கோடைக் கதிரவனின் வெம்மைக் கதிரைத் தடுத்து நின்றிருந்தது, அந்த அடர்ந்த வேப்பமரம். அம்மரத்தின் அருகில் கட்டம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனார்களும், சித்தாள்களும் தங்கள் மதியவுணவிற்காக வழக்கம் போல் அம்மரத்தடியில் கூடினர்.
எல்லோரையும் விட்டு, சற்று ஒதுங்கி அமர்ந்திருந்தது ஒரு ஜோடி. அவர்கள் ஜோசப்பும் மரியாளும் தான். ஜாடிக்கேற்ற மூடி என்பார்களே, அதே போல் பொருத்தமான ஜோடி.
“ஜோசப்பு வாய்க்கும், கைக்கும் சண்டை பலமா நடக்குதே! மூச்சு விட்டுக்கிட்டு சாப்பிடு” என்று கூறிச் சிரித்தான் ரங்கன்.
“அண்ணே! மரியா நேத்து வைச்ச கருவாட்டு குழம்புண்ணே! எம்மா ருசி தெரியுமா? அதான் வேகமா சோறு உள்ள போகுது” முத்துப்பற்கள் வெளியே தெரிய ஜோசப்பும் சிரித்தான்.
“மரியா தொட்டுக் கொடுத்தா பச்சத் தண்ணிகூட ஜோசப்புக்கு இனிக்கும்” என கோதை கிண்டல் செய்ய, மரியாவின்செந்தாமரை வதனம் செஞ்சாந்து பூசியது போல் சிவந்தது. மறுகணம் அவள் விழிகள் எதிர் வரிசையில் சற்று தள்ளி அமைந்திருந்த அந்த பங்களாவின் மேல் மாடிக்குத் தாவியது அவள் எதிர்பார்த்தபடியே அந்த போர்டிகோவை ஒட்டியிருந்த சாளரத்தினின்று இரு கருவிழிகள் இவர்களை நோக்கிக் கொண்டிருந்ததைக் கண்டாள். அனுதினமும் அவள் காணும் விழிகள்தான்.
“மச்சான்” மெல்ல அழைத்தாள்.
“என்ன மரியா? சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.
“கோயில் பிரதிஷ்டைக்கு கோதையக்கா வச்சிருக்கிற பாலிஸ்டா் பட்டுதானே எடுத்துத்தரப்போற” ஆவலாக நோக்கினாள்.
காலைக் கமலமென மலர்ந்திருந்த அவன் வதனம் அதிகாலைக்குவளையெனக் கூம்பியது. ஓர் நிமிட மெளனம் குடிகொள்ள.
“மரியா! நீ கேட்டதை வாங்கிக் கொடுக்க எனக்கு ஆசைதான். அந்த மயில் கழுத்து கலர் சேலை ஒனக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா அது வெல 650 ரூபா. எங்கிட்ட 300 ரூபாதான் இருக்கு” அவன் சொற்களில் சோகம் ஒலித்தது. இதுவரை தேவாமிர்தமாக ருசித்த உணவு அவனுக்குத் தொண்டையை விட்டு இறங்க மறுத்தது.
கிறிஸ்துமஸ்க்கு அந்தச் சேலை வேண்டுமெனக் கேட்டாள். அவன் சாமி உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு வாங்கித் தாறேன்னு சொல்லி சாதாரண சேலை ஒன்று எடுத்துக்கொடுத்தான். ஈஸ்டர் சமயம் அவனுடைய அம்மாவிற்கு மருத்துவச்செலவு அதிகம் ஆகிவிட்டது. கோயில் பிரதிஷ்டைக்கு எடுத்துத் தருவதாகக் கூறினான். இப்பொழுதும் இல்லை என்பதை நினைக்கும்போது மரியாவின் விழிகளில் புரண்டது கண்ணீர் வெள்ளம். இமை அணைபோட்டுத் தடுத்தாள். அவளுக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது கட்டட வேலையில் அனைவரும் ஈடுபட்டிருந்தனர். இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந்தான் ஜோசப். அவன் மனத்திரையில் அவன் வாழ்க்கையே திரைப்படமாக ஓடியது. குடித்துக் குடித்துக் தன்னையே அழித்து கொண்ட அவன் தகப்பன், குடும்பச் சொத்தான வீட்டின் மேலே கடனை எற்றி வைத்துவிட்டு இந்த உலகை விட்டே போய் விட்டான் உடலும் உள்ளமும் நலிந்த தாய், நோய் வாய்ப்பட்டு படுக்கையிலே விழுந்துவிட்டாள். குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவர கரண்டியை பிடித்துவிட்டான் ஜோசப்.
தன் ஒரே தங்கையை கஷ்டப்பட்டுக் கடன் வாங்கி, வசதியான இடத்தில் திருமணம் செய்து கொடுத்தான். என்னதான் பாடுபட்டாலும், செலவினங்களும் கூடிக்கொண்டே வந்தன. சாண் ஏறினால் முழம் சறுக்கும் அவன் வாழ்க்கை, அவனுக்கே வெறுப்பாக இருந்தது. இந்நிலையில் அவனது பாலைவன வாழ்வைச் சோலைவனமாக மாற்ற வந்தாள் மரியா. அவனோடு சேர்ந்து உழைத்தாள். அன்பை மழைபோல் அவன்மீது சொரிந்தாள். தாயைப்போல் கவனித்தாள் தன் மாமியாரை. அறுசுவை உணவு இல்லாவிடினும் வயிறார உண்டு வந்தனர். கடன் சுமையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது.
திருமணமாகி இந்த மூன்றாண்டுகளில் எதையுமே கேட்காத மரியா இப்பொழுது கேட்கிறாள். ஜோசப் திரும்பி மரியாவைப் பார்த்தான். சோகமே உருவாக செங்கல் சுமந்து கொண்டிருந்தாள்.
மேற்கே கதிரவன் சாய ஆரம்பித்தான். மரியாவின் விழிகள் எதிர்வீட்டு மாடிக்குத் தாவின.
முழுநிலவு போர்டிகோவில் தோன்றியது. மரியாளைவிட மூன்று, நான்கு வயது பெரியவளாயிருப்பாள். அழகே உருவான அவள் உடலை ஆபரணங்களும் அலங்கரித்தன. ஒற்றைப் பின்னலிடடு. தலைநிறைய மல்லிகைப்பூ சூடியிருந்தாள். பளபளவென மின்னிய அவள் சேலை மிக விலையுயர்ந்தாக இருக்கும். அவளைப்பார்த்த மரியா பெருமூச்சுவிட்டாள்.
“என்ன மரியா அசந்து நின்னுட்ட, முடியலையா? அதோ காண்ட்ராக்டர் வர்ராரு... சீக்கிரம்”. கோதை விரைவுபடுத்த, செங்கல் தட்டைத் தூக்கினாள் மரியா.
“சனியன் தூங்கித் தொலையேன்” சிடுசிடுத்தவளாக, அழுது கொண்டிருந்த தன் ஒன்றரை வயதுப் பாலகனை தொட்டிலிட்டு ஆட்டினாள்.
“மரியா! அவனுக்குப் பசியோ என்னவோ?” ஜோசப்பின் தாய் கூற, “நீங்க சும்மா கெடங்க. எனக்குத் தெரியும்” எரிந்து விழுந்தாள். வழக்கத்திற்கு மாறாகத் தன் மருமகளின் வார்த்தைகள் அந்த வயதான அம்மையாரை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது. பேசாமல் சுருண்டு படுத்துக்கொண்டாள்.
முழுநிலவு வானில் பவனி வரத் தொடங்கியது. வெளித் திண்ணையிலே அமர்ந்திருந்த மரியா அந்த நிலவைப் பார்த்தாள். மாடிவீட்டு நிலவு அவளுக்கு நினைவு வந்தது.
“என்ன மரியா? கன்னத்திலே கை வைச்சு உட்கார்ந்திட்ட! பக்கத்து வீட்டு பாக்கியமக்கா பரிவுடன் விசாரித்தபடி அவளருகே வந்து அமர்ந்தாள். மரியாவின் விழிகள் கலங்கியிருந்ததைக் கண்டாள்.
“என்ன மரியா? என்ன விஷயம்?” ஆதரவாகக் கேட்டாள்.
“அக்கா! பிறந்தா பணத்தோட பிறக்கணும். ஏழையா மட்டும் இந்த உலகத்திலே இருக்கக்கூடாது!” விரக்தி அவள் வார்த்தையில் விளையாடியது.
“பணமிருந்தால் வாழ்க்கை நிறைஞ்சுடுமுன்னு நினைக்கிறையா? நீ பாரதி தெருவிலே தானே இப்ப வேலைக்கு போற, அந்த தெருவிலே “ஆனந்த பவனம்” என்ற ஒரு பங்களா இருக்குல்ல” என பாக்கியமாக்கா ஆரம்பிக்கவும், மரியா தன் விழிகளை அகல விரித்தாள். அவளது அபிமான முழுநிலவு தோன்றும் இல்லம் அல்லவா அது!
“அங்க ஒரு அழகான பொண்ணு இருக்கு என்னக்கா?” அவசர அவசரமாகக் கேட்டாள்.
