மது, போதைப்பொருள், ஆபாச படங்கள், வீடியோ கேம்கள் என பலவகையான மோசமான பழக்க வழக்கங்களுக்கு ஜனங்கள் அடிமையாக உள்ளனர். பிரபலங்கள் பலர் பரிதாபமாக இதில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். எளிய ஜனங்களும் பாவப்பழக்க வழக்கங்களுக்கு ஈர்க்கப்படுகிறார்கள். சிலர் தங்களுக்கு நல்ல வலுவான மனஉறுதி இருக்கிறது ஆகையால் எந்த பழக்க வழக்கமும் தன்னை அடிமையாக்க முடியாது என அதை அனுபவித்தோ அல்லது தங்களைத் தானே சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். இருப்பினும், பெரும்பான்மையானவர்கள் பலியாகின்றனர் என்பதே உண்மை. அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் அல்லது உட்கொள்ளும் நல்ல பொருட்கள் கூட ஆபத்தானவை. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று ஒரு தமிழ் பழமொழி உண்டு. போதைக்கு அடிமையானவர்களுக்கு பல துன்பங்கள் உள்ளன; "ஐயோ! யாருக்கு வேதனை யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்" (நீதிமொழிகள் 23:29,32).
1) வேதனை:
அடிமையாகும் மக்கள் துன்பம், துக்கம், வேதனை ஆகியவற்றைக் கடந்து செல்வார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுந்துயரை அனுபவிப்பார்கள். சில குடும்பங்களில் வாழ்க்கைத் துணையின் அடிமைத்தனத்தால் சித்திரவதைகளை அனுபவிப்பதுண்டு, ஆதலால் தற்கொலை செய்து கொள்ளும் வாழ்க்கைத் துணைவர்கள் உள்ளனர்.
2) துக்கம்:
இந்த துக்கம் இழப்பு, ஏமாற்றம் மற்றும் துரதிர்ஷ்டம் காரணமாக வருகின்றது. அவர்கள் சம்பாதிப்பதை, இந்த போதையில் செலவழிக்கிறார்கள், இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. பணம் அல்லது நேரம் அல்லது ஆற்றல் என எல்லாமே தகுதியற்ற முதலீடு ஆகின்றது.
3) சண்டை:
அடிமைத்தனம் கோபம் மற்றும் கசப்பான கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களுக்கு வழிவகுக்கும். முக்கியமான விஷயங்களில் கவனம் இல்லாததால், அற்ப விஷயங்களே மிக உயர்ந்ததாகி, வீடு மற்றும் பணியிடத்தில் மோதல்களைக் கொண்டுவருகிறது.
4) புலம்பல்:
இந்த மக்கள் பல விஷயங்களைப் பற்றி முணுமுணுக்கிறார்கள் அல்லது புலம்புகிறார்கள். அவர்கள் ஒருபோதும் திருப்தியடையவோ அல்லது போதுமென்ற மன நிறைவையோ அடைய மாட்டார்கள். எனவே அவர்கள் தொடர்ந்து குறைக் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். அடிமைத்தனம் திருப்தி அடைவதை விட இன்னும் இன்னும் வேண்டுமென நினைக்க வைக்கும். திருப்தியடையாமை முனகலையும் புலம்பலையும் கொண்டு வரும்.
5) காயங்கள்:
அவர்கள் காரணமின்றி காயங்களை அனுபவிக்கிறார்கள். அதாவது உயிருக்கு ஆபத்தான உடல் உபாதைகள், உறவுகளை சீர்குலைக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள், மனச்சோர்வை ஏற்படுத்தும் பதற்றம், மன உளைச்சல் போன்றவை ஆகும்.
6) இரத்தங்கலங்கின கண்கள்:
இது கோபம், துன்பம் மற்றும் உடல் நலமின்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. நண்பர்கள் அவர்களை விட்டு விலகுவதால் தனிமை அவர்களை ஆட்கொள்கிறது.
7) கடித்ததும் தீண்டியதும்:
இதன் விளைவாக, போதைக்கு அடிமையானவர்களின் வாழ்க்கை ஆவியிலும் அணுகுமுறையிலும் விஷமாகின்றது. எனவே, அவர்களுக்கு முன்னேற வேண்டும் என்ற ஆசையோ லட்சியமோ இல்லை. அவநம்பிக்கை அவர்களை மூழ்கடிக்கிறது.
"பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்" (யோவான் 8:34).
நான் பாவ பழக்கத்திற்கு அடிமையாகாமல் கவனமாக இருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran