ஜெப ஆலயத்தலைவனாகிய யவீருவின் பன்னிரண்டு வயதுள்ள ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யவீருவின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கால் அவதிப்பட்ட ஒரு பெண் இருந்தாள் (லூக்கா 8:43-49). அவளது துன்பம் உடல் ரீதியானது, இடைவிடாத மாதவிடாய், அது வலியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல அவளுடைய செல்வமெல்லாம் மருத்துவ சிகிச்சைக்கே செலவானது, ஆக பொருளாதார பிரச்சினை வேறு. அடுத்தது ஆவிக்குரிய வாழ்விலும் பிரச்சினை, சுதந்திரமாக வழிபட தடை. அவள் யாரையும் தொடக்கூடாது என்று மோசே பிரமாணம் (லேவியராகமம் 15:19-31) தடை செய்ததால் சமூக பிரச்சினை வேறு இருந்தது. மேலும் அவள் எல்லா நம்பிக்கையையும் இழந்ததால், அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது; ஆக உளவியல் பிரச்சனையும் கூட இருந்தது. இறுதியாக உணர்வு பூர்வமாகவும் பிரச்சினை; ஆம், அவள் எல்லா மகிழ்ச்சியையும் அமைதியையும் இழந்ததால் உணர்வு பூர்வமாகவும் பாதிப்படைந்தாள்; அதனால் அவள் எப்போதும் சோகமாக இருந்தாள்.
தொடுதல்:
அவள் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை, தனக்கு சுகம் வேண்டும் என கேட்க கூட வெட்கப்பட்டாள். ஆகையால் அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
நம்பிக்கையா அல்லது குருட்டுநம்பிக்கையா?
இது ஒருவகையான நம்பிக்கையும் குருட்டு நம்பிக்கையும் கலந்தது. அவருடைய ஆடைக்கு வல்லமை இருப்பதாக நம்புவது தவறு என்றாலும்; மற்றொரு அர்த்தத்தில், எதிர்பாராத அற்புதத்தைப் பெறுவது என்பது நம்பிக்கையின் வெளிப்பாடாகும், ஏனெனில் இதுபோன்ற குணப்படுத்துதல் இதற்கு முன்பு நடக்கவில்லை. அவளுடைய நம்பிக்கையின் பொருள் சரியானது, தேவ குமாரனான இயேசு கிறிஸ்து குணப்படுத்தும் வல்லமை கொண்டவரே.
குணமாகுதல்:
அவள் ஆடையின் விளிம்பைத் தொட்டபோது, தேவன் தீட்டுப் படவில்லை. மாறாக, அவள் குணமடைந்தாள், அவளுடைய இரத்த போக்கும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
என்னைத் தொட்டது யார்?
பேதுருவிற்கு இந்தக் கேள்வி முட்டாள்தனமாக இருந்தது. ஏனென்றால் சாதாரண தொடுதலுக்கும் விசுவாசத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பேதுருவும் சீஷர்களும் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. இருப்பினும், தன்னிடமிருந்து வல்லமை புறப்பட்டதின் நிமித்தம் ஒருவர் தொடுவதை உணர முடிந்தது என ஆண்டவர் விளக்கினார்.
ஒப்புதல்:
அப்பெண் அதிர்ந்து பயந்து வந்து விழுந்து வணங்கினாள்.
உறுதி:
தேவன் அவளது நம்பிக்கையை உறுதிப்படுத்தி, அவளை மகளே என்றழைத்து அனைவருக்கும் முன்பாக அவளின் விசுவாசத்தை கனப்படுத்தினார். இல்லையென்றால், தான் குணம் பெற்றதில் சந்தேகம் இருந்திருக்கும் அல்லது தான் ஆசீர்வாதத்தைத் திருடிவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியுடன் இருந்திருக்கலாம். அது அவளை சங்கடப்படுத்துவதற்காக அல்ல, ஆனால் அவள் விசுவாசத்தில் வளரவும் ஒரு சாட்சியாக மாறவும் உதவியது.
யவீரு ஈர்க்கப்பட்டானா?
தாமதம் ஆனதால் யவீருவின் மகள் இறந்துவிட்டாள், இருந்தாலும் அவளை உயிரோடு எழுப்புவதற்காக ஆண்டவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். யவீருவும் தன் மகள் உயிர் பெற்றதால் விசுவாசத்தில் வளர்ந்திருக்க வேண்டும்.
நான் விசுவாசத்தோடும் எதிர்பார்ப்போடும் அவரை அணுகுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்