சமீபத்தில், 1500 ஆண்டுகள் பழமையான சுருள் ஒன்றைக் காட்டும் வீடியோ வைரலானது. அதன் தலைப்பு இப்படியாக இருந்தது; “எஸ்தரின் அசல் புத்தகம் சமீபத்தில் ஈரானில் வாழ்ந்த ஒரு யூதரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அழகு என்னவென்றால் அதில் எல்லாமே தூய தங்கத்தால் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது”. இப்படி தகவல்கள் வெளியானதும் அது குறித்து அநேக சந்தேகங்கள் எழும்பியது; இதெல்லாம் உண்மையா பொய்யா அல்லது உண்மையாகவே எல்லாம் இருக்கிறதா மற்றும் உண்மையில் எஸ்தரின் புத்தகமா?
வரலாற்றின் 'பொற்காலம்' என சொல்லப்படுவதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் உருவகங்கள் உள்ளன அல்லது குறிப்படத்தக்க நிகழ்வுகளை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். இருப்பினும், ஒரு சுருள் அல்லது வெறும் பொன் எழுத்துக்கள் கொண்ட புத்தகம் அல்லது தங்கத் தூசி கலந்த மை ஆகியவை எந்த விதத்திலும் பயனளிக்காது. தங்கம் விலையேறப்பெற்றதாகவும் மிகவும் விலையுயர்ந்ததாகவும் கருதப்படுவதால், அத்தகைய புத்தகங்கள் அல்லது சுருள்கள் பொதுவான பயன்பாட்டிற்காகவோ அல்லது தினசரி பயன்பாட்டிற்காகவோ இருக்காது. இது அழகுசாதன நோக்கங்களுக்காக அல்லது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காக மட்டுமே இருக்க முடியும்.
தாவீது ஒரு செல்வாக்கான அல்லது அதிகாரமிக்க ராஜா, அவன் தங்கத் தட்டில் சாப்பிடலாம், தங்கக் கோப்பைகளில் குடிக்கலாம், தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தங்க கிரீடம் அணிந்திருக்க முடியும். ஆனாலும் இவற்றைப் பெரியதாகவோ மதிப்புமிக்கதாகவோ அவன் காணவில்லை. அதற்குப் பதிலாக, அவன் எழுதினான்; “அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது" (சங்கீதம் 19:10). ஆம், தாவீது தேவனுடைய வார்த்தையை நேசித்தான், தங்கத்தைவிட அதிகமாக அதை விரும்பினான். பொதுவாக, தங்கம் ஆபரணங்களுக்கு விரும்பப்படுகிறது அல்லது தங்க கட்டிகளை பெரும் பணக்காரர்கள் விரும்புகிறார்கள். தங்கம் மற்றும் வைர ஆபரணங்களை விரும்பும் பெண்களைக் காட்டிலும் அல்லது தங்கத்தை குவிக்கும் பெரும் பணக்காரர்களையும் விட தாவீதுக்கு தேவ வார்த்தையின் மீது அதீத விருப்பம் இருந்தது.
தங்கம் அழகை மேம்படுத்துகிறது, கௌரவத்தை அளிக்கிறது, எதிர்காலத்திற்கான பாதுகாப்பான முதலீடாக மக்கள் கருதுகின்றனர். தாவீது தேவ வார்த்தையை அழகானதாகவும், அது பதக்கங்களைப் போல அணியலாம் அல்லது கிரீடம் போல தலையில் வைக்கலாம் மற்றும் நித்திய ஜீவனுக்காக நம்பலாம் என கருதுகிறான். தேவனுடைய வார்த்தையை அறிந்துகொள்வது என்பது நீதியின் பாதைகளில் நடக்க உதவுகிறது. தேவனுடைய வார்த்தை நித்திய ஜீவனை அளிக்கிறது (யோவான் 5:39).
தங்கம் உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருந்தாலும், பரலோகத்தில் அது வெறும் சாலை நடைபாதைதான். "நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது" (வெளிப்படுத்துதல் 21:21). "எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தயை அதிக பாக்கியமென்று" எண்ணிய மோசே ஒரு உதாரணம் (எபிரெயர் 11:26).
உலக செல்வத்தை விட தேவனுடைய வார்த்தையை நான் அதிகம் விரும்புகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்