கோபுர தீபம்

தொடர் - 5

ஊழிய அழைப்பு :

““ஆரோனைப் போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்திற்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.'' (எபி. 5: 4), ஆம், இந்தக் கனமான ஊழியத்சைச் செய்யும்படி சகோ. பேட்ரிக்-ஐ தேவன் அழைக்கிறார்.

மோசே தான் பெரியவனான போது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து அநித்தியமான பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்து கொண்டு இனிவரும் பலன் மேல் நோக்கமாயிருந்து எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல உறுதியாயிருந்து ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தை விட்டுப் போனான். (எபி. 11 : 24-27) வேதத்திலே தேவ அழைப்பைப் பெற்ற மனிதர்களைக் காணும்போது அழைப்பை சிரமேற்கொண்டு வெற்றியுடன் வாழ்ந்து முடித்தவர்களில் மோசே ஒருவர்.

அதைப் போலவே தேவ அழைப்பு சுசீலாவின் கணவரை நாடி வந்தது. சகோ. பேட்ரிக் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் மேனேஜராக பணியாற்றி வந்த நேரம். நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவின் பொதுச் செயலாளராக இருந்த சகோ. எமில் ஜெபசிங் விலகினார். பொதுச் செயலாளராக இருக்க சகோ. பேட்ரிக்கை, ஜெபக்குழுவினர் வற்புறுத்தினர். தேவ அழைப்பு தன்னை நோக்கி வருவதையுணர்ந்தார். தன் மனைவியிடம் கூறினார். சுசீலாவின் மனதில் கலக்கம்.

ஏன்? ஊழியத்தின் அருமை தெரியாதவர்களா? அல்லது ஊழியத்தின் அவசியத்தைப் பொருட்படுத்தாதவர்களா? ஊழியத்திற்குக் கொடுத்துப் பழகாதவர்களா? இல்லையே! கோவில்பட்டியில் இருந்தபோது, ஒரே காரில் 14. பேர் பயணம் செய்து சுவிசேஷ ஊழியத்திற்குச் சென்றவர்கள்தானே! சகோ. பேட்ரிக் ஓய்வு நேரத்தை எல்லாம் ஊழியத்திற்குக் கொடுக்க பேருதவியாய் இருந்தவர்கள்தானே. “தசமபாகம் மட்டும்தான் கர்த்தருக்கென்று' வரம்பு வைக்காமல் அள்ளித் தந்தவர்கள்தானே!

கோடையில் பணத்தோடு கணவர் பெரிய மலைக்குப் புறப்படும்போது கணவனுக்கு விரோதமாக முறுமுறுக்காதவர்கள்தானே! ஊதியம், வைப்புநிதி இவற்றையெல்லாம் ஊழியத்திற்குக் கொடுத்தவர்கள்தானே! கட்டில், மெத்தை எதுவும் வீட்டில் இல்லாதபோதும் மலர்ந்த முகத்தோடு அதை எல்லாம் ஏற்றவர்கள்தானே! ஏன் இப்பொழுது தயக்கம்? 

அனுமதி கேட்டு நிற்கும் கணவருக்கு ''எனக்குத் தெளிவு கிடைக்காமல் போக முடியாதுன்னு சொல்லுங்க.” அமைதியாக கண்ணீரோடு பதில் கூறி விட்டார்கள்.

“திருமணத்திற்கு முன்பே உன்னைக் கேட்டுத்தானே திருமணம் செய்தேன்'” என்று அக்காவின் கணவர் எரிந்து விழுந்திருக்கலாம். ஆனால் கிறிஸ்தவ அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, ஊழியம் செய்து வரும் சகோதரர் பேட்ரிக், தன்மனைவியின் தியாகங்களை உணர்ந்தவர் அல்லவா?
திருமறை கூறுவதுபோல் தன் மனைவியை தன் சொந்த சரீரமாகப் பாவித்து அன்பு செலுத்தி வருபவர் அல்லவா?
மூத்த மகன் ஷலோமுக்கு வயது 14. அதற்கு கீழ் 3 பிள்ளைகள் அல்லவா? எதை எதையெல்லாம் யோசித்தார்களோ என்னவோ? கண்ணீர், கண்ணீர். சகோதரியின் கண்கள் கண்ணீர் சிந்துவதால், அவர்கள் கணவரும் கண்ணீர் சிந்துவார்கள். இரவெல்லாம் தலையணை நனையும். என் பின்னே வாருங்கள். உங்களை மனுஷரைப். பிடிக்கிறவர்களாக்குவேன்.!'! (மத். 4:19) என்ற. வசனத்தின் மூலம் எம்பெருமான் இயேசு சசீலாவுடன் பேச, அவர்கள். கீழ்ப்படிந்தார்கள். கண்ணீர் மறைந்தது. களிப்போடு அனுமதி கொடுத்தார்கள்.

