கண்கள் உலகின் சாளரமாக கருதப்படுகின்றது. உலகில் நடப்பதை கவனிக்கவும், கற்றுக்கொள்ளவும், கவனம் செலுத்தவும், பார்க்கவும் கண்கள் நமக்கு உதவுகிறது. ஆனாலும், கண்கள் பாவத்திற்கு வழிநடத்துவதாகவும் இருக்கின்றது.
உலகம்:
கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை ஆகியவை உலகத்தினால் உண்டானவைகள் என யோவான் விவரிக்கிறார் (1 யோவான் 2:16). நாம் எதைப் பார்க்கிறோம் என்பது முக்கியம். நாம் ஏன் அல்லது எந்த நோக்கத்துடன் பார்க்கிறோம் என்பது தேவனால் மதிப்பிடப்பட்டு தீர்மானிக்கப்படுகிறது. தவறான எண்ணத்துடனும் கற்பனைகளுடனும் ஒரு பெண்ணைப் பார்த்தாலே விபச்சாரம் செய்ததாக கருதப்படுகிறது ( மத்தேயு 5:28).
சாதாரணமான பார்வை:
பரபரப்பான மாலில் கண்ணை மூடிக்கொண்டு நடக்க முடியாது. ஏதோ ஒன்று கண்களின் கவனத்தை ஈர்க்கும். அது ஒரு நவீன கேஜெட், விலையுயர்ந்த ஆடை, ஒரு பையன் அல்லது ஒரு பெண், உணவு, வாசனை திரவியங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது தவிர்க்க முடியாதது மற்றும் எதிர்பாராதது.
ஆசை பார்வை:
இரண்டாவது முறை பார்க்கும் பார்வை தான் ஆபத்திற்கு வழிவகுக்கும்; ஆம் அது ஆசை அல்லது பேராசையுடன் கூடிய பார்வையாக இருக்கலாம். மனம் சிந்திக்கத் தொடங்குகிறது, அதே போல் கண்களும் அந்தப் பொருளின் மீது கவனம் செலுத்துகின்றன. இது பல முறை நடக்கலாம். இதுதான் பாவச்சேற்றில் மூழ்கும்.
உரிமை மனப்பான்மை பார்வை:
உரிமை மனப்பான்மையுடன் பார்ப்பது என்பது ஒரு அப்பாவித்தனமான பார்வை அல்ல, ஆனால் அதன் பின்னால் ஒரு தீய எண்ணம் உள்ளது. அந்த நபர் தனக்கான உடைமை என்று எண்ணி உள்ளத்தில் மகிழ்வதாகும். அந்த பொருளை தனக்கென்று வைத்திருக்கும் எண்ணத்தில் ஒரு ரகசிய மகிழ்ச்சி இருக்கிறது.
பொறாமையுடனான பார்வை:
அந்த உடைமையை அடைய முடியாததாக இருக்கும் போது அல்லது வைத்திருக்க இயலாது அல்லது வாங்க முடியாத போது, நபரை பொறாமை ஆட்கொள்கிறது.
ஆணவ பார்வை:
நீதிமொழிகளில், "மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே" (நீதிமொழிகள் 21:4) என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அகந்தையான பார்வை ஜீவனத்தின் பெருமை, உரிமை மனப்பான்மை ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது.
மேட்டிமையான பார்வை:
உயர்ந்த மனப்பான்மையும் மற்றவர்களைப் பற்றிய தாழ்வான பார்வையும் கொண்ட ஒரு நபர் இந்த வகையான தோற்றத்தைக் கொண்டிருக்கிறார். ஒருநாள் எல்லாம் தாழ்த்தப்படும் (ஏசாயா 2:11).
இழிவான பார்வை:
மற்றவர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துவதற்குப் பதிலாக, ஏழைகள், நோயாளிகள், படிக்காதவர்கள் அல்லது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக மக்கள் இழிவாகப் பார்க்கப்படுகிறார்கள்.
வெளிப்படுத்தும் பார்வை:
கண்கள் நம்மை சோதனைகளுக்கும் பாவங்களுக்கும் ஆளாக்கும். இதயத்தின் பாவத்தையும் வெளிப்படுத்தலாம்.
கண்களோடே உடன்படிக்கை:
யோபு பாவம் செய்யாதபடிக்கு தன் கண்களோடு உடன்படிக்கை செய்தார் (யோபு 31:1).
நான் என் கண்களோடு உடன்படிக்கை செய்து கொண்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்