நீலக் கடலலை நிலத்திலே மோதி,ஆரவாரம் செய்து கொண்டிருந்தது. கடற்கரையில் அமர்ந்து கடலையே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தின் உள்ளத்தில் எண்ண அலைகள் மோதிக் கொண்டிருந்தன. அலையும் மனத்தை நிலைப்படுத்த முடியாத ஆனந்த் சிகரெட்டை எடுத்தான். அதில் கடைசியாக இருந்த சிகரெட்டை எடுத்து தன் உதட்டில் பொறுத்தி பற்ற வைத்தான். காலி பாக்கெட்டை கடலை நோக்கி விட்டெறிந்தான். கடல் தன் கரத்தால் அதை அள்ளிச் சென்றது. மீண்டும் கரையை நோக்கி வந்த அலை,இவனையும் வா, வா என அழைப்பது போல் உணர்ந்தான்.
அவனது மனதும் கூட, ஆனந்த்! போ, போய்விடு ஆனந்தமே இல்லாத உன் வாழ்விற்கு இதுதான் முடிவு! என ஓலமிட்டது. சிகரெட் புகையை இழுத்து விட்டான். சுருள் சுருளாக புகை வளையங்கள் காற்றில் கலந்தன. அந்தப் புகையினூடே அவன் அன்னை மேரியின் அமைதி முகம் தோன்றியது.
நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன. அவனது தந்தை மூன்று குழந்தை செல்வத்தை மட்டும் அவன் அன்னைக்குக் கொடுத்து விட்டு இந்த உலகை விட்டுப் போய்விட்டார். மூத்தவன் ஆனந்த். குடும்பப் பென்ஷன் உதவியாலும், இரவு பகலாக தையல் மிஷினோடு அவன் ஓடாகித் தேய்ந்து, ஓடிக் கொண்டிருந்ததாலும் குடும்பத்தை ஓரளவு நல்லபடி நடத்த முடிந்தது.
தாயின் பக்தி வாழ்வும், விசுவாச உறுதியும், அன்பின் அரவணைப்பும் கண்டிப்பான கட்டளைகளும், அவனை ஆரம்பப் பள்ளியிலும், ஓய்வு நாள் பள்ளியிலும் சிறந்த மாணவனாக உருவாக்கியது. மேல் நிலைப் பள்ளியிலும், அவன் கடிவாளமிட்ட நல்லதொரு போர்க்குதிரையாகவே திகழ்ந்தான். உடன் பயிலும் மாணவர்களைப் போல் உடை உடுத்த முடியவில்லையே என்ற ஏக்கம் அவன் உள்ளத்தில் இருந்தாலும், தன் ஆர்வத்தைப் படிப்பிலே செலுத்தினான். அனைத்து வகுப்புகளிலும் அவனே முதல் மாணவன். மேல் நிலைத் தேர்விலும் பள்ளியின் முதல் மாணவனாகத் தேறினான். சொல்லாற்றல் மிக்க அவன் பேச்சுப் போட்டிகளிலும் விவாத அரங்குகளிலும் பரிசுகளைத் தட்டிச் சென்றாலும் அடக்கமுடையவனாகவேத் திகழ்ந்தான்.
அவன் பெற்ற மதிப்பெண்களும். மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோசப்பின் உற்சாகமூட்டும் அறிவுரைகளும், ஆலோசனைகளும் உறவினரும் அவனை இன்ஜினியரிங் கல்லூரிக்கு அனுப்ப அவன் அன்னையை தூண்டியது.
கல்லூரி சென்றான் விளைவு... விடுதி வாழ்க்கை அவனது கடிவாளத்தைக் கழட்டியது. அவனது ரூம்மெட்டாக அமைந்தான் பணக்கார நண்பன் பாண்டியன்.
ஆனந்த் ஏழ்மையின் பின்னணியில் வாழ்ந்திருந்தாலும் கூட கட்டான உடலமைப்பு பெற்றிருந்தான் சிவந்த நிறமும், சுருண்ட கேசமும் அவன் அழகுக்கு அழகூட்டியது. பாண்டியனின் உள்ளத்தில் இடம் பெற்றான் ஆனந்த், பாண்டியனின் புகழ்ச்சி வார்த்தைகளும், பாசப் பார்வைகளும், பகட்டான உடையலங்காரமும், பண உதவிகளும் ஆனந்தை ஈர்த்தன.
