தொடர் - 6
“என்ன சந்திரா! அப்படி பார்க்கிறே? பயமாயிருக்கா? “இவன் போட்ட காப்பி எப்படி இருக்குமோன்னு பயப்படுறையா? தைரியமா குடி. சத்யாவே சொல்லுவா நீங்க சூப்பரா காபி போடுறேங்கன்னு”. சிரித்தான் சார்லஸ்.
காபியை குடித்தான், “உண்மையாக சூப்பர் தாண்டா” என்றவன் மெளனமானான்.
“சந்திரா, உனக்கு எங்க வீடு வித்தியாசமா இருக்கா?” திடுக்கிட்டு நிமிர்ந்தவன் “சந்தோஷமா இருக்கடா சார்லஸ். எங்க வீடு இப்படி இல்லை.” ஏக்கம் அவன் சொல்லில் வழிந்தது. அவனே தொடர்ந்தான், “எப்பப்பார்த்தாலும் மேரி 'உம் முன்னுதான் இருப்பா. ரோஸியும் நவீனும் சண்டைதான். எனக்கு வீட்டல இருக்கவே பிடிக்காது. சீக்கிரமே கிளம்பிடுவேன். பிந்தித்தான் வீட்டுக்கு வருவேன்.”
“சந்திரா! நீ காலையில மேரிக்கு உதவியா வேலை செய்வையா ?””
'“செர்வன்ட் போட்டிருக்கேன்” பட்டென்று சொன்னான் சந்திரன்.
"இங்கேயும் பாத்திரம் விளக்க, வீடு கழுவ செர்வன்ட்தான்”. சரி நீ காலையில எப்ப எந்திரிப்ப? குடும்ப ஜெபம் இருக்கா? காலையில என்னதான் செய்வ?”
“வந்து....சார்லஸ் லேட்டா படுக்கிறேனா ?....சீக்கிரம் எழும்ப முடியலை. எந்திரிச்சு, டி.வி.நியூஸ் பார்த்து பேப்பர் படிச்சா நேரம் ஓடிருது. அப்புறம் ஆபீஸ் கிளம்ப சரியாயிடுது” மென்னு முழுங்கி குற்ற உணர்வோடு பேசினான். அதிகாலையில் எழும்பி மிஷின் போல வேலை செய்யும் மேரி அவன் கண்முன் தோன்றினாள்.
மரகதம்மாள், “மேரி ஸ்கூலுக்கும் போய் வேலை பார்த்து உனக்கு சம்பாதித்துத் தர்றால்ல. நீ அவனை எப்படி வைச்சிக்கணும் தெரியுமா? நீ அவளை நேசிக்கிறதே இல்லைன்னு நினைக்கிறேன்” என்று கூற,
“அப்படியெல்லாம் இல்லம்மா! அவன்தான் உம் ன்னு இருப்பா!”
“சந்திரா! குயிலின் சிறகை ஓடிச்சிவிட்டு அதப் பாடச் சொன்னா...எப்படிப்பாடும்? மயிலின் காலை ஒடிச்சிட்டு நடனம் ஆடச் சொன்னா....எப்படி ஆடும்? நான் நினைக்கிறேன். நீங்க யாருமே அவளுக்கு உதவி செய்யறது இல்லை. சரியா ?” சார்லஸ் கூற,
“ஆரம்பத்தில இருந்து அவ தானாவே செய்தா சார்லஸ். எங்கள பழக்கல. பாரேன் ஆனந்த், ஜான் ஆண்பிள்ளைகளாயிருந்தாலும் வீட்டி" வேலை செய்யறாங்க. ஆனா ரோஸிகூட ஒரு வேலையும் செய்யமாட்டா. இவதானே பழக்கியிருக்கணும்.'” குற்றம் சாட்டினான் சந்திரன்.
