தொடர் - 3
கடம்பவனம் பேருந்து நிலையத்தை அடையும், பஸ்ஸை விட்டு இறங்கினாள் கவிதா. அவளை நோக்கி வந்தார் அவளுடைய தந்தை தனராஜ், தந்தையைப் பார்த்தவளுக்கு ஒரு அதிர்ச்சி. திடகார்த்தமான சரீரம் மெலிந்து காணப்பட்டது. புன்னகை முகத்தில் இல்லை. சூட்கேஸை கவிதாவிடம் இருந்து வாங்கியவர்.
சிக்கிரம்வா பஸ்போய்விடும் எனக்கூறிக் கொண்டே வேகமாக டவுன்பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தார்,
ஆட்டோ நாடும் தந்தை ஏன் டவுன்பஸ்டாண்டுக்குப் போகிறார்?” எனப்புரியாமல் பின் தொடர்ந்தாள் கவிதா தாமரைக்குளம் பஸ்ஸில் ஏறினார். ஒன்றும் புரியாமல் கவிதாவும் ஏறினாள் அவளுக்கு குழப்பமாக இருந்தது”.
தாமரைக்குளம்”? அப்பா பிறந்த ஊர். ஆனால் கடம்பவனத்தில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தாத்தா பாட்டி இருந்தவரை, கவிதா சின்னப்பிள்ளையாக இருந்த போது எப்போதாவது போவார்கள். தாத்தா, பாட்டி, காலமான பின் அந்தப்பக்கம் போவதேயில்லை, இப்போது அங்கு ஏன் போகிறோம் என கவிதாவிற்குப் புரியவில்லை.
தாமரைக்குளம் ஒரு சிறிய கிராமம், ஒரு சில பெரிய வீடுகள் தவிர மற்றவை குடிசைகளும், சிறிய ஓட்டு வீடுகளுமாகக் காட்சியளித்தது. தாத்தாவீடு மிகப் பெரிய வீடு என்று கூறமுடியாவிட்டாலும் மிகச்சிறிய வீடு அல்ல. வீட்டு வாசலிலேயே. கவிதாவின் தாய் அவர்களை வரவேற்றாள் வாம்மா” கவிதா, பரிட்சையெல்லாம் நல்லா எழுதியிருக்கிறாயா?”' என்றாள் “உ...ம்' என்றாள் கவிதா.
அக்கா, அக்கா? சின்னத் தம்பி ஓடி வந்தான். பெரியவனைக் காணோம். பிஸ்கட் பேக்கட்டை அவன் கையில் கொடுத்தாள். அவன் ஓடி போய்விட்டான். வற்றலுக்காக கத்தரிக்காயை அறுத்துக் கொண்டிருந்த தங்கை சுதா :*வா அக்கா”! என்று கூறி விட்டு, மெளனமாக வேலையில் ஈடுபட்டாள். அப்பா முன்வராண்டாவில் கண்ணை மூடிக் கொண்டு ஈஸிசேரில் படுத்துவிட்டார். அம்மா சமையலறைக்குப் போய் விட்டார்கள். ஏதோ ஒரு பெரிய
சோகமயமான மெளனமாக வீடு காட்சியளித்தது. அப்பா முகத்தை பார்த்தாலே எதையும் கேட்கத் தோன்றவில்லை கவிதாவிற்கு. அம்மாவை நெருங்கினாள். விவரம் அறிந்தாள் அவளால் நம்பமுடியவில்லை.
