கல்லூரியில் படிக்கும் பெண்ணுக்கு போதகர் (pastor) என்ற வார்த்தையே அலர்ஜியாக இருந்தது. அவளும் அவளுடைய சகோதரனும் போதகரோடு சம்பந்தப்படும் அனைத்தையும் எதிர்த்தனர். அதற்கான காரணத்தை ஆராய்ந்த பிறகு தான் தெரிந்தது, அவர்களின் தந்தை ஒரு போதகராக இருந்ததும், பின்பதாக அவர் தனது மனைவியையும் குழந்தைகளையும் கைவிட்டு, வேறொரு பெண்ணுடன் இணைந்து விட்டார், மேலும் அவரது ஊழியத்தையும் இழந்தார். துரதிர்ஷ்டவசமாக, போதகர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையிலும் ஊழியத்திலும் தோல்வியுற்றதைப் பற்றிய அதிகமான தகவல்கள் தொடர்ந்து வருகின்றன. “மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது” (எரேமியா 10:21).
ஆவிக்குரிய ரீதியாக முட்டாள்:
தெய்வீகம் என்பது ஒரு கிறிஸ்தவ தலைவரின் அடையாளம். இதன் பொருள் என்னவென்றால் தேவனுடன் நெருங்கி நடப்பதும், வேதத்தை தியானிப்பது ஞானத்தைப் பெறுவது, ஊக்கமாக ஜெபிப்பதும், பரிசுத்த ஆவியின் உதவியுடன் நேரங்களை பகுத்தறிந்து பயன்படுத்துவதும் ஆகும்.
ஒழுக்கமின்மை:
தெய்வீகம் இல்லாதபோது, ஒழுக்கக் குறைபாடுகள் ஏற்படும். அதிகாரத்தாலும் பெருமையாலும் கண்மூடித்தனமாக இத்தகைய தலைவர்கள் எந்த வெட்கமும் இல்லாமல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகிறார்கள். அது ஒழுக்கக்கேடான உறவுகளாகவும், நிதியில் நேர்மையின்மையாகவும், ஊழிய அழைப்பை மீறுவதாகவும் இருக்கலாம்.
முட்டாள்தன மனம்:
பாவிகளின் மனதை சாத்தான் குருடாக்குகிறான் (2 கொரிந்தியர் 4:4). தேவனுடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும், உலகத்தின் போக்குகள் மற்றும் மரபுகளிலிருந்து விலகியிருப்பதன் மூலமும் தினசரி தங்கள் மனதைப் புதுப்பிக்க விசுவாசிகள் விழிப்புடன் இல்லாதபோது, அவர்கள் முட்டாள்களாகிறார்கள் (ரோமர் 12:2). ஏனெனில் அவர்கள் தேவனுடைய சித்தத்தை பகுத்தறிந்து அதைச் செய்யும் திறனை இழக்கிறார்கள்.
மந்தமான இருதயம்:
முட்டாள் மேய்ப்பர்களும் மந்தமான உள்ளம் கொண்டவர்களாக மாறுகிறார்கள், அது கடின இதயம் என்று அர்த்தம் அல்ல. அவர்கள் மற்றவர்களிடம் உணர்ச்சியற்றவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் மேய்ப்பர்களாகப் பதிலளிக்க வேண்டும் என உணர்ந்திருக்கிறார்கள், ஆனால் பதிலளிப்பதற்கான உள் வலிமையும் சகிப்புத்தன்மையும் இல்லை. அவர்கள் தேவனுடைய ஆவியைப் புறக்கணித்ததால், ஊழியம் செய்ய அவர்களுக்கு ஆவிக்குரிய பலம் இல்லை.
கர்த்தரிடம் விசாரிக்கத் தவறுதல்:
ஜெபமின்மை வல்லமை இழக்க வழிவகுக்கிறது. தேவனைத் துதிப்பதும் ஆராதிப்பதும் ஒரு சாதாரண, இயந்திர முயற்சியாகிறது. துதி செய்வதிலும் ஆராதனையிலும் மகிழ்ச்சி இல்லை. எனவே, நன்றியுடன் இருப்பது ஒரு அணுகுமுறை மற்றும் பழக்கம் அல்ல. பரிந்து பேசுதல் என்பது ஊழியத்தின் மறக்கப்பட்ட அம்சமாகும்.
சிதறல்:
அதன் விளைவு ஆடுகள் சிதறுகிறது மற்றும் ஒன்று கூடுவது இல்லை. பல எளிய மக்கள் ஏமாற்றப்பட்டு அழிக்கப்படுகிறார்கள்.
நான் முட்டாள் மற்றும் மந்தமான இருதயம் கொண்டவனா? சிந்தித்து மனந்திரும்புங்கள்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்