ஆனந்த பவனத்திலிருக்கும் அந்த அழகான பொண்ணுக்கு வாழ்க்கையிலே ஆனந்தமே கிடையாது தெரியுமா?”
“ஏக்கா? ஏன்? அவங்க எப்பவும் நகையோட, அழகான புடவையோட, பூ வைச்சு தினம் மாடி மேலே நிப்பாங்களே! அவங்களைப் பார்த்தா கவலைப்படற மாதிரி தெரியலை!” அப்பாவியாகக் கேட்டாள்.
“மரியா! எவ்வளவுதான் தகப்பன் வீட்டிலிருந்து கொண்டு வந்தாலும், திருப்தியடையாத மாமியார், எல்லாக் கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகி, அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காத புருஷன், பணம் ஒண்ணே குறியாக அலையற மாமனார், இவளைக் குறித்து குத்திக் குதறிப்பேசும் நாத்தனார். இத்தனை கொடுமையின் மத்தியில்தான் அவ மாமியார் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அலங்கரிச்சிக்கிறா! வெளி உலகத்துக்கு இவளை நல்லா வச்சிக்கிறதாத் தெரியணுமில்லையா? திருமணமாகி ஏழு வருஷம் ஆச்சி. குழந்தையுமில்லை...” பெருமூச்சு விட்டாள் பாக்கியம்.
“இதெல்லாம் எப்படிக்கா உங்களுக்குத் தெரியும்?
“நான் இப்ப ஆனந்தபவனில்தான் வேலை செய்றேன். அதுதான் ரொம்ப நாழியாகி வீடு திரும்பறேன். நேற்று வீட்டில் யாருமில்லை. அந்தப்பொண்ணு எங்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருந்துச்சு. அப்ப என்ன சொல்லிச்சு தெரியுமா. எதிர்ல்ல கட்டட வேலை செய்றா! அவளை பார்க்கிறப்ப எனக்குப் பொறாமையா இருக்கு. அழகா இரண்டு பேரும் சைக்கிள்ல வந்து இறங்குறாங்க! நல்லா உழைக்கிறாங்க! மதியம் ஒண்ணா உட்கார்ந்து சிரிச்சுப்பேசி சாப்பிடுறாங்க! சாயந்தரம் ஒண்ணா சைக்கிள்ல ஜாலியாப் போறாங்க!.. அக்கா! பணம் வேண்டாம்! படிப்பு வேண்டாம்! நகை வேண்டாம்! அன்பான கணவன் அன்பான கணவன்! சந்தோஷமான சமாதான வாழ்க்கை! இதுதான் வேணும் இல்லையக்கா!”” என்று சொன்னபோது அது கண் கலங்கிடுச்சு.
நான் ஆறுதலாகப் பேசினேன் “சேசுசாமிகிட்ட கேளு. அவரு உன் கணவரையும் மாற்றுவார். உனக்குக் குழந்தையும் தருவாருன்னு சொல்லிட்டு வந்தேன். இப்பத்தெரியுதா? வாழ்க்கைக்கு எது வேணுமின்னு!” என்று பாக்கியம் கூற ஜோசப் சைக்கிளில் வந்து இறங்கினான். மரியாவைக் கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டு வெளியே போனவன் இப்பொழுதுதான் வருகிறான்.
“வா ஜோசப்பு! மரியா..... நேரமாகுது நா போயிட்டு வாறேன்” என்று கூறிவிட்டுப் போய்விட்டாள் பாக்கியம்.
“எங்க போயிருந்த மச்சான்?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்றாள் சாப்பாடு பரிமாறினாள்.
“நாளைக்குக் கடைக்குப் போவோமா? நீ கேட்ட சேலை வாங்க” உற்சாகமாக சிரித்துக் கொண்டே கேட்டான் ஜோசப்.
திடுக்கிட்டு நிமிரந்த மரியா “பணம் ஏது மச்சான்” படபடப்புடன் கேட்டாள்.
“அதுக்குத்தான் போயிருந்தேன். காண்ட்ராக்டர் காலையிலே 400ரூபா தாறேன்னார்!”
“வேண்டாம் மச்சான்! இருக்கிற கடன் போதும்! அதைக் கட்ட வழி பாப்போம்! ஆண்டவர் நமக்கு நெறைய ஆசீர்வாதம் தந்திருக்கார். அதுல திருப்தியா இருப்போம்!” மகிழ்ச்சியுடன் கூறிய மரியாவையே கண் கொட்டாமல் பார்த்தான் ஜோசப்
வாழ்க்கைக்கு எது தேவை என்பதையுணர்ந்த மரியாவின் உள்ளத்தில் ஏக்க அலைகள் இல்லை! இதயமென்ற இன்ப சாகரத்தில் ஆனந்த அலைகளே அலைமோதின!.
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.