கர்த்தர் பேட்ரிக் அவர்களோடு “ஒரு இராஜினமா அல்ல. பல இராஜினமாக்கள் செய்ய வேண்டும். பாலத்தை உடை. உன் நம்பிக்கை என் மீது. மட்டுமே இருக்க வேண்டும். தேவனது தெளிவான குரலுக்கு அடிபணிந்தார்.

1978-ல் தன் வேலையை இராஜினமா செய்தார். வருங்கால வைப்புநிதி அப்பொழுது சுமார் 1 லட்சம் வந்தது. அந்தத் தொகையையும், தான் போட்டிருந்த இன்சுரன்ஸ், கார் விற்ற தொகை அனைத்தையும் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவிற்குக் கொடுத்தார். தன் கணவர் வீட்டுச் செலவிற்குக் கொடுத்த தொகையிலிருந்து சிறுகச் சிறுக சேமித்து சகோதரி ரூ. 6000/- வைத்திருந்தார்கள். “இந்தப் பணம் என்னுடையது. நான் தரமாட்டேன்'' சிரித்துக் கொண்டே கூறிவிட்டார்கள். பேட்ரிக் அவர்களும் வற்புறுத்தவில்லை. இருவருக்குமிடையில் சண்டை, சச்சரவு என்று வந்ததே இல்லை.

ஒருமுறை அவர்களுடைய அருமை மகள் மோனிகா சாட்சி கூறும்போது “எங்களுடைய அப்பா, அம்மாவிற்கிடையில் சண்டை வந்ததே இல்லை. நாங்கள் அப்படி பார்த்ததே இல்லை'' என்று குறிப்பிட்டார்...

சகோதரி தன் சிறுசேமிப்புப் பணத்தைத் தர மறுத்ததை அவர்களுடைய கணவர் பெரிதுபடுத்தவில்லை. ஊழியத்தைக் குறித்து தெளிவு ஏற்படுத்திய தேவன், இதையும் செய்துவிடுவார் என நம்பிக்கையோடு அமைதியாக இருந்துவிட்டார்கள். ஆனால் ஓரிரு நாட்களிலேயே அந்த ரூ. 6000/-ஐயும் சிரித்துக் கொண்டே கொண்டு வந்து கணவர் கரத்தில் கொடுத்துவிட்டார்கள். சகோதரியின் பெற்றோர் போட்டுவிட்ட 50 பவுன் நகைகளில் 10ல் ஒரு பகுதியாகிய 5 பவுன் நகையை ஊழியத்திற்கு கொடுத்துவிட்டார்கள். 1978-ல் பிள்ளைகளோடு ஊழியத்திற்கான அர்ப்பணிப்பு டேனீஸ்பேட்டில் நடந்தது. பின் 1978-லேயே சென்னை எஃமோரில் உள்ள ஆண்ருஸ்கர்க் ஆலயத்தில் பிஷப் சுந்தர் கிளார்க், டாக்டர் சாம் கமலேசன் ஆகியோர் சகோ. பேட்ரிக் அவர்களை பிரதிஷ்டை செய்தார்கள்.

விசுவாச வாழ்வும், தாயன்பும் :

விசுவாச வாழ்வு தொடங்கியது. சகோ. பேட்ரிக் வாங்கிக் கொண்டிருந்த ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கே ஊதியமாகப் பெறும் நிலை. வீட்டு பட்ஜெட்டுகள் குறைந்தன. உள்ளதை வைத்து திருப்தியாக வாழ குடும்பத்தினர். அனைவருமே முன் வந்தனர். அநேகமாக ரேஷன் சாமான்களை உபயோகித்தனர். உள்ளதை அனைவரும் பகிர்ந்து உண்டனர். ஒருமுறை சகோதரர் தனபால் இவர்கள் வீட்டிற்கு வந்தார். இவர் இந்து மார்க்கத்திலிருந்து இயேசுவை ஏற்றுக் கொண்டு, தேவ அழைப்பை ஏற்று ஊழியத்திற்கு வந்தவர். இதனால் பெற்றோரால் வெறுக்கப்பட்டு, விரட்டப்பட்டவர்கள். பெற்றோரை மறக்க அவரால் முடியவில்லை! ஆனால் அதேசமயம் மெய்யான தெய்வத்தை அறிந்த பின், அவரை ஒதுக்கிவிட்டு, மறுதலித்துச் செல்லவும் மனம் கேட்கவில்லை.