“உண்மைதாண்டா மேரி பழக்கியிருக்கணும். மேரி உங்களையெல்லாம் கண்மூடித்தனமா நேசிச்சிட்டா....தானே இழுத்துப் போட்டு செஞ்சிருக்கா. ரோஸி நல்லா படிக்கட்டும்ன்னு வேலை வாங்காம இருந்திருப்பா ஆனா...வயது ஆக,ஆக அவளால முடியலை. மொர்டிகுலேஷன் ஸ்கூல்ல வேற வேலை பார்க்கிறதுனால அங்கேயும் சக்கையா பிழிஞ்சிடுவாங்க. ஆக மேரி வேலையிலேயே அழிஞ்சிகிட்டு இருக்கா. நீ வாலிபத்தில் செய்த வேலையை இப்ப உன்னால் செய்ய முடியுதா? அவ உடம்பு மட்டும் என்ன இரும்பா? இரும்பு கூட தேயும் தெரியுமா? அன்புன்றதும், பாசம்ன்றதும் சொல்லில் இல்ல. செயலில் இருக்கு. சத்யா வேலைக்குப் போகலை. ஆனாலும் எல்லோரும் வேலை செய்யுறோம். குறித்த நேரத்தில் எல்லா வேலையும் முடிஞ்சிருது. சந்தோஷம் இருக்கு சுகமும் இருக்கு. அதிகப்படியான வேலையால் மேரியின் சரீரம் களைப்படையுது. நீ காலையிலே சோம்பேறியா நேரத்த போக்குறதுனால நம்மீது கரிசனை காட்ட ஒருவருமே இல்லையேன்ற கவலையில அவ மனசு ஒடிஞ்சு போயிருக்கா. இதை இப்படியே நீ விட்டுட்டா ஒண்ணு அவ நோயாளியாவாள் அல்லது பைத்தியம் ஆவாள்.”
"சந்திரா! இப்படித்தான் கிறிஸ்டின்னு ஒரு பொண்ணு இருந்தா. வீட்டின் ஒட்டு மொத்த வேலையும் அவதான் செய்வா. ஓய்வே இல்லை. அவ ஹஸ்பெண்ட் நீட்டா டிரஸ்பண்ணிகிட்டு ஊரைச் சுத்துவான். காலம் கடந்தது. கிறிஸ்டிக்கு ஸ்டோக் வந்து, வலது கால், வலது கை வரலை. படுக்கையாயிட்டா. கிறிஸ்டி அழுதா பக்தியுள்ள பொண்ணுதான். கடவுள்ட்ட மன்றாடுனா "தன்னை எடுக்கச் சொல்லி, கடவுள் எடுக்கலை. படுக்கையிலே போட்டுட்டார். ஒட்டு மொத்தமா...அவளை பராமரிப்பதிலிருந்து எல்லா வேலைகளைச் செய்வதும் அவ ஹஸ்பெண்ட் மேல விழுந்தது. ஊரைச் சுத்தினவர் வீட்டோட அடைஞ்சு கிடந்து வேலை செய்தார். நிறைய பணம் செலவழித்தார். பிஸியோதெரபி டாக்டர் வந்து பயிற்சி எல்லாம் கொடுத்தாங்க. அந்தம்மா கொஞ்சம் நடந்துகிட்டாங்க, ஆனா....அந்தம்மாவை பராமரிப்பது, சமையல் செய்வது எல்லா வேலையும் அவரே செய்தார். ஒரு மாதம் இரு மாதம் அல்ல, ஏழுவருடங்கள். கணக்கு முடிக்கும் தேவன் நம் தேவன்.” என்று மரகதம்மாள் கூறவும்.