ஆனந்தமயமான வாழ்வுக்கு ஏங்கும் தனக்கு அவ்வாழ்வை அள்ளித் தந்தவன் தன் அருமை நண்பன் பாண்டியன் என்ற எண்ணம் அவன் உள்ளத்திலே வேரூன்றி விட்டது. நாள் செல்லச் செல்ல பாண்டியனின் கைப்பாவையானான் ஆனந்த், பாதை மாறியது, பழக்க வழக்கம் மாறியது, படிப்பு மறந்தது. பட்டாம் பூச்சியென' உல்லாச உலகில் பறந்து திரிய ஆரம்பித்தான். தாயை மறந்தான். தன் வாழ்வின் இலட்சியத்தையே துறந்தான்.
விளைவு!... செகண்ட் செமஸ்டரில் வாஷ் அவுட். ஆம் அனைத்து பாடங்களிலும் தோல்வி. தன் மார்க்ஷீட்டைப் பார்த்தவன் அதிர்ச்சி அடைந்து விட்டான். தன் தாயின் முகமும், தலைமையாசிரியரின் முகமும் அவன் நெஞ்சத்திலே நிழற்படமாய் விரிய மனச்சாட்சியின் குற்றச்சாட்டுக்கு பதில் கூற இயலாதவனாக கடற்கரையை நாடி வந்துள்ளான்.
இருள் மெல்ல கவியத் தொடங்கியது. கடற்கரையில் குழுமியிருந்த மக்கள் கூட்டம் கலையத் தொடங்கியது. இதற்காகத்தான் காத்திருந்தான் ஆனந்த்.
இதுவரை தன் வாழ்விலே பெற்றிராத இந்த மதிப்பெண் பட்டியலை தன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் தனக்கு உதவி செய்து வரும் அவரிடம்...
எப்படிக் காட்டுவேன்? தன் அன்புத்தாயின் மனக்கோட்டைகளை எப்படி இடிப்பான்?
கடலை நோக்கி நடந்தான். கடலலைகளும் அவனை ஆரவாரமிட்டு வரவேற்க ஓடி வந்தது.
தன் இரு கைகளால் முகத்தைப் பொத்தியபடி தேம்பித் தேம்பி அழுதான். அவனாகவே அழுது முடிக்கட்டும் எனக் காத்திருந்தான் கதிரவன்.
மெல்ல நிமிர்ந்த ஆனந்த், “கதிரவா! என்னை ஏன் காப்பாற்றினாய்? புலம்பினான்.
அவனருகே அமர்ந்து, அவன் தோளை ஆதரவாகப் பற்றிய கதிரவன் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் மரணம் அதற்கு சரியான முடிவல்ல. கிறிஸ்தவனாகிய உனக்கு நானா சொல்லித் தரவேண்டும்? கடவுள் உன் வாழ்வில் வைத்திருக்கும் திட்டத்தை உடைத்து, நீ தற்கொலைப் பண்ணிக் கொள்வதால் யாருக்கு என்ன லாபம்? நீ நித்தியத்தை எங்கே கழிப்பாய்?
“*கதிரவா! என் நிலைமை புரியாமல் பேசுகிறாய் கடவுள்... நித்தியம்! இவையெல்லாம். சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. கடவுள் பாரபட்சமுள்ளவர். ஒரு சிலருக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கிறார். சிலரை வறுமையில் வாடவிடுகிறார்.!? என்று குமுறியவன் தன் மனப் பாரமனைத்தையும் கொட்டினான். “இப்பொழுது சொல்! எந்த முகத்தை வைத்துக்கொண்டு என் தாயையும், தகப்பனிலும் மேலான. ஜோசப் ஆசிரியரையும் சந்திப்பேன்? நான் சாவது மேலல்லவா?
“நீ செத்துப் போவதால் உன் தாயின் கஷ்ட்டம் தீர்ந்து விடுமா?”
கதிரவன் காரமாகவே கேட்டான்.
”இல்லைதான்! ஆனால் என் தகப்பன் இறந்த போது எப்படித் துடித்திருப்பார்களோ, அதேபோல் துடித்துவிட்டு, பின் என் தம்பி, தங்கையின் வாழ்விற்காக வாழ ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா?”
“நொந்து நைந்து போன உள்ளத்திற்கு மேலும் நஞ்சை ஊட்டவே நீ விரும்புகிறாய் .. அவர்களை நலமாக "வாழ வைக்க. வேண்டுமென்ற எண்ணமில்லையே! உனக்கு?