பெற்றோர் பொருளைக் காட்டிப் பார்த்தனர். பெண்ணைக் காட்டிப் பார்த்தனர். ஒன்றும் தனபாலை தேவ அன்பை விட்டுப் பிரிக்கவில்லை! தேவ கட்டளைக்கு அடிபணிந்தார். துணிந்து ஊழியத்தில் இறங்கினார். ஆனாலும் தாய் அன்பிற்கு ஏங்கினார். தன் பெற்றோரைப் பார்க்க வேண்டும். தன் தாயருகே அமர்ந்து பேச வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதெல்லாம் சகோதரி சுசீலா வீட்டிற்கு வருவது சகோதரர் தனபாலின் வழக்கம். நல்ல விசுவாசமான வார்த்தைகள், தீர்க்கதரிசனங்களை, வாக்குத்தத்தங்களைக் கூறி உற்சாகப்படுத்துவது சகோதரியின் சிறப்பியல்பு. ஞானி சாலொமோன், “*தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள். தயையுள்ள போதகம் அவள் நாவின் கீழ் இருக்கிறது. (நீதி. 31:26) என குணசாலியான ஸ்திரியைப் பற்றிக் குறிப்பிடுவது சகோதரிக்கு அப்படியே பொருந்தும். தங்கள் நாவினால் அநேகருடைய நெஞ்சங்களில் சிறப்பிடம் பெற்றார்கள் சகோதரி சுசுலா. நாதன் இயேசுவுக்காய் வாழந்திட, நானிலத்தோரை ஆர்ப்பாட்டமின்றி ஆயத்தம் செய்தார்கள். மேடையேறி சகோதரி முழங்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அநேகர் இதய மேடையில் முழங்கினார்கள். இரகசியமாய் நடந்தது. இரட்சிப்பின் வேலை என்றால் மிகையாகாது. சகோதரியைப் பார்த்துப் பேசிவிட்டு தனபால் புறப்பட்ட போது, “இருங்க தம்பி சாப்பிட்டுப் போகலாம்'” என்றார்கள். சகோ. பேட்ரிக், பிள்ளைகள் அனைவரோடும் அமர்ந்து உணவருந்த ஆரம்பித்தார், தனபாலன். அனைவருக்கும் இரு சிறு ரொட்டித் துண்டுகளுடனும், கொஞ்சம் சாதம் பரிமாறினார்கள். இருந்தது அவ்வளவுதான். கொஞ்சம் உணவு இருந்தாலும் கூட, அதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பண்பை குடும்பத்தினர். அனைவருமே பெற்றிருந்தனர். சகோதரியின் இரண்டாவது மகன் ஜிம் நகைச்சுவையாகப் பேசுவதில் சிறந்தவன். ஜிம் நகைச் சுவையுடன் உரையாட சகோதரர் தனபால் மகிழ்வோடு அந்த உணவை அருந்தினார்.

“நான் எத்தனையோ வீடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனாலும் அன்று அக்கா கொடுத்த உணவிற்கு ஈடு எதுவுமில்லை'' என சகோதரர் உணர்ச்சி பொங்கக் கூறுகிறார்.

ஊழியத்திற்கு வந்தவுடன் 'பட்டுச்சேலை இனி கட்டுவதில்லை' என முடிவெடுத்தார்கள். சகோதரியிடம் அதிகம் பட்டுச் சேலைகள் உண்டு. ஆனால் ஊழியத்திற்கு வந்தவுடன் எளிய வாழ்க்கையை சிரமேற்கொண்டு வாழத் தலைப்பட்டனர். பட்டுச் சேலைகளை பிறருக்குக் கொடுத்துமிருக்கலாம். ஒருவர் தானே வலிய வந்து, ''நீங்கள்தான் பட்டுச்சேலை கட்டமாட்டீர்களே! எனக்குக் கொடுங்கள்!'” என்று கேட்டு வாங்கிச் சென்றார். இதையறிந்த சில அன்புள்ளங்கள், சகோதரியை அன்போடு கடிந்து கொண்டனர். “நீங்கள் கட்டாவிட்டாலும், உங்களுக்கு பெண்பிள்ளை இருக்கிறது. பத்திரமாய் இருக்கட்டும்” என்று அன்போடு கடிந்து கொண்டனர். இல்லையேல் அத்தனை பட்டுச்சேலையும் பறந்து போயிருந்தாலும் அதில் ஆச்சரியமொன்றுமில்லை.

