ஒரு மக்கள் குழு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, இலக்கியங்கள், புதிய ஏற்பாடுகள் மற்றும் வேதாகமங்களை விற்றுக்கொண்டிருந்தனர். ஊழியம் செய்வதற்கும் வேதாகமத்தை விற்பதற்கும் கடினமான இடமாக இருந்தது. அப்போது அங்கு ஒருவர் வந்து இரண்டு வேதாகமங்களை வாங்க விருப்பம் தெரிவித்தார். அந்த இளைஞன் ஆச்சரியப்பட்டு, “ஐயா, நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். அவர் கூறினார்: "ஒருபோதும், இல்லை". வேதாகம விற்பனையாளர் சொன்னார்: "ஐயா, அப்படியானால், நீங்கள் ஏன் இரண்டு வேதாகமத்தை வாங்க விரும்புகிறீர்கள்?" என்றார். அதற்கு அந்த மனிதர்; “எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் நல்ல ஒழுக்கமான, நீதியான, தூய்மையான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு, ஆண்டவர் இயேசு மட்டுமே முன்மாதிரி. என்னுடைய மதம் உட்பட எந்த மதத்திலும் எந்த மாதிரிகளையும் நான் காணவில்லை. எனவே, என் மகன்கள் வேதாகமத்தைப் படித்து உன்னதமான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.
பரிசுத்தம்:
தேவன் பரிசுத்தமானவர், அதனால் அவரை வணங்குபவர்களும் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அவரைப் பின்பற்றுபவர்கள் பரிசுத்தத்தை தொடர வேண்டும் (1 பேதுரு 1:15-16; லேவியராகமம் 20:26; சங்கீதம் 29:2). எந்த அசுத்தமும், மாசுபாடும், பாவமும், ஊழலும், கெட்ட காரியங்களும், இருளும், அழிவும், மரணமும் அவரைத் தொட முடியாது; நாய்கள், சூனியக்காரர்கள், பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள், கொலைகாரர்கள், பொய்த் தெய்வங்களை வழிபடுபவர்கள், பொய்யைக் கடைப்பிடிப்பவர்கள் ஆகியோருக்கு ஒருபோதும் நுழைய முடியாத பரிசுத்தமான இடம் பரலோகம் (வெளிப்படுத்துதல் 22:15).
நீதி:
தேவன் ஒரு நல்ல நீதிபதி, எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார் (சங்கீதம் 7:11). முழுப் பிரபஞ்சத்தின் மீதும், எல்லா படைப்புகள் மீதும், எல்லா நாடுகளின் மீதும் அவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. பரிசுத்த தேவன் நீதியாக நியாயந்தீர்க்கிறார். தேவ நீதி வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் மனிதர்கள் பின்பற்றுவதற்கான சட்டங்களாக கட்டளையிடப்பட்டுள்ளது. சட்டத்தின் ஒரு பகுதி பத்து கட்டளைகள், இது அனைத்து மனிதர்களுக்கும் உலகளாவிய பயன்பாட்டைக் கொண்டுள்ளது (யாத்திராகமம் 20:1-17). தேவனின் தெய்வீக வல்லமையும் பண்புகளும் அவருடைய படைப்பிலும் வெளிப்படுத்தப்படுகின்றன; எனவே தீங்கு செய்யும் எந்தவொரு நபருக்கும் மன்னிப்பு இல்லை (ரோமர் 1:24-25).
ஒழுக்கம்:
வேதாகமம் ஒழுக்கத்தையும் போதிக்கிறது. தேவனின் பரிசுத்தம் மற்றும் நீதியின் வெளிச்சத்தில், மனிதர்கள் தார்மீக பொறுப்புள்ள வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது குறிப்பிட்ட குழுவிற்கு மட்டும் பொருத்தமான சூழ்நிலை நெறிமுறைகள் அல்லது வர்க்க/சாதி நெறிமுறைகள் அல்ல. எல்லா சூழல்களிலும், கலாச்சாரங்களிலும், நாடுகளிலும் மனிதர்களிடமிருந்து தேவனின் தராதரங்கள், கோரிக்கைகள் மற்றும் விருப்பங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
மாபெரும் பொக்கிஷமான வேதாகமத்தின் மதிப்பு எனக்கு புரிகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்