“இருந்ததே ஒரு காலத்தில். அதற்கு தகுதியற்றவனாகி விட்டேனே நான்! கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
“என்னவோ வாழ்க்கையே அஸ்தமித்து விட்டது போலல்லவா பேசுகிறாய். நீ நினைத்தால் அடுத்த செமஸ்டரில் இந்தப் பாடங்களையும் சேர்த்து எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். கடவுள் பாரபட்சமுள்ளவர்” என்றாய். இல்லை! ஆனந்த்! இல்லவே இல்லை! பாண்டியனிடம் பணம் இருக்கிறது. ஆனால் அவன்மீது பாசத்தைக் கொட்ட அன்னை இல்லை. உடன் பிறந்தோரும் இல்லை. அறிவிலும் ஆற்றலிலும் கூட அவன் குறைந்தவனே. ஆனால் உனக்கோ தேவன் நிறைந்த ஞானத்தையும், சிறந்த அழகினையும், அன்பான அன்னையையும், அருமையான உடன் பிறந்தோரையும், தாலந்துகளையும் அள்ளித் தந்திருக்கிறார். அவை அனைத்தையும் விரயம் செய்து விடாதே! நீ இப்பொழுது விழுந்திருப்பது படுபாதாளம் அல்ல. உன்னால் ஏறி வரக் கூடிய குழிதான். முதலாவது நீ பாதை தவறியதை கடவுளிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெறு. பின் “*என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு” என்று திருமறை கூறுவதை விசுவாசித்து முயற்சி செய். அம்மாவிடமும், ஜோசப் ஆசிரியரிடமும்
மறமக்காமல் கூறி, மன்னிப்பு வேண்டு, இனி நீ தவறமாட்டய் என்பதையும் தெரிவித்துவிடு உன்னை அவர்கள் புரிந்து கொள்வார்கள், இறைவனுக்கு அடுத்தபடி மெய்யன்பு தாயன்புதான்! தேவ ஒத்தாசையால் தீய பழக்க வழக்கத்திலிருந்து விடுதலை பெற முடியும். ஒப்பில்லா வல்லமையால் உயர்ந்த வாழ்வு வாழ முடியும். ஏனோ பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம் என வாழ்வதற்காக நாம் இவ்வுலகில் பிறக்கவில்லை. உன்னதமான இலட்சியத்தை உள்ளத்திலே பதித்து, உன்னதர் இயேசுவின் பாதையில் நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்க வேண்டும்!”
ஒரு சொற்பொழிவே செய்து முடித்து விட்டான் கதிரவன்.
அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த், “கதிரவா! நீ கிறிஸ்டினா? மெல்ல வினவினான் ..
“உள்ளக்கோவிலிலே இயேசுவை சுமந்து கொண்டிருக்கும் நான் கிறிஸ்தவன்தானே!:? புன்னகையோடு பதிலிறுத்தான்.
“ஆமாம்” என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டிய ஆனந்த், “*கதிரவா! சரியான நேரத்தில் வந்து என்னைக் காப்பாற்றி, என் கண்களையும் திறந்து விட்டு விட்டாய்! உனக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில்லை”? உள்ளம் நெகிழக் கூறினான் ஆனந்த்,
*ஜெபிப்போமா??' என்று கதிரவன். கூற இருவரும் முழங்கால் படியிட்டனர்.
“ஒரு சந்தேகம்! பாண்டியனின் உறவை எப்படி துண்டிக்க முடியும்? பரிதாபமாகப் பார்த்தான் ஆனந்த்,
“ஏன் முடியாது? நீ ஒளியாக மாறும் போது இருளில் வாழும் 'புழு பூச்சிகள் தானாகவே ஓடிவிடும். அல்லது அவனும் உன்னைப் போல் இயேசுவின் பிள்ளையாக மாறுவான்?
ஜெபிக்க ஆரம்பித்தான் ஆனந்த்.
அஸ்தமனப் பாடலுக்கு இலக்காக இருந்தவன் உள்ளத்திலே ஆனந்த பைரவியாம் உதயகீதம் ஒலிக்க ஆரம்பித்தது.
உன்னதர் இயேசுவும் தம் காயப்பட்ட கரத்தை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.
Author: Sis. Vanaja Paulraj