டாக்டர் சாம் கமலேசன் அவர்கள் குடும்பத்தினர் கொடுக்கும் புடவை போன்ற அன்புப் பரிசுகளை மற்றவர்களிடம் காட்டி ஆனந்தப்படுவார்கள். “பட்டுச்சேலை கட்டுவதில்லை என்றேன். என் தேவன் எனக்கு “பாரின் சேலை'யாகக் கொடுக்கிறார் என்று மகிழ்ச்சியோடு கூறுவார்கள்... புரசைவாக்கம் 92, தானா தெருவில் குடியிருக்கும்போது சகோதரர் கிங்ஸ்லி
அவர்கள் குடும்பம் கீழேயும், சகோதரி சுசீலா குடும்பம் மேல் மாடியில் குடியிருந்தார்கள். தண்ணீர் கஷ்டம் அதிகம். சின்ன டிரம்மில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பிள்ளைகள் படியில் ஏறிச் செல்வர்.

பங்களாவில் வாழ்ந்து, காரில் பயணம் செய்து, வேலைக்காரர்கள் வேலை செய்ய, சொகுசு வாழ்வு வாழ வேண்டியவர்கள், சின்னஞ் சிறிய வீட்டில் தங்கி போதாத உணவுகளை சில வேளைகளில் உண்டு, வேலை செய்து கஷ்டப்பட்டார்கள். ஆனால் யாரும் கவலைப்பட்டதாகவோ கண்ணீர் சிந்தியயாகவோ தெரியவில்லை. களிப்போடு வேலைகளைச் செய்தனர்.
பெரும்பாலும் வீட்டு வேலை முழுவதையும் சகோதரியே பார்க்க வேண்டிய சூழ்நிலை சாதாரண மண்ணெண்ணெய் அடுப்பு. சகோதரி அனைத்து வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்துவிட்டு ஊழியத்திற்கும் சென்று விடுவார்கள்.

ஒரு முறை உணவு சமைப்பதற்குக் கூட வழி இல்லாத காரணத்தால் வீட்டிலிருந்த மேஜைக் கடிகாரத்தை விற்றுவரும்படி கண்ணீரோடு மகனிடம் கொடுத்தனுப்பினார்கள். அம்மாவின் கண்ணீரை மகனால் . புரிந்துகொள்ள முடியவில்லை. பின்பு ஒருமுறை தன் தாயும் தகப்பனும் ஆசை ஆசையாக எடுத்துக் கொடுத்திருந்த பட்டுப்புடவைகளின் சரிகைகளை விற்று செலவுகளை சமாளித்தனர். சகோதரியின் கண்கள் கலங்கின. மனம் என்ன, என்ன எண்ணியதோ நாமறிவோம். ஆனாலும்... தன் கணவரிடம் குடும்பக் கஷ்டங்களை எடுத்துக் கூறுவது கிடையாது. எதையும் தாங்கும் இதயமாகத் திகழ்ந்தார்கள். மிஷனரிகளுக்கு ஊதியம் வழங்க, பிள்ளைகளின் கல்வித் தேவைகளை நிறைவேற்ற சகோதரியின் ஆபரணங்கள் வங்கிகளுக்கு விஜயம் செய்யும்.

மருத்துவமனை ஊழியமும் ஜெபக்கூட்டமும் :

அயனாவரத்திலுள்ள சென்னை வேதாகம ஐக்கிய சங்கத்தின் தலைவர் உயர்திரு. . சாலமோன் - சுகந்தி அவர்களின் மகள் திருமதி லில்லி ரூபன் அவர்கள் வீட்டில் ஜெபக்கூட்டங்கள் நடத்தினார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை மருத்துவமனை ஊழியத்திலும், மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வேதாகம போதனையும், 3 வது செவ்வாய்க்கிழமை உபவாச ஜெபமும், 4 வது செவ்வாய்க்கிழமை வீடுகள் சந்திப்பும் நடந்தது.

ஜெபக் கூட்டங்கள் நடக்கும்போது வராதவர்களை அறிந்து அவர்கள் வீட்டிற்குச் சென்று கரிசனையோடு விசாரித்து, அவர்கள் பிரச்சனைகளுக்காக ஜெபித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி வருவார்கள்.

