ஒரு விசுவாசி தொலைதூரத்தில் உள்ள ஒரு அரசு நடத்தும் கல்லூரியில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். அது ஆணும் பெண்ணும் இணைந்து படிக்கும் கல்லூரியாக இருந்தது. விரிவுரையாளர் வந்து பார்த்தபோது, ஆண் பிள்ளைகள் மட்டுமே இருந்ததையும், பெண்கள் வராததையும் கண்டார். ஏனென்று விசாரித்த போது பெண் பிள்ளைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பது தெரியவந்தது, ஆகையால் பெண்கள் கல்லூரிக்கு வருவதை நிறுத்தினர். அதாவது அந்த கட்டிடத்தில் ஒரு பகுதி மூன்று குழுக்களால் பயன்படுத்தப்பட்டது. அங்கு மூத்த வயதினர் குழு வருவதும், ஊர்வம்பு பேசுவதுமாக இருப்பார்கள். மற்றொரு நடுத்தர வயதுக்காரர் குழு சீட்டு விளையாடுவதும் மற்றும் குடிப்பதும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். மூன்றாவது குழு இளைஞர்கள், பிற நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது படிப்பை பாதியிலேயே நிறுத்தினவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இப்படி சூழலில் புதிய விரிவுரையாளர், பெண்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாகத்திடம் பேசினார். அதற்கு அவர்கள் சிரித்தபடி; "உயிரைக் காப்பாற்ற விரும்பினால், அமைதியாக இரு" என்றனர். இருப்பினும், கிறிஸ்தவ விரிவுரையாளர் தேவன் தன்னை ஏதோ செய்ய அனுப்பியதாக உணர்ந்தார்.
புத்திசாலித்தனமான உத்தி
படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களுடன் விரிவுரையாளர் நட்பு வைத்து அவர்களுடன் பேசினார். அவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தது. உடனடியாக அவர் கால்பந்து விளையாட்டைத் தொடங்கி அவர்களுடன் விளையாடினார். விளையாட்டை உத்தியோகமாக மாற்ற முடியும் என்றார். சுமார் 30 சிறுவர்கள் தினமும் காலையில் அவரிடம் உடற்பயிற்சி மற்றும் கால்பந்து பயிற்சி செய்ய வரத் தொடங்கினர். சமயம் பார்த்து அவர் அவர்களிடம்; “உங்களுடைய சகோதரிகளில் ஒருவர் கல்லூரிக்கு வரும்போது துன்புறுத்தப்பட்டால், நீங்கள் அமைதியாக இருப்பீர்களா?” என்றார். அது அவர்களை சிந்திக்க வைத்தது. பின்னர் அவர்களில் 30 பேர் சென்று நடுத்தர வயதுக் குழுவிடம், “இன்றே உங்கள் கடைசி நாள், இனி சீட்டாட்டம் மற்றும் குடிப்பதற்கு இங்கு வர வேண்டாம்” என்று கூறினார்கள். அவர்கள் திகைத்து போனார்கள், ஆனால் உறுதியான மற்றும் தைரியமான இளம் வாலிபர்களைக் கண்டு அவர்கள் திரும்பி வரவில்லை. புறணிகதை பேசும் குழுவும் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த மாணவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று தங்கள் பெற்றோரிடம் தங்களை கல்வி கற்க அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். சில ஆண்டுகளில், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்களை கல்வி நிறுவனம் உருவாக்கியது.
முன்னோக்கி செல்
மோசே இஸ்ரவேலரை வழிநடத்தியபோது; "கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு" (யாத்திராகமம் 14:15) என்றார். அது அழுவதற்கான நேரம் அல்ல, மாறாக முன்னேறுவதற்கான நேரம். ஆம், எப்போது ஜெபிக்க வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும், எப்போது செயல்பட வேண்டும் என விசுவாசிகளுக்கு பகுத்தறிவு தேவை.
எனது சூழல்களில் நான் விசுவாசத்தைக் கொண்டு ஆக்கப்பூர்வமாக ஈடுபடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்