வேதாகமத்தில் உள்ள சில சொற்றொடர்கள் மனித கண்ணோட்டத்தில் முக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன. விவிலிய ஆசிரியர்கள் சொற்களின் ஒதுக்கீட்டை நிரப்புவதற்கான பணிக்காக எழுதவில்லை. வேதம் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டிருப்பதால், தேவையற்ற அல்லது அர்த்தமற்ற வார்த்தைகள் என்று எதுவும் இல்லை. அத்தகைய ஒரு சொற்றொடர் யோவான் நற்செய்தியில் உள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஐயாயிரத்திற்கும் அதிகமான கூட்டத்திற்கு உணவளித்தார். இந்த அற்புதம் நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுவாரஸ்யமாக, யோவான் புத்தகத்தில், ‘அந்த இடத்தில் நிறைய புல் இருந்தது’ என்று முக்கியமான தகவலைக் கொடுக்கிறார் (யோவான் 6:10).
பருவம்:
வேதாகம அறிஞர்கள் இதை வைத்து இந்த சம்பவம் எந்த பருவத்தில் அல்லது கால சூழ்நிலையில் நடந்தது என்று அறிந்து கொள்வார்கள். வறண்டு போக வைக்கும் கோடையில் அல்ல, ஏனென்றால் வெகு நேரம் காய்ந்த புல்லில் உட்கார வசதியாக இருந்திருக்காது. நல்ல பச்சை பசேலென புல்வெளியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்திருந்து கவனிக்கவோ, வசதியாக உட்கார்ந்து கேட்கவோ, கற்றுக் கொள்ளவோ மற்றும் ஐக்கியம் கொள்ளவோ முடியும், அந்த புல்லினால் எவ்வித ஆரோக்கிய கேடும் இராது.
மேய்ப்பன்:
தாவீது ராஜா சித்தரித்தது போல மேய்ப்பன் ஆடுகளுக்கு எப்படி உணவளிக்கிறார் என்ற சாராம்சத்தில் யோவான் குறிப்பிட்டிருந்தார் (சங்கீதம் 23). ஆம், மேய்ப்பன் ஆடுகளை பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறச் செய்கிறார் மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குகிறார். ஒருவேளை, கூட்டத்தின் அற்புதமான உணவைப் பார்த்த யோவான், சங்கீதத்தைத் தன் இருதயத்தில் திரும்பத் திரும்பச் சொல்லலாம். தன் மக்களின் மேய்ப்பனாக நின்று கர்த்தர் செய்யும் செயல்களைக் கண்டு வியந்தார், தன்னை அதற்கு சாட்சியாக வைத்ததில் அகமகிழ்ந்தார்.
முக்கியத்துவம்:
இந்த அதிசயம் பஸ்கா பண்டிகையின் போது நடந்தது (யோவான் 6:4). ஒரு சிறுவன் இலவசமாக கொடுத்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து நடந்த அற்புதம், வனாந்தரத்தில் மோசே ஜனங்களுக்கு கொடுத்த, வானத்திலிருந்து வந்த மன்னா போன்ற அற்புதமான உணவைக் கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்தார். பிற்பாடு, கர்த்தராகிய ஆண்டவரே தன்னை ஜீவ அப்பம் என்று விளக்குகிறார் (யோவான் 6:35).
திருப்தி:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பராக, அக்கூட்டத்திற்கு அவர்களின் ஆத்துமாவை திருப்திப்படுத்தும் சிறந்த போதனைகளை வழங்கினார். அவர்களின் ஆத்துமாவோ, வயிறோ காலியாக இருக்கவில்லை.
உபரி:
பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ஐயாயிரம் ஆண்களும் உணவில் திருப்தி அடைந்தனர். அவர்களால் அற்புதமாக கிடைத்த உணவுகள் அனைத்தையும் உண்ண முடியவில்லை. பன்னிரண்டு கூடைகள் நிறைந்த துண்டுகளைச் சேகரிக்கும்படி சீஷர்களுக்கு கர்த்தராகிய ஆண்டவர் கட்டளையிட்டார். திரளான மக்களுக்கு எப்படி உணவு வழங்குவது என்று யோசித்த சீஷர்கள், இறுதியில் தேவனின் உபரியான தாராள மனப்பான்மை மற்றும் உண்மைத்தன்மையையும் கற்றுக்கொண்டனர்.
நான் மாபெரும் மேய்ப்பனின் நன்றியுள்ள ஆடாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்