சகோதரி முதல் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கெல்லாம் வெயில், மழை இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அய்யனாவரத்திற்கு வந்து விடுவார்கள். சகோதரி லில்லி அவர்களும், சகோதரி சுசீலா அவர்களும் அய்யனாவரம் இரயில்வே மருத்துவ மனைக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி ஜெபித்து விட்டு
வருவார்கள். இந்த மருத்துவமனையில் பல இடங்களிலிருந்து வந்து சிகிச்சை பெறுவார்கள். சொந்த ஊர்களை விட்டு, வியாதியோடு, மனவேதனையோடு இருக்கும் மக்களுக்கு சகோதரிகளின் வருகை தேவதூதன் வருகை போலிருக்கும். ஆறுமாதம், மூன்று மாதம் என படுக்கையிலிருக்கும் நோயாளிகள் இவர்களை வரவேற்று, '*போனமாதம் எங்களுக்காக
ஜெபித்தீர்கள். ஆண்டவர் எங்களுக்கு இந்தத் தொந்தரவிலிருந்து விடுதலை கொடுத்தார். இந்த மாதமும் எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள்'” என்று அன்போடு அழைப்பார்கள்.

சிலர், “நீங்கள் போனமாதம் எங்களுக்காக ஜெபித்தீர்கள். கடவுள் எங்களுக்கு சுகம் கொடுத்தார். நாங்கள் வீட்டிற்குப் போகிறோம்.'” என மகிழ்ச்சியோடு சாட்சி கூறுவார்கள். சகோதரி சுசீலா ஜெபத்தில் தொண்டை புற்றுநோய் சுகமாகியுள்ளது. அறுவை சிகிச்சை நோயாளிகளுக்காக பாரத்தோடு ஜெபிப்பார்கள். அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இவர்களுக்கு. நன்றி கூறுவார்கள். 

பாலைவனப் பயணிகளுக்கு பாலைவனச் சோலையாக இவர்கள் மருத்துவமனை ஊழியம் அமைந்தது. இந்த ஊழியம் சகோதரியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஊழியமாகும்.

சகோதரி சுசீலாவிற்கு வயிற்றுவலி வர ஆரம்பித்தது. அதைப் பொருட்படுத்தாமல் சாப்பிடாமலேயே ஊழியத்திற்கு வருவார்கள்.

பாடியில் ஊழியம் :

பாடிப்பகுதியில் ஊழியம் நடைபெற ஆரம்பித்தது. சகோதரி சாந்தி வில்சன் அவர்கள் இல்லத்திலும், சகோதரி எலிசபெத் ஞானப்பிரகாசம் அவர்கள் இல்லத்திலும் ஜெபக் கூட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன. செவ்வாய்க் கிழமை பாடியிலுள்ள தூய மிகாவேல் சி.எஸ்.ஐ. ஆலயத்திலும், புதன்கிழமை திருமதி. விஜிலா ஹெலன் அவர்கள் வீட்டிலும் கூடி ஜெபித்து வந்தனர். குமரன் நகர் வீட்டில் சகோதரி சுசீலாவின் குடும்பம் குடியேறவும், கொரட்டூர், சகோதரர் ஜிம்சன் அவர்கள் ஆலோசனையின் பேரில் குமரன் நகரில் சகோதரி சுசீலா வீட்டில் புதன் கிழமை தோறும் உபவாசித்து சகோதரிகள் கூடி ஜெபிக்க ஆரம்பித்தனர். சகோதரி எஸ்தர் சந்தோஷ்ராஜ் அவர்கள் சகோதரியின் அன்பால் ஆட்கொள்ளப்பட்டார்கள். ஜெபக்கூட்டம் வளர்ந்தது. ஊழிய காரியமாக கருத்தூன்றி ஜெபிக்கலாயினர். ஜெபம் மதியம் 12.00 மணி முதல் மாலை 4.00. மணி வரை இருக்கும்.

ஜெப வாஞ்சை :

சகோதரியையும் ஜெபத்தையும் வேறு பிரிக்க முடியாத அளவு அவர்கள் வாழ்வு அமைந்திருந்தது. எங்கு ஜெபித்தாலும், எத்தனை பேர் ஜெயித்தாலும், எவ்வளவு நேரம் ஜெயித்தாலும், அவர்கள் நெடு முழங்காலிலேயே இருப்பார்கள். தொடர்ந்து 6 மணி நேரம் கூட அவர்கள் நெடு முழங்காலில் நின்று ஜெபிப்பார்கள். அறை கூவலை கையில் ஏந்தியபடி அதிகாலையில் முழங்காலில் நின்று ஜெபிப்பார்கள்.

மிஷனரிகள் பட்டியல் வைத்து ஜெபிப்பார்கள். ஜெபக்குறிப்புகளுக்கெல்லாம் ஒழுங்காக ஜெபிப்பார்கள். வேலை செய்யும் போதெல்லாம் ஜெபிப்பதாலும், அடிக்கடி ஜெபக்குறிப்புகளை உபயோகித்ததாலும் ஜெபக்குறிப்புத்தாட்கள் அடிக்கடி கிழிந்து விடும். மிஷனரிகள் வந்தால், அவர்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் கேட்டு அறிந்துகொண்டு அவர்களுக்காக ஜெபிப்பார்கள். பணித்தளங்களைப் பற்றிய காரியங்களுக்காக ஜெபிப்பார்கள். மறுமுறை அதே மிஷனரிகளை அவர்கள் சந்திக்கும்போது, ஏற்கனவே அவர்கள் கூறியிருந்த ஜெபக்குறிப்புகளைப் பற்றிக் கூறி பதில் கிடைத்ததா? என அன்போடு விசாரிப்பார்கள்.

இளம் மிஷனரி சகோதரிகளை 'ஏண்டே எப்படி இருக்க?'' என்று “டேய் போட்டு உரிமையோடும், பாசத்தோடும் அவர்கள் பேசும் அழகே, அழகு! மிஷனரி சகோதரர்களை, :*தம்பி! நல்லாயிருக்கீங்களா?'” என அன்போடும், மரியாதையோடும் விசாரிப்பார்கள்.

எழுப்புதலும் எதிர்ப்பும் :

ஊழியம் வளர்ந்தது. “குமரன் நகரில் தெருத்தெருவாக, வீடு வீடாகச் சந்திக்க வேண்டும். ஒலி பெருக்கி வைத்து சுவிசேஷம் அறிவிக்க வேண்டும். குமரன் நகர் குமாரன் நகராக மாற வேண்டும். இங்கு ஆலயம் கட்டப்பட வேண்டும். ஆலயமணி ஓசை ஒலிக்க வேண்டும்.'” சகோதரி தன்னுடைய இந்த ஆத்ம தாகத்தை, ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஜெப அங்கத்தினர்களோடு பகிர்ந்து கொண்டார். தன் ஆன்ம தாகத்தை ஆண்டவருக்குத் தெரிவித்து ஜெபத்தில் கரைந்தார்கள்.

சகோதரி குடியிருந்த வீட்டை அனைவரும் 'சிங்கப்பூரான் வீடும்' என்றும், *பேய்வீடு' என்றும் அழைத்து வந்தனர். சிங்கப்பூர் சென்று வந்தவர் கட்டிய வீடு போலும். எனவே சிங்கப்பூரான் வீடு என அழைக்கப்பட்டது. மேலும் அந்த வீட்டில் பிசாசின் தொந்தரவுகள் இருந்ததாகக் கூறுவார்கள். சிறுபிள்ளை கூட “பேய்வீடு' என்றுதான் கூறுவார்கள். அந்த வீட்டை ஒரு கிறிஸ்தவர் விலைக்கு வாங்கினார். அந்த வீட்டிற்கு சகோதரி குடிவந்ததும் அங்கு தேவனுக்குப் பிடித்தமில்லாதவற்றை, விக்கிரக ஆராதனைக்குரியவற்றை எல்லாம் அப்புறப்படுத்தினார்கள். அவருடைய இந்தச் செயல் சுற்றியிருக்கிற மக்களிடையே ஒரு கசப்பு உணர்வை தோற்றுவித்தது.

பிசாசின் செயல்களை சகோதரியால் உணர முடிந்தது. மின்பட்டன், மீட்டர் பெட்டி, திடீரென தீ பற்றுவதையும், பின் தானாக அனைவதையும் சகோதரி பார்த்தார்கள். பயந்துவிடவில்லை. ஜெபத்தை அதிகப்படுத்தினார்கள். வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சம்பழம், இளநீரில் மந்தரித்த அடையாளம், இலை இவை கிடக்க ஆரம்பித்தன.

எலுமிச்சம் பழமும் ஏந்திழையாளும் :

ஒருநாள் சகோதரி தன் வலது கையில் வேதப்புத்தகத்தை ஏந்தியபடி ஜெபித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் இருந்த அறைக்கு அருகே வலதுபுற சுற்றுச்சுவருக்கு வெளியே இருவர் பேசும் அரவம் கேட்டது.

