தொடர் - 12
“என் குடியை கெடுக்கவா வந்தா? ” காசித்தார் ராமசாமித்தேவர் துரைராஜின் தந்தை. அவரது முறுக்கு மீசை துடித்தது. கண்கள் கோவப் பழம் போல் சிவந்திருந்தன. கறுத்த, கனத்த அவர் சரீரம் ஆடிக் கொண்டிருந்தது.
பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த ஜெபசிங். தன் அறை வாயிலில் நின்று கொண்டிருந்த ராமசாமியைப் பார்த்தார். அவருடைய கோபத்தின் காரணம் புரிந்தேயிருந்தது. இதை எதிர் நோக்கியே இருந்தார் ஜெபசிங். இவரால் திருத்தப்பட்ட பழைய மாணவனாகிய துரைராஜ் ஈஸ்டர் பண்டிகையின் போது பெற்றோர் அனுமதி பெற்று ஞானஸ்நானம் பெறப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அதன் விளைவுதான் இது என உணர்ந்த ஜெபசிங் மிகுந்த அமைதியோடு,
“ஐயா உள்ளே வாருங்கள்! அமைதியாகப் பேசலாம்” என்றார். உள்ளே நுழைந்தார் ராமசாமி!
“அமருங்கள்” ஜெபசிங் நாற்காலியைச் சுட்டிக் காட்டினார். அமர்ந்தார் ராமசாமி.
“இந்த ஊர் பெரிய மனுஷன் நான். என் மூத்த மகன் துரைராஜ், என்னுடைய வாரிசு. என்னடான்னா மேல்நாட்டு சாமியைக் கும்பிடப்போறானாம். அவங்களோடே சேரப் போறானாம். உங்க புத்திமதியா?... என் இரத்தம் கொதிக்குதுய்யா, இரத்தம் கொதிக்குது. அதை எப்படியும் தடுக்கணும். நீங்க தடுத்தே ஆகணும். ஜெபசிங்கைக் கூர்ந்து பார்த்தார். உணர்ச்சிவசப்பட்டிருந்தார் அவர்!
இதே மனிதர் சில மாதங்களுக்கு முன் தன்னைத் தேடி வந்து அன்பொழுக, மிக்க மரியாதையோடு, “ ஐயா! இவன் செத்துத் தொலைஞ்சாலும் பரவாயில்லை என நான் நினைத்துக் கொண்டிருந்த என் மகனை, ஊரெல்லாம் என் பெயரைக் கெடுத்துக் கொண்டிருந்த என் மகனை தங்கக்கம்பியா வளைச்சிட்டீங்களேய்யா! என்ன அன்பா, மரியாதையாப் பேசுறான். நிலத்துப் பக்கமே எட்டிப் பார்க்காதவன் பொறுப்பா வேலையை கவனிக்கிறான். ஊர்ல எல்லாருக்கும் உதவி செய்யறான். எல்லாரும் அவனைப் புகழ்றாங்க நான் உங்களுக்கு எப்படி நன்றிக்கடன் தீர்க்கப் போறேனோ?” வாயெல்லாம் பல்லாகக் காட்சியளிக்கக் கூறிய அதே மனிதர்தான் இன்று வந்து கோபத்தில் குதிக்கிறார். தான் பொறுமையைக் கையாளவேண்டுமென உணர்ந்த ஜெபசிங்.
“ஐயா! மெய்ப் பொருளை அறியாமல் வாழ்ந்துவிட்டீர்கள். உங்கள் மகன் முழுமுதற் கடவுளை அறிந்துவிட்டான்.” நிறுத்தி நிதானமாகக் கூறினார் ஜெபசிங்!.
“என்னடா சொன்ன?” எழுந்தவர், தான் அமர்ந்திருந்த .நாற்காலியைத் தூக்கி ஜெபசிங் தலையில் அடித்துவிட்டார். பள்ளிக்குச் செல்வதற்காக வெளியே காத்திருந்த மாணவக் கும்பல் குழப்பமடைந்தது.
“பிடிடா! சாரை அடிச்சிட்டார்!”
“வெளியே விடாதே! கும்பல் உள்ளே நுழைந்து, ராமசாமியைப் பிடிக்கவும்,
“இயேசப்பா” என்று கூறியபடி இரத்தப் பெருக்குடன் கீழே சாய்ந்தார் ஜெபசிங்.
“அவரை விட்டுவிடுங்கள். அவர் பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்லட்டும்” என்று கூறி மயக்கமுற்று கீழே விழுந்தார். எதிர்பாராதவிதமாக அந்நேரம் அங்கு வந்த உதவித்தலைமையாசிரியர் தினகரன் தான் உடுத்தியிருந்த வேஷ்டியைக் கிழித்துக் கட்டுப் போட்டார். கண்ணீரும் கலக்கமுமாக அவரை, கண் மூடித் திறக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. ஆத்திரத்தில் அறிவிழந்த ராமசாமித்தேவர் திகைத்தார். உள்ளூர் மருத்துவர் முதலுதவி செய்ய, மதுரைக்கு உடனே கொண்டு போக அவசரப்படுத்தவே, மதுரையை நோக்கி விரைந்தனர். உதவித்தலைமையாசிரியரும், மாணவர்களும் வற்புறுத்தவே பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர் குழாம் மதுரை மருத்துவமனையை முற்றுகையிட்டிருந்தது.
