ஒவ்வொரு நபரையும் அந்தந்த சூழலில் நீதியின் கருவிகளாகப் பயன்படுத்த தேவன் ஒரு தனித்துவமான வழியில் பயிற்சியளிக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதிலும், இஸ்ரவேல் தேசத்தை உருவாக்குவதற்கும், மனிதகுலத்திற்கு பத்துக் கட்டளைகளை வழங்குவதற்கும் ஒரு பெரிய வரலாற்றுப் பங்கை எடுக்க மூன்று வழிகளில் தேவன் மோசேக்கு பயிற்சி அளித்தார்.
பொதுவான பயிற்சி:
பார்வோனால் கொல்லப்படக்கூடிய மோசேயை தேவன் பாதுகாத்தார். தேவனின் திட்டத்தில், மூன்று மாத குழந்தையான மோசே பார்வோனின் மகளால் தத்தெடுக்கப்பட்டார். எகிப்தில் இரண்டு முறையான பள்ளிகள் இருந்தன; ஒன்று ஆசாரியர்களுக்கானது, மற்றொன்று அரசாங்கப் பணியில் சேருபவர்களுக்கானது. பயிற்சி காலம் 5 வயது முதல் 16 அல்லது 17 வயது வரை இருந்தது. மோசே எகிப்தின் அரச நீதிமன்றங்களில் பயிற்சி பெற்றார் மற்றும் அந்த காலக்கட்டத்தில் உலகின் மிக உயர்ந்த கற்றலைக் கொண்டிருந்தார் என்றும் சொல்லலாம் (அப்போஸ்தலர் 7:22). அநேகமாக, மோசே சுமார் இருபத்து மூன்று வருடங்கள் அரண்மனையில் சேவை செய்திருக்கலாம்.
போதகப் பயிற்சி:
மோசே ஒரு எபிரேய அடிமையைப் பாதுகாக்க நினைத்து ஒரு எகிப்திய கொடுங்கோலனைக் (சித்திரவதை செய்பவன்) கொன்றார். பின்பதாக இரண்டு எபிரேயர்களுக்கான பிரச்சனையில் இவர் நியாயம் தீர்க்க முயன்ற போது மோசேவின் கொலையை நினைவுபடுத்தியதால் (யாத்திராகமம் 2:11-15) மோசே அங்கிருந்து ஓடிப்போய் மீதியானில் சுமார் நாற்பது வருடங்கள் மேய்ப்பனாக தன் மாமனார் எத்திரோவின் ஆடுகளை மேய்க்க வேண்டியிருந்தது (யாத்திராகமம் 2:16,21-22). இந்தப் பயிற்சி மோசேயை இஸ்ரவேல் ஜனங்களின் மேய்ப்பனாக மாற்றுவதற்காக இருந்தது. வனாந்தரத்தில் ஆடுகளுக்கு உணவளிக்கவும், தண்ணீர் வார்க்கவும், மேய்க்கவும், பாதுகாக்கவும், சுத்தம் செய்யவும், வழிகாட்டவும் என மோசே சிரத்தையாய் பணி செய்ய நல்ல பயிற்சியாக இருந்தது. இஸ்ரவேலரை நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் வழிநடத்த மோசேக்கு இந்த அனுபவம் கைகொடுக்கிறது.
பரிசுத்தத்திற்கான பயிற்சி:
கர்த்தருடைய தூதனானவர் மோசேக்கு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். பின்னர் எகிப்துக்குச் சென்று இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும்படி அழைத்தார் (யாத்திராகமம் 3). அந்த உரையாடல் மோசேக்கு தேவனின் நாமத்தையும் பண்புகளையும் தெரிந்துகொள்ளும் படியாக இருந்தது. இந்த இறையியல் கல்வி அவருடைய பணிக்கும் ஊழியத்திற்கும் அடிப்படையாகிறது. தேவன் பரிசுத்தமானவர், சுயமாக இருப்பவர், அன்பானவர், இரக்கமுள்ளவர், வாக்குறுதியைக் கடைப்பிடிப்பவர், அருட்பணியாளர், இறையாண்மையாளர், நீதியுள்ள நியாயாதிபதி, சிருஷ்டிகர், எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் எங்கும் நிறைந்தவர் என்பதை அவர் கற்றுக்கொண்டார். தேவனை அறிந்தது, பார்வோனை பயமின்றி எதிர்கொள்ள மோசேக்கு உதவியது.
இறையாண்மையுள்ள தேவன் தனது மகிமைக்காக அனைத்து திறமைகளையும், வரங்களையும், தாலந்துகளையும் பயன்படுத்த முடியும்.
தேவன் என் வாழ்க்கையை எப்படி வடிவமைக்கிறார் என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்