எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் கவர்ச்சியூட்டுவதாகவும் இருக்கலாம் அல்லது வெறுப்பாகவும் இருக்கலாம்! நன்னம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அவர்களின் எண்ணங்கள் எதிர்கால முன்னேற்றங்கள் பற்றியதாகவும் வளர்ச்சி பற்றியதாகவும் இருக்கும். அவநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அவர்களின் எண்ணங்கள் பயம் நிறைந்ததாகவும், பேரழிவின் எண்ணங்களாகவும் மற்றும் மரணம் குறித்த எண்ணங்களாக கூட இருக்கலாம்.
நன்னம்பிக்கையாளர்கள்:
நன்னம்பிக்கையாளர்களை வேதாகமம் எச்சரிக்கிறது: “நாளையதினத்ததைக் குறித்துப் பெருமை பாராட்டாதே: ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
(நீதிமொழிகள் 27:1; யாக்கோபு 4: 13-17) கோவிட் 19 என்ற தொற்றுநோய் உலகின் பல செயல்பாடுகளை நிறுத்திவிடும் என்று யாரும் நினைத்ததில்லை. விமானத்தை இயக்குபவர்கள், சுற்றுலா உதவியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவன உரிமையாளர்கள் போன்றோர் வளர்ச்சிக்கான திட்டங்கள், அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள், சம்பள உயர்வுகள் மற்றும் பதவி உயர்விற்கான போனஸ் ஆகியவற்றை பற்றியெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தனர், ஆனால் அனைத்தும் திடீரென்று நிறுத்தப்பட்டன. ஆக எதிர்காலம் என்பது நம் கையில் இல்லை, ஆனால் தேவ கிருபையில் உள்ளது. தேவனைக் குறித்த எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்படி விசுவாசிகளுக்கு யாக்கோபு அறிவுறுத்துகிறார், எனவே இத்தகைய அதீத நம்பிக்கை கொண்டவர்களின் உரையாடல்களில் 'ஆண்டவருக்குச் சித்தமானால்' என்ற சொற்றொடரைச் சேர்க்க வலியுறுத்துகிறார்.
தோல்வி மனப்பான்மையர்:
அவநம்பிக்கையாளர்களையும் வேதாகமம் எச்சரிக்கிறது: “ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்" (மத்தேயு 6:34). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை எதிர்காலத்தைக் குறித்து நாம் கவலைப்படவோ ஏக்கங்கொள்ளவோ வேண்டாம் என்று அறிவுறுத்தினார். தேவனுடைய கிருபையால் அன்றையதினத்தை மாத்திரம் கையாளுவது போதும்; ஒவ்வொரு நாளுக்கும் போதுமான அபாயங்கள், தொல்லைகள் மற்றும் துன்பங்கள் உள்ளன. நாளையவைகளை, நாளை மட்டுமே கையாளப்பட வேண்டும், மேலும் ‘கவலை’ இன்று நம் செயல்திறனை முடக்கவோ அழிக்கவோ கூடாது.
நம்பகத்தன்மை உடையவர்கள்:
கிறிஸ்தவ சீஷர்கள் ‘நம்பிக்கைக்குரியவர்கள்’ - இறையாண்மை தேவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவநம்பிக்கையாளர் அல்லது நம்பிக்கையாளரின் கண்ணோட்டத்தில் எதிர்காலத்தை நாம் அறியவில்லை, ஆனால் தேவனுடைய கண்ணோட்டத்தின்படி நம் எதிர்காலத்தின் மீது தேவன் ஆளுகை செய்கிறார் என்ற நம்பிக்கையுண்டு. எனவே, விசுவாசிகள் சூழலைப் பொருட்படுத்தாமல் வெல்லக்கூடியவர்கள். தேவனுடைய உறுதியான அன்பு, கிருபை, அற்புதமான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை அவருடைய பிள்ளைகளுக்கு உறுதி செய்யப்பட்டு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.
எதிர்காலத்தைப் பற்றி நாம் பெருமை கொள்ளவோ கவலைப்படவோ ஒன்றும் இல்லை, மாறாக எதிர்காலத்தை நாம் தைரியமாக எதிர்கொள்ளலாம், ஏனென்றால் காலங்கள் தேவனுடைய கரத்தில் இருக்கிறது என்பதை அறிவோமே.
எதிர்காலத்தைக் குறித்து கிறிஸ்துவில் என் நம்பிக்கை உள்ளதா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்