தக் கடலில் மூழ்கியது. ஞானம்மாவின் விழிகளில் ஆனந்த கண்ணீர் விழுந்தது! எம்பெருமான் இயேசுவின் இதழ்களில் புன் முறுவல் நிலைத்தது!

இந்தக் கதை  நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Nilaa Kaayuthu - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download