“ஏம்மா! சந்திரனுக்கு பயங்காட்டுறேங்களா?” என்று கூறி சார்லஸ் சிரித்தான். பின் “சந்திரா இல்வாழ்க்கையை இன்பச் சோலையா உருவாக்குவதும், அல்லது துன்ப வனாந்தரமா வடிவமைப்பதும் நம்ம கையிலதாண்டா இருக்கு. சத்யா வீட்ல இருக்கிறதுனால மாலை டிபன் செய்றா. மேரி 6 மணிக்குத் தானே ஸ்கூல்ல இருந்தே வருவா. அவளால் என்ன செய்ய முடியும்? வீட்ல பழங்கள் வாங்கி வை. பிஸ்கட், கடலை, கார வகைகள் வாங்கி வைச்சைன்னா...நீயும் உட்கார்ந்து, எல்லோருமா சாப்பிட்டு காபி குடிச்சு, பேசிச் சிரிச்சாலே பெலனா இருக்கும். அப்புறம் இரவு உணவு தயாரிப்பது அவளுக்குப் பாரமா இருக்காது புரிந்ததா ?”
“கிறிஸ்து சபையில் அன்பு கூர்ந்ததுபோல கணவன் மனைவியை நேசிக்கணும்ன்னு வேதம் சொல்லுது.”
கிறிஸ்து சபையில் எப்படி அன்பு கூர்ந்தார்? தன்னையே தந்தார். மேலும் பவுல், மனைவியை தன் சொந்த சரீரமாகப் பாவித்து அவளிடம் அன்பு கூற வேண்டும் என்று எழுதுகிறார், நீ எப்படி அன்பு செலுத்தறன்னு நீயே யோசித்துப்பார்.'” என்று சொன்ன மரகதம்மாள் சற்று நேரம் நிதானித்தாள். பின் அவரே தொடர்ந்தார், தாம்பத்திய உறவு என்பது வருடம் ஆக ஆக ஆழப்படும். உறுதிப்படும். நாளுக்கு நாள் வளரும் உறவுப்பா! ஆரம்ப காலம் ஆனந்தக் கூத்தாடுவதும், வயது போன காலத்தில் கண்ணீரின் பள்ளத்தாக்கில் காலம் கழிப்பதும் அல்ல. இறைவன் நம்மை அழைக்கும்வரை, இன்பத்திலும், துன்பத்திலும் பின்னிப் பிணைந்து ஒருவருக்காக ஒருவர் வாழ்வது, புரிந்ததா?”
“புரிந்தது அம்மா! என் கண்களைத் திறந்துட்டீங்க. மற்றவர்களிடம் குறையைப் பார்த்த என்னை, என் குறையைப் பார்க்க வைச்சிட்டீங்க.””
“வாழ்க்கைப் பயணத்தில் நண்பர்கள் வருவார்கள். போவார்கள் குறிப்பிட்ட காலத்தில் பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படறோம். குறிப்பிட்ட வயது வந்ததும் பிள்ளைகள் நம்மை விட்டு பிரிந்து போறாங்க. ஆனா நம் துணை”... என்ற சார்லஸை இடைமறித்தான்.
“கடவுள் கொடுத்த காலம் வரை நம்மோட பிரியாம இருக்காங்க. அதனாலதான் அவங்களுக்குப் பேரு வாழ்க்கைத்துணை,'” சிரித்தான். பின் அவனே தொடர்ந்தான்.
“சரி, சார்லஸ் நான் ஏழு மணிக்கு கிளம்பறேன்.
“ஏண்டா, எங்கமேல கோபமா? ஞாயிறுதானே புறப்படுவேன்னு சொன்ன... ?
“அண்ணனுக்கு வீட்டு ஞாபகம் வந்திட்டது. அண்ணியைப் பார்க்க ஒடுறாங்க. சரி தானே” எனக் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் சத்யா.
சிரித்தான் சந்திரன்.
