மனிதகுல வரலாற்றில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் அறையப்பட்ட நாளே மிக மோசமான, அவலமான, பொல்லாத மற்றும் ஆவிக்குரிய ரீதியில் இருண்ட நாள்.
அபாக்கியம்
மனிதர்கள் இரக்கமற்றவர்கள், கொடூரமானவர்கள், வன்முறையாளர்கள். பிறர் துன்பப்படுவதை உணராமல் இருப்பதும், பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ்வதும் மிக மோசமான மனித இயல்பு. சிலுவை என்பது சித்திரவதை செய்து, இழிவுபடுத்தி மற்றும் குற்றுயிரும் குலையுயிருமாக மரணத்தைத் தழுவும் கருவியாகும். தேவனின் பரிசுத்த குமாரனைக் கொல்ல மனிதர்கள் இதைப் பயன்படுத்தினர்.
குருட்டுத்தன்மை
மனிதர்களின் மனதை சாத்தான் குருடாக்கிவிட்டான் (2 கொரிந்தியர் 4:4). தேவனின் மகிமையை அவர்களால் பார்க்க முடியவில்லை. யோவானும் பேதுருவும் தேவ மகிமையைக் கண்டதாகக் கூறினர் (யோவான் 1:14; 2 பேதுரு 1:18). இருப்பினும், பொந்தியு பிலாத்து, ஆசாரியர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் கலக கும்பல் மகிமையுள்ள கர்த்தரைக் காண முடியவில்லை. மனிதகுலம் குருடாகவும் இருளில் வசிப்பதாகவும் இருந்தது, ஒளியைப் பார்க்க முடியவில்லை, எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கொலை செய்யும் இருண்ட செயலில் ஈடுபட்டது. பொறாமை, பேராசை, அதிகாரம் மற்றும் பெருமை ஆகியவற்றின் பாவம் அவர்களை பகுத்தறிவற்ற, நியாயமற்ற மற்றும் பொறுப்பற்றவர்களாக மாற்றியது.
கலகம்
மத அதிகாரிகளும், அரசாங்க அதிகாரிகளும், பொது மக்கள் கூட்டமும் கலகம் என்னும் பொதுவான ஒன்றைக் காட்டினர். மதத் தலைவர்கள் பத்துக் கட்டளைகளை மீறினார்கள். அவர்கள் பொய் சாட்சியைப் பயன்படுத்தினார்கள், துரோகிக்கு லஞ்சம் கொடுத்தார்கள், நீதிபதி கையைக் கழுவினார், இவ்வாறு மனிதகுலம் தேவனின் குமாரனைக் கொன்றது. அவர்கள் சட்டங்கள், சிறந்த நடைமுறைகள், மனிதாபிமான நடத்தை மற்றும் நீதியான மரபுகளுக்கு எதிராக கலகம் செய்தனர்.
கீழ்ப்படியாமை
கீழ்ப்படியாமை என்பது ஏதேன் தோட்டத்தில் தொடங்கிய தேவனின் கட்டளையை மீறுவதாகும். உண்மையில், வேண்டுமென்றே, எதிர்க்கும் மற்றும் பெருமைமிக்க கீழ்ப்படியாமை மனிதகுலத்தின் அடையாளம். யூத தேசம் தேவனின் கட்டளைகளில் ஒன்றான “கொலை செய்யாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:13) என்பதை மீறியது. “தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக” (யாத்திராகமம் 23:2). ரோமானிய ஆளுநர் கர்த்தராகிய இயேசுவை குற்றவாளி அல்ல என்று அறிவித்தான், ஆனால் மரண தண்டனையை வழங்கினார்கள் (லூக்கா 23:4).
பெருமை
ஒரு மனிதனின் உயிரைக் கொடுப்பதும் எடுப்பதும் தேவனின் தனியுரிமை. பெருமை வாய்ந்த மதத் தலைவர்கள் அல்லது நீதிபதிகள், மரண தண்டனையை வழங்குவதற்காக தங்களை கடவுள் என்று கர்வப்படுத்துகிறார்கள். ஆலோசனை சங்கம் மற்றும் பொந்தியு பிலாத்துவின் அரசவையில் மனிதப் பெருமை முழுமையாகக் காட்டப்பட்டது.
இயற்கைக்கே அதிர்ச்சி
மனிதர்களின் இழிவான செயல்களில் இயற்கையே அதிர்ச்சியடைந்தது, சூரியன் இருளடைந்தது; பூமியும் அதிர்ந்தது (லூக்கா 23:44; மத்தேயு 27:51).
பவுல் தான் பாவிகளில் பிரதான பாவி என்று உணர்ந்தது போல நானும் உணர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்