ஊழியம் செய்ய விரும்புபவர்கள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும், ஊழியப்பணி என்பது மேய்ப்பனின் பணி போன்றது. உண்மையைச் சொல்ப் போனால் அனைவருமே மேய்ப்பனைப் போல இருக்கவே அழைக்கப்படுகிறார்கள், பெற்றோர்கள், ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள், இளைஞர்களுக்கான வழிகாட்டிகள், சுவிசேஷகர்கள் என அனைவரும் மேய்ப்பர்களே. தேவன் எல்லா மக்களையும் மேய்ப்பராக தான் கருதுகிறார்; இருப்பினும் ஒரு சிலரிடம் (குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், சக பணியாளர்கள்) அவர்களின் மேய்ப்பராக ஒப்படைக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, பலர் தங்கள் பொறுப்புகளை உணர்வதில்லை. மற்றவர்கள் தாங்கள் மேய்ப்பர்கள் என்பதை அறிந்தும் பொறுப்புடனும், மகிழ்வுடனும், சிரத்தையுடனும் மற்றும் கடமையை உணர்ந்த உக்கிராணக்காரர்களாகவும் இல்லை. யாக்கோபு ஒரு முன்மாதிரியான தனித்துவமான மேய்ப்பன் என்றே சொல்ல வேண்டும்; அவர் நமக்கு சில நுண்ணறிவுகளை வழங்குகிறார் (ஆதியாகமம் 31:38-40).
1) இருபது வருஷகாலம்:
பணி என்பது ஒரு நீண்ட கால முயற்சி. பல நேரங்களில், அது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய ஈடுபாடு. யாக்கோபு அதிலிருந்து விடுபடவோ விடுமுறை எடுத்துக் கொள்ளவோ இல்லை.
2) சினையழியவில்லை:
யாக்கோபு மென்மையாக ஆடுகளை மேய்த்து, மிகுந்த கவனம் செலுத்துபவராக இருந்தார் (ஆதியாகமம் 33:13). தேவன் நம்மிடம் கவனிப்பதற்கும் வளர்ப்பதற்கும் கொடுத்துள்ள எல்லா மக்களையும் தயவாய் கவனித்துக்கொள்ள வேண்டும். "என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்" (கலாத்தியர் 4:19) என்கிறார் பவுல்.
3) கொல்லப்படவில்லை:
சுயநல மேய்ப்பர்கள் மந்தையிலிருந்து ஆடுகளை எடுத்து தங்களுக்கு உணவாக்கி கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆடுகளை அவர்களிடமிருந்து விடுவிப்பதாக மேய்ப்பர்களிடம் ஆண்டவர் கூறினார் (எசேக்கியேல் 34:2). ஆனால் யாக்கோபு மந்தையிலிருந்து எடுத்து உணவாக்கிக் கொள்ளவில்லை; பல விசுவாசிகள், சுயநலமான மேய்ப்பர்களால் சூறையாடப்படுகிறார்கள்.
4) பாதுகாப்பு:
யாக்கோபு ஆடுகளை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாத்தார். மந்தையை அழிக்க ஓநாய்கள் வரும் என்று பவுல் எச்சரிக்கிறார் (அப்போஸ்தலர் 20:29). ஆம், கள்ள போதகர்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள், உலகமயமான பிரசங்கிகள் மந்தையை அழிக்க வருவார்கள்.
5) பகலிலின் வெயில்:
மக்களை தேவனிடம் அழைத்துச் செல்வதும், கர்த்தருக்குள் வளர்ப்பதும், பக்குவமடையச் செய்வதும் என்பது கடினமான உழைப்பை செலுத்த வேண்டியதாகும். அது ஓய்வற்ற வேலை, மற்றும் உடல் சோர்வும் ஏற்படும். ஊழியம் கடினமானது, ஏனெனில் அது உணர்வுகள் உறியப்படும், ஆவிக்குரிய ரீதியில் பலவீனமாக்கும் மற்றும் கால நேரமும் அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும்.
6) இரவில் குளிர்:
யாக்கோபிற்கு சொகுசான இடம் என்று இல்லை, ஆனால் கூரை அல்லது தங்குமிடம் இல்லாமல் மந்தையுடன் வயல்களில் இருக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் சுற்றியுள்ள அனலற்ற விசுவாசிகள் ஆவிக்குரிய ஆரோக்கியமான மக்களை கூட குளிராக்கி விடுவதுண்டு. ஆனால் (தேவ) அன்பு தணிந்து போக கூடாது (மத்தேயு 24:12).
7) நித்திரை தூரமானது:
பதற்றம், வேலை அழுத்தம், பாதுகாப்பற்ற சூழல் ஆகியவை யாக்கோபிற்கு சவாலாக இருந்தன. பவுல் கூறுவது போல ஊழிய பாரம், சபைகள் மீதான அக்கறை, கவலை அதற்காக இரவு பகல் என ஜெபத்தில் செலவிடும் போது தூக்கமில்லாத இரவுகளை உண்டாக்கும் (2 கொரிந்தியர் 11:28).
நான் ஒரு பொறுப்புள்ள மேய்ப்பனா? சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்