ஒருவன் '*போடுடா'' என்று கூற, மற்றவன் போட முடியலைடா!”' என்று பதில் கூறும் சத்தம் கேட்டது. ஒரு எலுமிச்சம்பழம் சன்னல் வழியாக இவர்கள் அறைக்கு வந்தது. கையில் வேதப்புத்தகத்தை ஏந்தியபடி, சகோதரி முழங்காலில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அறைக்குள் வந்த வேகத்திலேயே எலுமிச்சம்பழம் திரும்பிச் சென்றது. அடுத்த கனம் வெளியே கூச்சலும், குழப்பமும் காணப்பட்டது.

சகோதரி வெளியே வந்து பார்க்க, ஒரு வாலிபன் கீழே மயங்கி விழுந்திருந்தான். இவன்தான் எலுமிச்சம்பழத்தை வீசியிருக்க வேண்டும் என நிதானித்தவர்கள், எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல்,

“*வீட்டுக்குள்ளே கொண்டு வர்றீங்களா? ஜெபிப்போம்!'” என அன்புடன் அழைத்தார்கள். இயேசு கிறிஸ்துவை கெத்சமெனேயில் ரோமப் போர்ச் சேவகர்கள் பிடித்தபோது, அவரோடிருந்தவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியரின் வேலைக்காரனை வலது காதை வெட்டிய வேளையில், இயேசு காதை 'வெட்டியவனின் செயலைப் பாராட்டவில்லையே! இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, வேலைக்காரனுடைய காதைத் தொட்டு சுகமாக்கினாரே! (லூக் 22-50) அவருடைய பிள்ளையாகிய சுசீலாவும் அவர் அடிச் சுவட்டைப் பின்பற்றுவதில் ஆச்சரியமென்ன? “*தனக்கு எதிராகப் பழத்தைத் தூக்கி எறிந்தானே நன்றாகப்படட்டும்'” என்று எண்ணாதபடி, தானே வலியப் போய் கூப்பிடுகிறார்கள்.

அந்தீக் கூட்டமோ? அக்காவை சிடுசிடுத்த முகத்துடன் பார்த்துவிட்டு பதில் கூறாமல் அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் ஒவ்வொரு புதன் கிழமையும், சகோதரி வீட்டில் ஜெபம் நடக்கும் வேளைகளில், அந்தப் பையன், தன் வீட்டிலே “என்னை இயேசுகிட்ட கூட்டிக் கொண்டு போ”! என்று சப்தம் போடுவான். அவன் தகப்பனாரோ, ''உன்னை சாகக் கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர இயேசுகிட்ட கொடுக்க மாட்டேன்'' என நெஞ்சை கல்லாக்கியவராக பதில் கொடுப்பார்.
என்னவோ  வாழ்த்தறான். வாழ்த்திவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடாமல், அவன் தவற்றை சுட்டிக்காட்.டவும், இயேசு கிறிஸ்து ஒருவரே, மெய்யான தெய்வம் என்பதை எடுத்துக்கூறவும், அவர்களுடைய வைராக்கியமான மனது தயங்கியதே இல்லை.

பச்சை இலையும் பட்ட மரங்களும் :

ஒரு சிலர் சகோதரி வீட்டிற்கு வந்து மருந்துக்கு என சில இலைகளைக் கேட்டார்கள். சகோதரியும் பறித்துக் கொள்ளும்படி அனுமதி கொடுத்தார்கள். இலைகளைப் பறித்துக் கொண்டு வெளியே செல்லும் போது, கதவருகே வந்தவர்கள். “இதோட நீ தொலைஞ்ச!'' என கத்திவிட்டுப் போனார்கள். அவர்கள் பறித்த இலைகளை வைத்து என்ன செய்தார்களோ? அதன்பின்
தோட்டத்திலிருந்து 2, 3 மரங்கள் பட்டுப்போயின. மாதுளம் மரமும் பட்டுப்போயிற்று. சகோதரியின் உடமைகளுக்கு சேதம் வந்ததே தவிர சகோதரியைத் 'தொட இயலவில்லை.