மறுநாள் காலை தன்வீட்டை அடைந்த சந்திரனை அடைத்த கதவு வரவேற்றது. கதவைத் தட்டாமல் ஜன்னல் வழியே உள்ளே பார்க்கலாம் என்ற நினைவில் ஜன்னல் அருகே சென்றான். விசும்பல் ஒலியுடன் ஜெபசத்தம் கேட்டது. காதை கூர்மையாக்கினான். “இயேசப்பா! இந்த உலகத்தில என்மீது கரிசனை காட்ட யாருமே இல்லையென்றது உனக்குத் தெரியும்லப்பா. என்னைய படுக்கையில போட்டுடாதே எப்ப வேணாலும் உம்மகிட்ட அழைச்சிக்கங்கப்பா ஆனா.... சுகமில்லைன்னு படுக்கையில போட்டுடாதப்பா....” விம்மினாள்.
அதற்கு மேல் அவனால் கேட்க முடியவில்லை கதவைத் தட்டினான். கதவு சற்று தாமதமாகத் திறக்கப்பட்டது.
“என்னங்க, நாளைக்குத்தான வருவேன்னு சொன்னீங்க?” ஆச்சரியமாகக் கேட்டாள். அவளுக்கு பதில் சொல்லாமலேயே “பிள்ளைகள் எங்க மேரி?” அக்கரையாய் விசாரித்தபடி சோபாவில் வந்து அமர்ந்தான்.
“ரோஸி, அவ ப்ரண்டு வீட்டிற்கு போயிருக்கா. ஏதோ ரெபரன்ஸ் புக் பார்க்கணுமாம். நவீன் என்.சி.சி கிளாஸ் போயிட்டான்.” என்றாள்.
“உட்கார் மேரி” கையைப்பிடித்து தன் அருகில் உட்கார வைத்தான். மேரிக்கு சந்தேகம் 'கனவுதான் காண்கிறோமா?” என நினைத்தாள்.
அவளது வலது கையைப்பிடித்தவன் அப்படியே கடந்த கால நினைவுகளில் மூழ்கினான். இருபதாண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தில் அவள் கையை பிடித்தபோது புத்தம் புது ரோஜா இதழைத் தொட்டது போல் உணர்ந்தான். “என்ன மெதுவா இருக்கு? வழுவழுன்னு இருக்கு மேரி. என்று அவளிடம் அவன் கூறியது நினைவில் எழுந்தது. அழகிய மலராய் அவனுக்கு அர்ப்பணம் ஆனாளே, அதே மேரிதான் இவள்....ஆனா... இப்ப ஒட்டிய கன்னங்கள் மெலிந்த சரீரம்... உற்சாகமற்ற சோகப்பார்வை... .இவள் வயதில இருக்கிற எல்லோருமே இப்படியா உருக்குலைந்து போயிருக்காங்க... இல்லையே... அப்படின்னா இதற்குக் காரணம்... சார்லஸ், சொன்னது போல நான் தான். இனியாவது நான் தவறு செய்யக்கூடாது.” அவன் மனதிற்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டிருந்தான்.
“என்னங்க, என்ன யோசிச்சிகிட்டு இருக்கேங்க?” அவனை நனவுலகுக் கொண்டு வந்தாள் மேரி. “டிபன் என்ன மேரி?”
“நீங்க இன்னுமா சாப்பிடலை?” கேள்வியையே பதிலாக்கினாள்.
ஊகூம்... உன்னோட சேர்ந்து சாப்பிட ஆசை, மாவு இல்லைன்னா... சேமியா இருக்கும்ல. கிச்சடி செய் இரண்டு பேரும் சாப்பிடுவோம்.” சொன்னவனை தன் விழிகள் அகல விரியப் பார்த்தாள். அவளுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். “மேரி! ரொம்ப மெலிஞ்சிட்ட மேரி. இனிமேல் நீ என் கூடத்தான் சாப்பிடணும்” அவளை மெல்ல அணைத்தான்.
தன் கண்ணீருக்கு தேவன் பதிலளித்துவிட்டார் என நம்பினாள். இப்பொழுதும் அவள் விழிகள் கலங்கின. இது ஆனந்தக் கண்ணீர்.
இதன் தொடர்ச்சி அணைகின்ற தீபமா? என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.