இரட்சிப்பின் மனித வரலாறு மூன்று தோட்டங்களுடன் தொடர்புடையது. ஏதேன் தோட்டம் மனிதகுலத்தின் வீழ்ச்சியின் இடமாக இருந்தது, கெத்செமனே தோட்டம் மனிதகுலத்திற்காக மரணத்தைத் தாங்கும் தேவ குமாரனின் அர்ப்பணிப்பு இடமாக இருந்தது மற்றும் காலியாக இருக்கும் கல்லறை, உயிர்த்தெழுதலுக்கு சான்றாகும் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையாகும்.
ஏதேன் தோட்டம் (ஆதியாகமம் 3):
முதல் மனித வசிப்பிடம் ஒரு அழகான தோட்டம். ஆதாமும் ஏவாளும், ஒவ்வொரு நாளும் தேவனோடு நல் ஐக்கியத்தையும் மற்றும் அவரின் மாலை நேர வருகையையும் அனுபவித்தனர், மேலும் அழகாய் உருவாக்கப்பட்ட உலகின் சிறந்ததை அனுபவித்தனர். பாம்பு வடிவில் இருந்த சாத்தான் முதல் ஜோடியை ஏமாற்றினான். கனவு, ஆசை, சந்தேகம் ஆகியவற்றை தனது சக்தி வாய்ந்த கருவியாகப் பயன்படுத்தினான். 'தேவர்களைப் போல இருக்க வேண்டும்’ என்ற தவறான தேவையை உருவாக்கி, ஆதாமையும் ஏவாளையும் தேவையற்ற கனவில் சிக்க வைத்தான். அனேகமாக, முதல் ஜோடிக்கு தேவர்களைப் போல என்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை போலும். அதற்கு பிறகு புசிக்கக் கூடாது என்ற பழத்தின் மீது ஆசையை தூண்டினான்; ஏவாள் தேவ கட்டளையைப் பற்றி சொன்னவுடன், தேவன் சொன்னது உண்டோ அதாவது தேவன் உண்மையில் அப்படிச் சொன்னாரா? என்பது போல, சாத்தான் ஒரு சந்தேகத்தை உருவாக்கினான்.
கெத்செமனே தோட்டம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனித குலத்திற்கு மீட்பை வழங்குவதற்காக கல்வாரி சிலுவையில் மரிக்க மனிதரானார். தேவனின் நித்திய திட்டம் என்னவென்றால், மனுஷ குமாரன் மனிதகுலத்தின் சார்பாக தேவ தீர்ப்பை ஏற்பார், மரணத்தை அனுபவிப்பார், மீண்டும் உயிர்த்தெழுவார். ஆம், மரணம் இல்லாமல், தேவன் பாவங்களை மன்னிக்க நீதி நியாயமற்றவராக (நீதியுள்ளவராகவோ அல்லது சட்டப்படி சரியானவராகவோ) இருக்க முடியாதல்லவா (1 யோவான் 1:9). இது ஒரு கடினமான பணி மற்றும் கடினமான செயல்பாடு. கர்த்தராகிய இயேசு கெத்செமனே தோட்டத்தில் மாற்று வழி உள்ளதா என பிதாவிடம் வேண்டினார்; கிட்டத்தட்ட போராடினார் என்றே சொல்ல வேண்டும். அதற்கு பின்பு மனிதகுலத்தை காப்பாற்ற வேறு எந்த சாத்தியமும் இல்லை என்பதை நன்கு அறிந்த கர்த்தராகிய இயேசு மரணத்தின் வேதனையை கடக்க உறுதியளித்தார்; தன்னை அர்ப்பணித்தார் (லூக்கா 22:42).
கல்லறை தோட்டம்:
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவருக்கு சொந்தமான கல்லறையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அடக்கம் செய்வதற்காக கொடுக்கப்பட்டது (யோவான் 19:38-42) ஆண்டவர் மரித்தோரிலிருந்து எழுந்தார், கல்லறை காலியானது. கல்லறையில் இருந்த தேவதூதர்கள் சொன்னார்கள்; "உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்" (லூக்கா 24:5-6). ஆம், உயிர்த்தெழுதல் அவருடைய தெய்வத்தன்மையையும், பாவம், மரணம் மற்றும் சாத்தானின் தோல்வியையும் நிரூபித்தது.
நான் உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவித்தேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்