தொடர் – 21
கண்ணே! நீ யுறங்கு
கனியமுதே கண்ணுறங்கு
தேனே நீ யுறங்கு
தெள்ளு தமிழே கண்ணுறங்கு
சிற்றில் கட்டி அங்கு
சிறு செப்பு வைத்து நன்கு
செல்லமே நீ ஆட
சில காலம் ஆகுமம்மா
இப்போ கண்ணுறங்கு
கட்டிக் கரும்பு உனக்கு
கட்டாயம் வாங்கித் தரேன்
சுட்டித்தனம் இன்றி
சுந்தரம் தூங்கிடம்மா (கண்ணே)
“ஆமாக்கா, உன் மகளுக்கு கட்டிக்கரும்பு கட்டாயம் வாங்கிக்கொடு. நல்லா சாப்பிடுவா!” சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள் வசந்தி.
“போடி! பிள்ளையை கொஞ்சி வளர்க்கக் கொடுத்து வச்சிருக்கணும். அவள் பேசுற பேச்சைக் கேட்டுப் பார். உனக்கு எப்படித்தான் அவளை விட்டுட்டுப்போக மனசு வருதோ? பெருமையாகச் சொன்னாள் சாந்தி.
“அக்கா! மடிந்து போக இருந்த என் வாழ்வை மலர வைத்த என் தேவனுக்கு நாளெல்லாம் உழைப்பதுதாங்க என் இலட்சியம். அதற்காக வீட்டுப் பொறுப்பை உதறிவிடணும்னு நான் சொல்லலை, ஆனா... ஏதோ ஒன்று என் பிள்ளை ஏஞ்சலினை நான் அளவு கடந்து நேசிக்க விடாம தடுக்குது. என்னவென்றே தெரியவில்லை” பெருமூச்சோடு நிறுத்தினாள்.
வசந்தியின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை சாந்தியே ஏற்றாள். சாந்தியின் மகன் சாமுவேல் பள்ளி சென்றுவிட்டதால் ஏஞ்சலினை கவனிப்பது சாந்திக்கு ஆனந்தமாக இருந்தது.
ஏஞ்சலினும் “அம்மா, அம்மா” என்று சாந்தியையே ஒட்டிக்கொண்டாள். அதிக நேரம் சாந்தியிடமே இருந்தாள். நாட்கள் நகர்ந்தன ஏஞ்சலினின் மழலை மொழி குழலையும் வென்றது. அவள் நடக்கும்பொழுது எழும் கிண்கிணி ஒலி , வீணையின் இன்னொலியாய் இல்லமெங்கும் எதிரொலித்தது. அந்த இனிய சூழலை உடைத்தது. ஒரு பேரிடி, குழந்தை ஏஞ்சலின் ஜுரத்தில் விழுந்தாள். மருத்துவன் ஆலோசனைப்படி இரவெல்லாம் கண் விழித்து ஏஞ்சலினின் படுக்கையருகே இருந்தாள் சாந்தி! நேரம் தவறாமல் மருந்து கொடுத்தாள். அதிகாலை மணி மூன்று “அம்மா” ஏஞ்சலினின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பது போல் இருந்தது. கைகளை நீட்டினாள், ஏஞ்சலினைத் தூக்கி தன் மடியில் கிடத்தினவள், “எந்திரிங்க! குழந்தை என்னவோ மாதிரி விழிக்கிறாள்” ஜெபா அவசரமாக எழுந்தார்.
“கண்ணே ஏஞ்சலின்” முகத்தை தன்னை நோக்கித் திருப்பினாள் சாந்தி. ஏஞ்சலின் விழிகள் மேலே சென்றது. ஆம்... குழந்தையின் உயிர்ப் பறவை பறந்தே போய்விட்டது.
“ஏஞ்சலின்.... ஏஞ்சலின்” கதறியவள் மயங்கிச் சாய்ந்தாள். அனைவரும் எழுந்தனர். மகிழ்ச்சி பொங்கிய இல்லத்தில் மரணத்தின் கொடூரத் தாண்டவம். கண்ணீர் வெள்ளம். அனைவர் துக்கத்தையும் மிஞ்சியது, சாந்தியின் துயரம்! மயங்கி மயங்கி வீழ்ந்தாள். குருவானவர் வந்தார். உயிர்த்தெழுதலின் நம்பிக்கையுடன் ஏஞ்சலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சாமுவேல் “பாப்பாவை ஏன் சாமி கூப்பிட்டார்? சாமிக்கு பாப்பா இல்லையா? இனி ஏஞ்சலின் பாப்பா நம்ம கிட்ட வரமாட்டாளா?” என்று கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தாள். வசந்தி, சாந்தியைத் தேற்றினாள்.
