சொத்து தகராறில் அண்ணனை கொன்றதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஒருவர். அவர் சிறையில் அசைவ உணவை சாப்பிட மறுத்துவிட்டார், தான் ஒரு ஆன்மீகவாதி என்றும் இறைச்சி சாப்பிடுவதில்லை என்றும் கூறினார். ஆக அவரைப் பொறுத்தவரை, இறைச்சி சாப்பிடுவது ஒரு பாவம், ஆனால் அவரது கோபம், ஆத்திரம் மற்றும் கொடுமையாக சகோதரனைக் கொன்றது பாவம் அல்ல. முக்கியமாக, பாவம் என்பது தேவ இயல்புக்கு எதிரானது, அவருடைய சட்டத்திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு எதிரானது.
அக்கிரமம் பாவமே:
நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் (1 யோவான் 3:4). கடவுள் இல்லை அல்லது செயலற்ற கடவுள் என்று மக்கள் நினைக்கும் போது, அவர்கள் பிரமாணங்களைப் புறக்கணிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கடவுளும் இல்லை, அவருடைய தீர்ப்பும் இல்லை என்பது போல் நடந்து கொள்கிறார்கள். தனிநபர்கள் மட்டுமல்ல, சமூகங்கள், குழுக்கள் அல்லது நாடுகளும் கூட சட்ட விரோதமாக மாறக்கூடும். கணவன் இறந்தவுடன் மனைவியையும் சேர்த்து எரிக்கும் பழக்கமான ‘உடன்கட்டை ஏறுதல்’ என்ற முறைமையை சமூகம் அங்கீகரித்ததே, ஆனால் அது அக்கிரமம் அல்லவா. வேதாகமத்தில் கூட நியாயாதிபதிகள் காலத்தில், இஸ்ரவேலில், ஒவ்வொருவரும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் புறக்கணித்து, தாங்கள் நினைத்ததைச் செய்தார்கள் (நியாயாதிபதிகள் 21:25).
அநியாயமெல்லாம் பாவமே:
(I யோவான் 5:17) நீதி என்பது தேவனின் பார்வையில் எப்போதும் சரியானதைச் செய்வதாகும். சூழ்நிலை நெறிமுறைகள் என எதுவும் இல்லை, அங்கு ஒரு நபர் சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ள முடியும். அநீதி என்பது நியாயமற்றது மாத்திரமே. அதாவது அநீதி என்பது தேவனின் அதிகாரம், சித்தம், தராதரங்கள் மற்றும் அவருடைய தெய்வீக நோக்கம் ஆகியவற்றிலிருந்து வெளியே வருவதற்கான ஆசை.
அலட்சியமும் பாவமே:
பாவம் என்பது தெரிந்து, புரிந்து, நல்லதைச் செய்யும் திறனைக் கொண்டிருந்தும், ஆனால் அதை வேண்டுமென்றே செய்யாமல் இருப்பதாகும். “ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக்கோபு 4:17). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய வளங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைத்தும் பொறுப்பற்று நடந்துக் கொள்வதும் பாவமே.
தீய ஆசையும் பாவமே:
எல்லா விதமான தீய ஆசையும் பாவம் (ரோமர் 7:8). பூமியை நோக்கி எல்லாவற்றையும் இழுக்கும் ஈர்ப்பு விசையைப் போல, மனித இயல்பு பாவத்திற்கு ஆளாகிறது. எனவே, பொல்லாத ஆசைகளைக் கொல்லும்படி பவுல் எழுதுகிறார் (கொலோசெயர் 3:5-6). ஒரு விசுவாசி சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் பாவத்திற்கு மரித்து தன்னை ஒரு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும், இதனால் தீய ஆசைகளை மரணத்திற்கு உட்படுத்த வேண்டும் (மத்தேயு 16:24-26; ரோமர் 12:1).
அத்துமீறல் ஒரு பாவம்:
விசுவாசிகள் தங்கள் அக்கிரமங்களில் மற்றும் பாவங்களில் மரித்து போயிருந்தார்கள், அவர்கள் தேவனால் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள் என்று பவுல் எழுதுகிறார் (எபேசியர் 2:1). அது எல்லைகள் அல்லது வரம்புகளைத் தாண்டி அல்லது வழிதவறிச் செல்கிறது. ஒரு தடகள வீரர் பாதையை நிராகரித்து அடுத்த ஓட்டப்பந்தயப் பாதையில் ஓடினால், அது அத்துமீறலாகும்.
நான் பாவத்திலிருந்து மனம் வருந்தி கர்த்தராகிய ஆண்டவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்