ஒரு இளைஞன் தன் சொந்த ஊருக்குச் பயணம் மேற்கொண்டான். கடந்த ஐந்தாண்டுகளில் தன் ஊர் எப்படியெல்லாம் மாற்றம் பெற்றிருக்கிறது என்பதைக் காண ஊரைச் சுற்றிப் பார்க்க சென்றான். அப்படி கார் ஓட்டிச் சென்றபோது, ரயில் தண்டவாளத்தின் குறுக்கே புதிய பாலம் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். பாதியளவு தான் பாலம் முடிந்திருந்தது என்பதை அறியாதவன் உற்சாக மிகுதியில் காரை ஓட்டியதில் இரயில் தண்டவாளத்தின் மேல் விழுந்து அடிப்பட்டு காயமடைந்தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்; அவன் வேகமாக காரை ஓட்டியதாக போலீசார் அவன் மீது வழக்குப் பதிவு செய்தனர். பாலத்தைப் பயன்படுத்த முடியாது என்ற சாலைத் தடையோ அல்லது வேகத்தைக் கட்டுப்படுத்தும் தகவல் பலகையோ என எதுவும் இல்லை.
இதை செய்ய வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாகவோ, அலட்சியமாகவோ தங்கள் பணியை செய்தனர். தங்கள் வேலைகள், கொடுக்கப்பட்ட பணிகள், வியாபாரங்கள் என எப்பணியாக இருந்தாலும் அசதியாய் செய்பவர்கள் அதை அழிக்கிறார்கள்.. ஆம், "தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்" (நீதிமொழிகள் 18:9).
1) உழைப்பின் கண்ணியம்:
மக்கள் தங்கள் வேலையில் ஆர்வமும், திருப்தியும், மனநிறைவும் இல்லாதபோது, அவர்கள் அப்பணியில் மந்தமாக இருப்பார்கள். பலருக்கு, வேலை என்பது பணம் சம்பாதிக்கும் நடவடிக்கை, எனவே அவர்கள் தங்கள் வேலையில் தங்கள் முழு மனதை செலுத்துவதில்லை. ஆனால் தேவன் தான் சிருஷ்டித்ததைக் கண்டு 'நல்லது' என்று கூறியது போல், நாமும் நம் பணியை அல்லது வேலையை நல்லது என்று பாராட்ட பழக வேண்டும்.
2) பொறுப்பின்மை:
அதிகாரிகள் தங்கள் பணிக்கு பொறுப்பேற்கவில்லை. உக்கிராணத்துவம் என்பது பொறுப்பை ஏற்றுக்கொள்வது, ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்வது, வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவது மற்றும் தாங்கள் செய்யும் வேலைக்கு தாங்களே பொறுப்பாளி என உணர வேண்டும்.
3) உங்கள் அண்டை வீட்டாரை நேசிக்கிறீர்களா?
தேவன் நம்மை அண்டை வீட்டாரை நேசிக்க கற்றுக்கொடுக்கிறார். நாம் ஒரு பணியைச் செய்யும்போது, பயனாளிகள் சுற்றாத்தாரே. பாலம் கட்டும் அதிகாரிகளுக்கு, பாலத்தை பயன்படுத்துபவர்கள் அண்டை வீட்டாரே. அவர்கள் அண்டை வீட்டாரை நேசித்திருந்தால், அவர்கள் வேலையைச் சிறப்பாகச் செய்திருப்பார்கள், அதை பாதியில் விட்டிருக்க மாட்டார்கள் அல்லது தகவல் பலகை வைத்திருக்காமல் இருக்க மாட்டார்கள்.
அசதியாயிருப்பதற்கு எதிரானது சிரத்தை, கடமை, அர்ப்பணிப்பு மற்றும் சமர்ப்பணம். ஒரு சீஷன் தேவ நாம மகிமைக்காக தனது பணியில் சிறந்து விளங்கும்போது அவனது பணியிடத்தில் ஒளியாகவும் உப்பாகவும் காணப்படுவான். அவன் அழிப்பவனாக அல்லாமல், ஒரு பங்களிப்பவனாக, கட்டுபவனாக, திருத்துபவனாக மற்றும் ஆசீர்வாதமாகவும் காணப்படுவான்.
நான் செய்யும் எல்லாவற்றிலும் நான் ஈடுபாடும், ஆர்வமும், சுறுசுறுப்பும் உள்ள நபரா?
Author : Rev. Dr. J. N. Manokaran