மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். சுதந்திரம் என்பது மற்றவர்களின் அதிகாரம் அல்லது செல்வாக்கு அல்லது குறுக்கீடு ஆகியவற்றால் பிடிக்கப்படாமல் தங்கள் விருப்பப்படி செயல்பட உரிமை என வரையறுக்கப்படுகிறது.
1) அரசியல் சுதந்திரம்:
இந்தியா அரசியல் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறது. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத்திற்கு மக்கள் தங்கள் சொந்த பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என இந்திய ஜனநாயகம் வெற்றிகரமாக உள்ளது. அமைதியான தேர்தல்களால் மக்களின் விருப்பம் தீர்மானிக்கப்படுகிறது. ஊழல் பழக்கவழக்கங்களால் சில மாறுபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.
2) சமூக சுதந்திரம்:
இந்தியாவின் சமூக சுதந்திரம் அரசியல் சுதந்திரம் போல் இல்லை. எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளது. பாலின விகிதம் பெண்களுக்கு எதிரானதாகவும் மற்றும் பல மாவட்டங்களில் கவலை அளிக்கும் வகையிலும் காணப்படுகின்றது. சாதியின் அடிப்படையில் வளங்கள் மற்றும் வாய்ப்புகளை இழப்பது நாட்டின் பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. நாட்டின் சில இடங்களில், மதவாரியாக சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது அச்சுறுத்தப்படுகிறார்கள்.
3) பொருளாதார சுதந்திரம்:
பொருளாதார சுதந்திரம் இருந்தாலும், ஆனால் ஏழைகள் தங்கள் பங்கைப் பெற இன்னும் போராட்டமாக தான் உள்ளது. வறுமை சுழற்சி நிரந்தரமாகத் தெரிகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைகளுக்கு அன்றாடம் உணவு கிடைக்கிறது என்ற நிலை இல்லை. பணக்கார வியாபாரிகளால் கொள்ளையடிக்கப்படுவதால் அவர்களுக்கான மானிய உணவு அவர்களுக்கு சென்றடைவதில்லை. அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. மதிய உணவு வழங்கப்படுவதால் இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த அதிகமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. ஏழைகளுக்கு தொழில்முனைவோராகும் வாய்ப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை.
4) ஆவிக்குரிய சுதந்திரம்:
"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:32) என்பதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போதித்தார்.
'உங்களை விடுதலையாக்கும்' என்ற சொற்றொடர் ஒரு நபர் அடிமைத்தனத்தில் இருக்கிறார், அவருக்கு விடுதலை தேவை என்று பொருள்படுவதை விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆம் உண்மைதான், ஜனங்களை சாத்தான் தனது தந்திரமான பொறிகள் அல்லது வலைகளில் சிக்க வைத்து அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான். "இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவான் 1:12). ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று, விசுவாசிப்பவர்களுக்கு தனது பிள்ளைகள் ஆவதற்கான ஆவிக்குரிய உரிமைகளை அவர் வழங்கியுள்ளார்.
நான் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக சுதந்திரத்தை அனுபவிக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran