பொதுவாக மக்களுக்கு பெரிய கனவுகளும், விருப்பங்களும் மற்றும் லட்சியங்களும் உண்டு. அதிலும் இளைஞர்களுக்கு தங்கள் வாழ்நாளில் சில குறிப்பிட்ட விஷயங்களில் பெரிய சாதனை செய்து விட வேண்டுமென்று விரும்புவார்கள். இருப்பினும், பெரும்பாலான கலாச்சாரங்களில் கழுகுகளைப் போல உயர்வதற்கு அனுமதி கிடைப்பதில்லை. அது கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள் அல்லது இறக்கைகள் வெட்டப்பட்ட பறவைகளுக்கு சமம். குடும்ப உறுப்பினர்கள் கூட இந்த சேதத்தை செய்யலாம். வேதாகமத்தில் கூட, யோசேப்பின் கனவைச் சிதைத்து அவன் வாழ்க்கையைப் பறிக்க சகோதரர்கள் எண்ணினர்; ஆனால் அவனது மூத்த சகோதரரால் தடுக்கப்பட்டு அவன் உயிர் காப்பாற்றப்பட்டு அடிமையாக அந்த இடத்தைக் கடந்து சென்றான். இருப்பினும், தேவன் யோசேப்பை எகிப்தில் பிரகாசிக்கச் செய்தார்.
1) அடைக்கப்படுதல்:
பல கலாச்சாரங்களில், மரபுகள் உள்ளன. 'அடங்கியிருங்கள்' என கலாச்சாரம் கூறுகிறது. அதாவது, ஒரு நபருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும் சரி, அழிவுகரமானதாக இருந்தாலும் சரி அந்த அமைப்புகளுக்குள் தான் இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சியாளர்கள் இந்தக் கொள்கையையும் தத்துவத்தையும் பின்பற்றுகிறார்கள். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அடைக்கப்பட்டவர்களாக, மூச்சுத் திணறி, கனவுகள் சிதைந்தவர்களாய் அப்படியே மரித்து விட வேண்டும். அவர்கள் வெளியே போய் கல்வி கற்க முடியாது, வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்ய முடியாது, தனியாக பயணம் செய்ய முடியாது என எதுவும் முடியாது.
2) நசுக்கப்படுதல்:
சமூகம் கனவுகளையோ விருப்பங்களையோ நம்பிக்கைகளையோ தருவதில்லை, அதன் கண்ணோட்டமே வேறு; மிக கொடுமையானதும் கூட. ஒரு நபர் சலவைத் தொழிலாளியாக பிறந்தார் என்றால், அவர் அந்த குலத்தொழிலை தான் செய்ய வேண்டும் என இச்சமுதாயம் எதிர்பார்க்கின்றது, அந்த மனிதன் மருத்துவராக வேண்டும் என்று கனவு காண முடியாது; ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டும் அல்லது சிறந்த பொருளாதார அந்தஸ்தை அடைய வேண்டும் என கனவு கூட காண முடியாது. வாழ்வதற்கும், அனுபவிப்பதற்கும், கனவு காண்பதற்கும் அல்லது ஆசைப்படுவதற்கும் கூட முடியாதளவு அவர்களின் ஆன்மா நசுக்கப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை என்பது உயிர் இருக்கும் வரை வாழ்ந்தாக வேண்டும் அல்லது பிழைப்பதற்காக வாழ்வது மட்டுமே.
3) பிரகாசித்தல்:
ஏசாயா தீர்க்கதரிசி நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியை அளிக்கிறார்; "எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது" (ஏசாயா 60:1). கர்த்தருடைய ஒளி, அவருடைய வார்த்தை, சுவிசேஷம் எந்த ஒரு நபரையும் மாற்றும் ஆற்றல் வாய்ந்தது. ஆம், சங்கீதம் 34:5ல் கூறப்பட்டது போல, "அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை". கர்த்தரின் வெளிச்சம் எனும் சத்தியம் அது அனைத்து கலாச்சார அடிமைத்தனங்களையும், உலகக் கண்ணோட்ட சிறைகளையும் அழித்து, ஒரு நபரை சுதந்திரமாக இருக்க அனுமதிக்கின்றது. "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:32).
நீங்கள் அடைக்கப்பட்டு இருந்தாலும் சரி அல்லது நசுக்கப்பட்டு இருந்தாலும் சரி நீங்கள் பிரகாசிக்க அழைக்கப்படுகிறீர்கள். பண்பாடும் மதமும் உங்களைச் சிறைப்படுத்தும் அதே வேளையில் சுவிசேஷம் உங்களை உலகிற்கு ஒளியாக மாற்றும்.
அவருடைய மகிமைக்காக நான் பிரகாசிக்க எழுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran