அநீதியான அமைப்புகள்

ஒரு டாக்சி டிரைவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.  அவருக்கு வாகனம் ஓட்ட முடியவில்லை, வருமானமும் இல்லை.  வங்கிக் கடனை முறையாக செலுத்தாததால், வங்கி அதிகாரிகள் எரிச்சல் அடைந்தனர்.  ஒரு நாள் காலை வங்கி அதிகாரி அடியாள்களுடன் வந்து கார் சாவியைப் பறித்துக்கொண்டு காரை வங்கிக்கு ஓட்டிச் சென்றார்கள்.  அப்போது அந்த டாக்ஸி ஓட்டுனர்கெஞ்சினார்; “சார், இது என் வாழ்வாதாரம், நான் சீக்கிரமாகவே குணமடைந்து வண்டி ஓட்டத் தொடங்குவேன், கடனைத் திருப்பித் தருகிறேன்.  எனக்கு வேறு வருமானம் இல்லை, தயவுசெய்து டாக்ஸியை விட்டு விடுங்கள்”;  அவனது வேண்டுகோள் காதில் விழுந்தது, ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.  மோசே பிரமாணம் கூறுகிறது; “திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகுவாங்குவதுபோலாகும்” (உபாகமம் 24:6).

வாழ்வாதாரம்:
ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு மாவு அரைக்கும் இயந்திரம் இன்றியமையாததாக இருந்தது.  எனவே, கடனுக்கான உத்தரவாதமாக அதை எடுக்க தடை விதிக்கப்பட்டது.  ஒரு ஏழையின் வாழ்வாதாரத்தை பறிக்க வங்கி அதிகாரிகளுக்கும் அதிகாரம் இல்லை; யாருக்குமே அதிகாரம் இல்லை.  இருப்பினும், பெரும்பாலான வங்கி மற்றும் நிதி அமைப்புகள் நேர்மையற்றவை மற்றும் மக்களின் தேவைகளுக்கு உணர்வற்றவை.  சில சமயங்களில் பெற்றோர்கள் வாங்கிய கடனுக்குப் பதிலாக குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள்.  துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற செயல்களால், ஜனங்கள் சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

கர்த்தருக்கு பயப்படுதல்:
“நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்” (நீதிமொழிகள் 29:7). தேவனுக்குப் பயப்படுவதே ஒருவருக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் தருகிறது.  அத்தகைய அறிவு இல்லாமல் சட்டமியற்றுபவர்களோ அல்லது பாராளுமன்றங்களோ நீதியான சட்டங்களையும் நேர்மையான வங்கி அமைப்புகளையும் உருவாக்க முடியாது.  நீதியால் மட்டுமே ஒரு தேசத்தை உயர்த்த முடியும்.  “நல்ல குணம் நாட்டைப் பெருமைக்குரியதாக்கும். ஆனால் பாவமோ ஜனங்களை வெட்கப்பட வைக்கும்” (நீதிமொழிகள் 14:34).

பயன்படுத்துதல்:
தேவையில் இருக்கும் ஜனங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எதிராக தேவன் இஸ்ரவேலை எச்சரித்தார்.  நியாயமற்ற லாபம், சுரண்டல் மூலம் வருமானம், இக்கட்டான சூழ்நிலையில் இருப்போரை ஒடுக்குவது ஆகியவை தேவனுக்கு எதிரான பாவங்கள்.  மக்களை மிரட்டியோ, வற்புறுத்தியோ சொத்துக்களை விற்க வைப்பது, மருத்துவமனையில் இருக்கும் போது கையெழுத்து போட வைப்பது எல்லாம் அநீதியான செயல்கள்.

அத்தியாவசியம் மற்றும் அவசியமற்றது:
அத்தியாவசியமற்ற பொருட்களை மட்டுமே அடகாக எடுத்துக்கொள்ள முடியும்.  ஒரு நபர் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வைத்திருந்த அல்லது வருமானத்தை ஈட்டித் தரும் பொருளை பறிக்கும் எந்தவொரு பிணையமும் தேவனால் தடைசெய்யப்பட்டுள்ளது.  வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாஸ்போர்ட்டை பிடித்து வைத்துக் கொண்டு கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.

ஒரு ராஜ்ய குடிமகனாக நான் தேவ நீதியை நிலைநாட்ட முற்படுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download