வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சோகமான அத்தியாயங்களில் ஒன்று, தேவனின் இருதயத்திற்கு ஏற்றவன் எனப்பட்ட தாவீது பத்சேபாளுடன் செய்த விபச்சாரம் என்னும் பாவம் மற்றும் அவளுடைய கணவரான உரியாவைக் கொன்றது (2 சாமுவேல் 11). பத்துக் கட்டளைகளில் பலவற்றை மீறி தாவீது பேராசை, இச்சை, விபச்சாரம், பொய், திருடுதல் மற்றும் கொலை போன்ற பாவங்களைச் செய்தான் (யாத்திராகமம் 20:3-17).
தேவனுக்கு எதிரான பாவம்:
தாவீது செய்தது தேவனுக்கு எதிரான பாவமும் அவருடைய கட்டளையை மீறுவதுமாகும். மோசே பிரமாணம் வழங்கப்படுவதற்கு முன்பே யோசேப்பு வாழ்ந்திருந்தாலும், ஒழுக்க விழுமியங்களைப் பற்றிய புரிதலில் அவன் தெளிவாக இருந்தான் (ஆதியாகமம் 39:9). போத்திபாரின் மனைவியிடம் மயங்காமல் அவன் அந்த இடத்தில் நில்லாமல் ஓடி விட்டான், ஆனால் தாவீதோ தனது இச்சையினால் மூழ்கடிக்கப்பட்டான், கர்த்தரை நேசிப்பவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பார்கள் (யோவான் 14:15).
பத்சேபாளுக்கு எதிரான பாவம்:
தாவீதும் பத்சேபாளுக்கு எதிராக பாவம் செய்தான். இருவரும் பொறுப்பு தான் என்றாலும் விகிதாச்சாரம் அடிப்படையில் வித்தியாசம் இருக்கலாம். முக்கிய குற்றம் தாவீது மீது இருந்தது. ஒரு திருமணமான பெண்ணை வற்புறுத்துவது அல்லது கட்டாயப்படுத்துவது, அதுவும் தாவீது ராஜாவின் கட்டளையின் கீழ் உள்ள ஒரு இராணுவ அதிகாரியின் மனைவியை தொல்லை பண்ணினது பெரும் பாவம்.
உரியாவுக்கு எதிரான பாவம்:
தாவீதின் படையில் விசுவாசமான அதிகாரியான ஒரு புறஜாதியான ஏத்தியர்கள் இனத்தைச் சேர்ந்தவன் உரியா. உரியா தாவீதின் மூலம் யெகோவாவின் வணக்கத்தாரானான் அதாவது ஆராதிப்பவன் ஆனான். உரியாவின் மனைவியுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம், அவன் உரியாவிற்கு மட்டுமல்ல, உரியா நம்பிக்கை வைத்திருந்த யெகோவாவிற்கும் துரோகம் செய்தான்.
எதிரிகளின் கேலி:
தாவீதின் முட்டாள்தனமான பாவத்தினால் தேவனின் எதிரிகளுக்கு அவருடைய மக்களை முற்றிலும் இழிவாகப் பார்க்க வாய்ப்பளித்தது என்று நாத்தான் தீர்க்கதரிசி கூறினார். உரியாவின் உறவினர்களும் ஏத்தியர்களும் தாவீது உரியாவுக்கு எந்த மாதிரியான வெகுமதி அளித்தான் என்று கேலி செய்யும்படி ஆனது (2 சாமுவேல் 12:14).
பொல்லாத வலை:
தாவீது உரியாவை ஒழிக்க முடிவு செய்தான். இந்த மோசமான கொலை வேலையைச் செய்ய அவன் தனது இராணுவத் தளபதி யோவாப்பை நியமிக்கிறான். ஒரு கொலை நடந்ததாக மக்கள் சந்தேகிக்காத வகையில் இது செய்யப்பட்டது (2 சாமுவேல் 11:14-26).
தேசத்திற்கு எதிரான பாவம்:
அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி. தாவீது ராஜாவால் விபச்சாரம் செய்ய முடிந்தால், அந்த தேசத்து மக்களும் ராஜாவின் மோசமான முன்மாதிரியையே பின்பற்றுவார்கள்.
உரியாவிற்கான கௌரவம்:
வருத்தகரமாக, உரியா அநீதிக்கு ஆளான போதிலும், நீதியுள்ள நியாயாதிபதியான தேவன், மேசியாவின் மூதாதையர் பட்டியலில் உரியாவின் பெயரைச் சேர்த்துக் கௌரவித்தார். "ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்" (மத்தேயு 1:6).
இந்த உலகில் நான் அநீதியை சந்திக்கும் போதெல்லாம் நீதியுள்ள நியாயாதிபதி எனக்கு இருக்கிறார் என நம்புகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்