மருத்துவர்கள், “அதிக இரத்தம் வீணாகிவிட்டதாலும் தலையில் பலமாக அடிபட்டுவிட்டதாலும் தங்களால் எதுவும் சொல்ல முடியாது எனவும் தங்களால் முடிந்தவரை முயற்சிப்பதாகவும்” கூறினார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது! ஜெபசிங்கிற்கு இரத்தம் தர “நான், நீ.... என்று போட்டியிட்டுக்கொண்டிருந்தனர் மாணவர்கள். அவர்களை அமைதிப்படுத்துவது மிகக்கஷ்டமாக இருந்தது. உதவித் தலைமையாசிரியர் தினகரன் “நாம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வதே, மருத்துவர்கள் “தெளிவுடனும், விரைவுடனும் செயல்படவும், ஜெபசிங் உயிர்காக்கப்படவும் முடியும்” என எடுத்துரைக்கவே மாணவர் குழாம் அமைதியுடன் செயல்பட ஆரம்பித்தது.
பசுஞ்சோலையில் ராமசாமித்தேவரின் மனச்சாட்சி அவரை வதைத்துக் கொண்டிருந்தது. தன் தலையில் தானே அடித்தபடி புலம்பிக் கொண்டிருந்தார். நடந்ததை அறிந்த துரைராஜ் “இனி நீங்க எனக்குத் தகப்பனும் இல்லை. நான் உங்களுக்கு மகனுமில்லை” எனக் கூறிவிட்டு ஓடினான் மதுரையை நோக்கி. அவன் உள்ளம் “இறைவா! இயேசப்பா! என் உடன் பிறவா அண்ணனை அழைத்துக் கொள்ளாதே! என்னை பதிலாக ஏற்றுக்கொள்” என இறைஞ்சிக் கொண்டேயிருந்தது. அவனது வற்புறுத்தலினால் அவனது இரத்தத்தை மருத்துவர்கள் சோதித்தனர். ஜெபசிங் இரத்தமும், துரைராஜ் இரத்தமும் ஒரே குரூப். எனவே அவனுடைய இரத்தம் ஜெபசிங்கிற்கு செலுத்தப்பட்டது.
மாணவிகள் ஆலயத்திலும், வீட்டிலும் கண்ணீர் மல்க “இயேசு சுவாமி எங்க ஆசிரியரைக் காப்பாற்று” என வேண்டிக்' கொண்டேயிருந்தனர். ஒருவரும் சாப்பிடவில்லை. மாணவ மாணவியர் மட்டுமல்ல! பசுஞ்சோலை கிராமமே சோகக்கோலம் பூண்டது. ஜெபசிங் உயிர் பிழைத்தாலும் மூளை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் சுய அறிவுடன் செயல்படுவது என்பது அரிது என மருத்துவர்கள் கூறியது அனைவர்க்கும் மிகுந்த வேதனையைக் கொடுத்தது! இந்த துயரக்காட்சியை காணமுடியாத கதிரவன் மேற்கில் தலை சாய்த்தான்.
இராமசாமித்தேவரின் மனச்சாட்சி அவரை சித்திரவதை செய்தது. சாப்பிடவுமில்லை! தன் மகனின் அறைக்குச் சென்றார். மேஜையின் மீதிருந்த திருமறை அவர் கண்களில் பட்டது. அடிக்கடி தன் மகன் அதை எடுத்துப் படிப்பதைத் பாரத்திருக்கிறார். ஒரு உள்ளுணர்வு தூண்டவே, திருமறையைத் திறந்தார். “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” (யோவான் 14:1). தொடர்ந்து வாசித்தார். “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீரகளோ குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன்” (யோவான் 14:14). திரும்பத் திரும்பப் படித்தார். திருமறையைக் கையில் ஏந்தியபடி முழங்காற்படியிட்டார். “இயேசுவே! நீரே உண்மையான கடவுள் என்றால் ஜெபசிங் ஐயாவைக் காப்பாற்று! ஜெபசிங் ஐயா உயிரோடு எழுந்தால், உம்மைத்தவிர யாரையும் வணங்க மாட்டேன். இது சத்தியம், சத்தியம்!” அவர் குரல் உயர்ந்து ஒலித்தது! கண்கள் மடமடவென்று கண்ணீரைக் கொட்டின. திருமறையை ஏந்திய கரங்கள் நடுங்கின. அவரது பெரிய மீசை துடித்தது. அவருடைய இதயத்தை மென்மையான கரம் தடவுவது போல் உணர்ந்தார். உணர்ச்சி வசப்பட்டிருந்த அவர் மெல்ல, மெல்ல அமைதியடைந்தார் இனம் தெரியாத நிம்மதி அவர் நெஞ்சுக்குள் புகுந்தது.
இதன் தொடர்ச்சி பணமா? பாசமா? என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.