சகோதரி சுசீலா வெளியே செல்லும்போது, தனக்குப் பின் ஆள் நடந்து வருவது போல் உணர்வு இருக்குமாம். பின் '*மரியாதையாய் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிடு'' என்று சப்தத்தையும் கேட்டார்கள். ஆனால் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

ஒருமுறை இவர்கள் பஸ்ஸை விட்டு இறங்கவும், இவர்கள் பின்னால் ஒரு பூசாரி, “ரொம்ப குதி, குதின்னா குதிச்சுகிட்டு அலையற. உன்னை என்ன செய்யறேன் பார். 500 செங்கல் வச்சிருக்கோம்ன்னு நினைக்கிறையா? பறத்திடுவேன்... பறத்தி!'” என்று கத்தியிருக்கிறான். யாரையோ திட்டுகிறான் என்று நினைத்தபோது, ஆவியானவர் சகோதரியின் உள்ளத்துக்குள்ளேயிருந்து,

“அவன் உன்னைத்தான் சொல்லுகிறான்'' என்று உணர்த்தினார்.

“ஆண்டவரே! 500 செங்கல் என்று என்னவோ சொன்னானே!'' என இவர்கள் கேட்கவும் ':500 மிஷனரிகளைத்தான் அவன் அப்படிச் சொல்லுகிறான்.'' என பதில் கொடுத்தார்.

500 மிஷனரிகளை இவன் ஒருவன் எப்படி விரட்ட முடியும்? ஒரு மிஷனரி ஒன்பதாயிரம் அசுத்த ஆவிகளை விரட்ட முடியுமே! ஏனெனில் மிஷனரிக்குள் வாசம் பண்ணுகிறவர் சர்வ வல்லமையுள்ள தேவன் அல்லவா!'' என சிந்தித்தபடியே நடந்தார்கள். ஆம்! அவர்கள் மனதில் சோர்வுக்கு இடமில்லை. நாட்கள் நகர்ந்தன.

சாத்தானின் போராட்டம் :

தன்னை இரு கண்கள் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தன் கணவரிடம், '“ஒலிநாடா வைத்து நாம் பேசுவதை எல்லாம் கேட்கிறார்கள். மதில் மேல் உட்கார்ந்து தம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று அடிக்கடி கூற ஆரம்பித்தார்கள். படுக்கை அறையின் சன்னல்களுக்கு உறுதியான திரை போடப்பட்டது. அப்படியிருந்து “அந்தத் திரை வழியே கண்கள் தெரிகின்றன" என்று கூறினார்கள். படுக்கை அறையைச் சுற்றி பாய் வாங்கி அடைத்தார்கள். உறங்கும் அறைக்கு வெளியேயிருந்து காற்று வர வழியே இல்லை. ஆனாலும் சகோதரியின் மனம் ஒரு நிலைப்படவில்லை. ''நம்மைப். பார்க்கிறார்கள்!” என்ற பல்லவிதான் எப்பொழுதும். சகோதரியை அழைத்துக் கொண்டு அவர்களுடைய கணவர் வெளியே வந்து, “பார்! ஒருவரும் இல்லை சுசீ! வீணா பயப்படாதே!'' என ஆறுதல் கூறினாலும், ''மேலே மொட்டை மாடிக்குப் போய்விட்டார்கள்.!' என பதில் கூறுவார்கள்.

மொட்டடை மாடிக்கு அழைத்துச் சென்று காட்டினால், “இப்ப கீழே போய்விட்டார்கள்'' என்று கூறுவார்கள். அசுத்த ஆவிகளைக் கடிந்து ஜெபிக்கும் சகோதரியின் அகக்கண்களுக்கு. அசுத்த ஆவிகளின் நடமாட்டம் தெரிந்ததோ? அல்லது சாத்தான் சகோதரியை பயமுறுத்த முனைந்திருந்தானோ? என்னவோ! நாமறியோம். தேவனே அறிவார்! சகோதரிக்காக ஊக்கமான ஜெபங்கள் ஆங்காங்கே ஏறெடுக்கப்பட்டன. 5. மாத அவதிக்குப் பின் சகோதரி நலம் பெற்றார்கள். இந்தப் போராட்டம் பெரும்பாலோரை மனவியாதியுள்ளவர்களாக மாற்றிவிடும். ஆனால் சகோதரி விடுதலை பெற்றார்கள். விசுவாசமான, விடாப்பியான ஜெபம் வெற்றியைக் கொண்டு வரும் என்பதில் சந்தேகம் உண்டோ?

சுசீலா பரிபூரணபெலன் பெற்றார்கள். ஓராண்டு காலம் ஓடி மறைந்தது.

இதன் தொடர்ச்சி  தியாக தீபம்!  என்ற தலைப்பில் உள்ளது.

இந்த கதை அணையா தீபம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Anaiyaa Deepam - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download