மாலை நேரம் பின் வாசப்புறம் அமர்ந்தாள். நீலவானை உற்றுப் பார்த்தாள். வகை வகையாய் உருவமைத்துக் கலைந்தோடும் மேகக் கூட்டங்களை இமைக் கொட்டாமல் பார்த்தாள். கண நேரத்தில் கலையும் முகில் உருப்போன்றது தானோ வாழ்வின் நிகழ்ச்சிகள்? அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்தகால நிகழ்ச்சிகள் மனத்திரையில் படமாகியது. அப்பாவின் லாட்டரி சீட்டுப் பைத்தியம் குடும்பத்தை லாட்டரி (தரித்திரம்) அடிக்க வைத்து விட்டதே எனக் கலங்கினாள். முதலில் 100ரூ லாட்டரி சீட்டில் அப்பாவிற்கு விழுந்தபோது ஒரே மகிழ்ச்சி. அடுத்து லாட்டரியில் 1000 ரூபாய் விழுந்தது. ஒரே கொண்டாட்டம் அனைவருக்கும். அப்பாவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தம்பி தங்கைகளுக்கு புத்தாடைகள், கவிதாவிற்கு கைக்கடிகாரம் என தாம்தூம்பட்டது வீடு. ஆனால் இன்று இருமுறை தன்னை அதிர்ஷ்டம் தேடி வந்துவிட்டதால் நிச்சயம் மூன்றாவது முறை பரிசு விழும், தான் லட்சாதிபதி ஆகிவிடலாம். தொழிலை இன்னும் விருத்தி செய்தால் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் எனப் பகற்கனவு கண்டார். கட்டுக் கட்டாக லாட்டரி சீட்டு வாங்கினார். பைத்தியமாகிவிட்டார். கடையில் கவனிப்புக் குறைந்தது. சரக்குகள் குறைந்தன. பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. லட்சாதிபதியாக ஆசைப்பட்டவர் பிச்சாதிபதி ஆனார். குடும்பம் கிராமத்தில் குடியேறியது,“பணம் மாயை” என குளோரி கூறியது செவிகளில் வெண்கல மணியோசை போல் முழங்கியது. பணப் பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை, செல்வப் பிரியன் செல்வப் பெருக்கினால் திருப்தியடைவதில்லை, இது மாயையே! என்ற பிரசங்கியின் கூற்றை திரும்ப நினைத்தாள்.
நாட்கள் நகர்ந்தன. ஒவ்வொரு நாளையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது போலிருந்தது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாயின. கவிதா தேறவில்லை என சொல்லவும் வேண்டுமோ? குடும்பக்கஷ்டத்தை உனக்குத் தெரிவிக்காமல், நீ கஷ்டப்படக் கூடாதுன்னு தாராளமாக பணம் அனுப்பினேனே அதுதான் இப்படி பெயிலாயிட்டியா? எல்லாத்தையும் வீணாக்கிட்டேயே கொஞ்சமாவது அறிவிருக்கா?! தந்தையின் கடுஞ்சொற்கள் கவிதாவை நிலைதடுமாற வைத்தன. தாயின் கண்ணீர் அவளை கலங்க வைத்தது. பின் வராந்தாவில் அமர்ந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள். நான் மட்டும் தான் எல்லாத்தையும் வீணாக்கிட்டேனா? இவர் லாட்டரி லாட்டரி என்று இருக்கிற சொத்தையெல்லாம் அழிச்சிட்டு குடும்பத்தை நடுத்தெருவில் விட்டிருக்கார். இவர் மேலே தப்பில்லையோ ?”” கவிதாவின் மனம் வாதிட்டது.
காலேஜுக்குப் படிக்கத்தானே அனுப்பினாங்க படிக்காதது உன் குற்றம் தானே'' அவள் மனசாட்சி குடைந்தது. அன்று முழுவதும் சாப்பிடவில்லை. அழுதுகொண்டிருந்தாள். எதையோ சமைத்து எப்படியோ சாப்பிட்டு காலம் போக்குவது அவளுக்குப் பிடிக்ககவில்லையே, அவளுடைய சொர்க்கமே தற்போது பின்வாசல்தான். அடர்ந்த மிகப் பெரிய இரு வேப்பமரம் உண்டு. அதில் கூடு கட்டி வாழும் பறவைகள் அவளுக்கு ஆறுதல் அளித்தன. அவளது காலேஜ் வாழ்வை எண்ணி கனவு கண்டு மகிழ்வாள். அடுத்த வினாடியே, அது மாயையான மகிழ்ச்சியாக மறைந்ததை எண்ணி வேதனைப்படுவாள். தனது வாழ்க்கை சோக கீதமாக மாறியதை உணர்ந்தாள். எதிர்காலம் சூனியமாகக் காட்சியளித்தது.
இதன் தொடர்ச்சி ஓர் ஒளிக்கீற்று! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.