தேவன் வல்லமையுடன் பயன்படுத்திய ஒரு மனிதன் இருந்தார். அவரது கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி, குணமடைந்து, மாற்றமடைந்தனர். மக்களின் புகழே அவருக்குக் கண்ணியாக இருந்தது; அவரிடம் பெருமை ஆட்கொண்டது. ஒரு நாள், கர்த்தராகிய இயேசுவைப் போல தானும் தண்ணீரில் நடப்பேன் என்று அறிவித்தார். அப்படி கடலில் காலை நடக்க எடுத்து வைக்கவும் தண்ணீரில் மூழ்கினார்; ஆனால் மற்றவர்களால் காப்பாற்றப்பட்டார். விசுவாசிகள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளும்படி பவுல் எச்சரிக்கிறார் (2 கொரிந்தியர் 13:5).
அர்ப்பணிப்புள்ள விசுவாசம்:
இது இரட்சிப்பு உள்ள விசுவாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விசுவாசம் தேவ வார்த்தையைக் கேட்பதன் மூலமும், இயேசுவை ஆண்டவராகவும் சொந்த இரட்சகராகவும் ஏற்றுக் கொள்வதன் மூலம் வருகிறது. "என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:9). கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் (ரோமர் 10:13). அவர்கள் மனந்திரும்புதலின் கனி, உதடுகளின் கனி (ஸ்தோத்திரம்) மற்றும் ஆவியின் கனிகளைக் கொடுப்பார்கள்.
செத்த விசுவாசம்:
“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபேசியர் 2:8). எனினும், இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் தேவனுடைய அன்பையும், நற்குணத்தையும், வல்லமையையும் உலகுக்குக் காட்டுகிறார். ஒரு நபர் நல்ல செயல்களில் ஈடுபடவில்லை என்றால், அப்போஸ்தலனாகிய யாக்கோபின் கூற்றுப்படி, அவருடைய விசுவாசம் செத்த விசுவாசமாகும் (யாக்கோபு 2:17). அனைத்து சீஷர்களும் சாட்சியாக இருக்க வேண்டும், நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், அருட்பணிக்காக ஜெபிக்க வேண்டும், நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.
விரோதமான விசுவாசம்:
பிசாசுகளும் தேவன் உண்டென்று அறிந்து நடுங்குகின்றன; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரைக் கண்டு நடுங்குகிறது என்பதை யாக்கோபு வெளிப்படுத்துகிறார் (யாக்கோபு 2:19). ஆனால் அவர்கள் கலகத்தனமாக சாத்தானுக்கு சேவை செய்கிறார்கள். இது ஒரு அறிவார்ந்த நம்பிக்கை, இது ஒருவித சமாதானத்தை அளித்தாலும், உள்ளான நபரை மாற்றுவதற்கு சத்தியத்தை அனுமதிக்காது. பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, மனந்திரும்ப மறுத்தான்.
மாயையான விசுவாசம்:
கடைசி நாட்களில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, தாங்கள் அற்புதங்களைச் செய்ததாகவும், பிசாசுகளைத் துரத்தியதாகவும் சொல்லுகிறவர்கள் அநேகர் இருப்பார்கள். "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" (மத்தேயு 7:22) என்று இயேசு கிறிஸ்து சொல்லுவார். அவர்கள் பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியாது. அவர்கள் தேவ சித்தத்தை நாடவில்லை அல்லது செய்யவில்லை என்பதால் அவர்களின் விசுவாசம் வீண் அல்லது மாயையானது.
நான் அர்ப்பணிப்புள்ள விசுவாசம் உள்ள நபரா
Author: Rev. Dr. J .N. மனோகரன்