துரை, “கர்த்தர் கொடுத்தார், “கர்த்தர் எடுத்தார். அவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்றான். மற்றவர்கள் வேதனையில் வெந்தனர். ஜெபாவின் மனம் கலங்கியது! “கடவுள் வேலை... ஊழியம்... ஊழியம்” என ஓடோடிக் கொண்டிருந்தார்களே இருவரும். ஏன் அவர்களுடைய முதற்பிள்ளை சாக வேண்டும்? கடவுள் ஏன் இதை அனுமதித்தார்?” என்ற கேள்வி அனைவர் இதயத்திலும் எழுந்தது.
பெயர் கிறிஸ்தவர்களைக் கண்டு பரமதிருப்தியடையும் சாத்தான் அனலான ஜீவியம் செய்பவர்களைக் கண்டு அஞ்சுவான். அவர்களை வீழ்த்த முயற்சி எடுப்பான். அதிலும் ஊழியத்தில் முன்னேறுபவர்களைக் கண்டால் அவனால் சும்மா இருக்க முடியாதே அதனால்தானே பவுல் அப்போஸ்தலர் எபேசியருக்கு “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும் வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபே 6:12) என எழுதுகிறார். துரை, வசந்தியின் ஊழியம் அநேகரை இயேசுவின் மந்தையில் சேர்த்தது. சாத்தான் எதிர்ப்புகளை உருவாக்கினான். திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு கலாட்டா கும்பலை உருவாக்கிக் கொண்டிருந்தார். மயிலாடும் பள்ளி மேனேஜ் துரையைக் கொலை செய்ய திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். கல்லடி, சொல்லடி துரையைத் தாக்கின. கலங்கவில்லை அவன். ஏன்... ஒரு நாள் மலைப்பக்கம் சென்று ஜெபித்து விட்டுத்திரும்பும் போது, இரு குண்டர்கள் அரிவாள்களுடன் துரையைத் தாக்க வந்தனர். துரைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கிருந்தோ ஒரு விசில் சத்தம். போலீஸ் விசில் ஓசை கேட்கவுமே இரு குண்டர்களும் ஓடிவிட்டனர். மலையைவிட்டு இறங்கினவன் எதிரே வந்த மாட்டுக்காரப்பையன் கையில் விசில் இருந்ததைக் கண்டான். தேவாதி தேவனைத் துதித்தபடி வீடு வந்து சேர்ந்தான் துரை. இப்பொழுது பிள்ளையை பலி வாங்கிவிட்டான் அந்தப் பிசாசு.
சர்வவல்லமையுள்ள தேவன் ஏன் மெளனமாயிருக்கிறார்? யோபு சோதிக்கப்படலையா? செல்வம், சுகம், பிள்ளைகள் அனைத்தையும் இழந்தாரே. தேவன் மெளனமாகத்தானே இருந்தார். ஏன் தெரியுமா? “என் பிள்ளை யார்?” என்பதைக் காட்ட, பொறுமையாக இருக்கிறார் முடிவில் இரு மடங்கு ஆசீர் அள்ளித்தருகிறார்.
ஏஞ்சலின் மறைவிற்குப்பின் துரை, வசந்தி வாழ்வில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் சாந்தி சுகவீனத்தில் வீழ்ந்து எழுந்தாள். “ஏஞ்சலின்.... ஏஞ்சலின்” என புலம்பினாள். ஜெபாவின் ஆறுதல் மொழிகள் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று! இடமாற்றம் அவளுக்கு. மனமாற்றம் கொடுக்குமென சாந்தியையும், சாமுவேலையும் மதுரையில் தன் தந்தை வீட்டில் கொண்டு போய் விட்டார் ஜெபா!
மாலைநேரம் கன்னத்தில் கைவைத்தபடி நீலவானத்தை வெறித்துப் பார்த்தபடி வராண்டாவில் அமர்ந்திருந்தாள் சாந்தி. அவள் எதிரே அமர்ந்தார் ஜெபாவின் தந்தை டேனியல்.
“இந்த துரைப்பயலுக்கு புத்தியே இல்லை ஊழியமாம் ஊழியம்! வாழ்க்கை ஒரு தடவைதான். செத்தபின் எதுவும் வரப் போகிறதா என்ன? தன் வீடு, மனைவி என்று இருக்காமல் ஊர் சுற்றுகிறானே! பிள்ளையைப் பறி கொடுத்தும் கூட அறிவு வரவில்லை!” கோபமாகப் பேசினார்.
சாந்திக்கு பகீரென்று. “மாமா! என்ன சொன்னீங்க? செத்தபின் எதுவும் வரப் போகிறதான்னா சொன்னீங்க? கிறிஸ்தவ வாழ்க்கையே இம்மைக்குரியதை மட்டும் சார்ந்ததில்லை. மறுமைக்குரிய எதிர்பார்ப்புடன் கூடியது என்பதை மறந்திட்டீங்களா? இம்மைக்காக மட்டும் கிறிஸ்துவின் மீது பற்றுள்ளவர்களாயிருப்போமானால்... என்று வேதம் கூறுவதை மறந்துவிட்டீர்களா மாமா? யோபு ஒரே நாளில் 7 குமாரர்களையும் 3 குமாரத்திகளையும் பறி கொடுத்தானே, அவன் கடவுளை மறுதலித்தானா?. இரு மடங்காக திரும்ப அவனுக்கு 7 குமாரர் 3 குமாரத்திகள் பிறந்தார்களே. மோட்சத்தில் அவன் பிள்ளைகள் 10 இருக்கும். இப்போ 10 பிறந்தது. ஆக குழந்தைகளும் இரு மடங்கு அவனுக்கு, கடவுளை நம்பின பிள்ளைகளுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகத்தான் நடைபெறும்.”
“ஊருக்குத் தாண்டி உபதேசம் உனக்கில்லையடி என்ற கதையாம்மா? இவ்வளவு நம்பிக்கையோட பேசுறையே, பின் ஏம்மா பித்துப் பிடிச்ச மாதிரி இருக்க? ஏஞ்சலினை திரும்ப பரலோகில் சந்திப்போம் என்ற விசுவாசம் உனக்கில்லையா? இழந்த ஒரு பிள்ளைக்காக உயிரோடே இருக்கிற பிள்ளையை சாகடிக்கிறேயம்மா?” வருத்தம் தோய்ந்த குரலில் வினவினார்.
“என்ன மாமா, உயிரோடே இருக்கிற பிள்ளையை சாகடிக்கிறேனா?” ஆச்சரியமாகக் கேட்டாள்.
“ஆமாம்மா அங்க பார்” ..... அவர் சுட்டிக்காட்டிய திசையில் சாமுவேல் தனியாக உட்கார்ந்திருந்தான், எதையோ வெறித்துப் பார்த்தபடி! மெலிந்திருந்தான்!
“சாந்தி! சாமுவேல் 4 வயது குழந்தை! உன்னுடைய கவனிப்பு, அரவணைப்பு இல்லாம எப்படி இருக்கான் பார்த்தியா? ஜெபாவிற்கு உன் கவலை .. அதிகமாயிட்டது. அவனுடைய ஸ்கூல் பிரச்சனை வேறு, இந்த நிலைமையில் அவனுக்கு ஆறுதலா இருக்க வேண்டிய நீ, இப்படி அவனை வேதனைப்பட வச்சிட்டேயேம்மா!”
“அழாதேம்மா! ஜெபம் செய்! ஆண்டவரே ஆறுதல் தான்னு ஜெபி!” கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டுச் சென்றார்.“இயேசுவே!” என்று விம்மியபடி அறையினுள் ஓடினாள், முழங்காலில் நின்றாள். அழுதாள். வேதனையின் வடிகாலாய் கண்ணீர் வெள்ளம் புரண்டது. அவள் மனதில் சாந்தி நிலவியது. மறுநாளே பசுஞ்சோலைக்குப் புறப்பட்டாள். அங்கு ஒரு பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது என்பதை அப்பொழுது அவள் அறியாள்.
இதன் தொடர்ச்சி ஆணவத்தின் அட்டகாசம்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.