ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி செய்தபோது, எதிரிகளாகக் கருதப்பட்ட மக்களை சித்திரவதை செய்து கொல்ல பல சித்திரவதை முகாம்கள் இருந்தன. அதில் 1936 முதல் 1945 வரை சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாம் செயல்பாட்டில் இருந்தது. சாக்சென்ஹாசனில் மக்களின் உயிர்களைப் பறிப்பதற்காக ஒரு எரிவாயு அறை எப்போதும் இயங்கி கொண்டிருக்கும். இதுபோன்று மருத்துவரீதியான சித்திரவதைகளும் நடந்தன. 101 வயதான, சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமின் முன்னாள் காவலரான ஜோசப் ஷூட்ஸ், பிராண்டன்பேர்க்கில் உள்ள நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். வடக்கு பெர்லினில் உள்ள சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமில் 3518 நபர்களைக் கொன்றதற்கு உடந்தையாக இருந்ததற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் விஸ்கான்சினில் இருந்து வெளியேற்றப்பட்டார், ஏனெனில் அவர் சாக்சென்ஹாசன் மற்றும் டிராவ்னிகி முகாம்களில் ஒரு மெய்க்காவலராக இருந்தார் (ஜெருசலேம் போஸ்ட், ஜூன் 28, 2022).
ஹிட்லரின் காலத்தில் ஐரோப்பாவில் அறுபது லட்சத்திற்க்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் ரயில்களில் இழுத்துக் கொண்டு வந்து சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சித்திரவதை செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் எரிவாயு அறைகளில் விஷ வாயுவை செலுத்தி கொல்லப்பட்டனர். இதில் வருத்தம் என்னவெனில், அரசாங்கத்திற்காக பணிபுரியும் பல அதிகாரிகள் இவ்வகையான இரக்கமற்ற, அநீதியான செயலைச் செய்தனர். இது ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) என்று அழைக்கப்படுகிறது.
இந்த சித்திரவதையிலிருந்து தப்பிய யூத மக்கள் இறந்தவர்களுக்கு நீதியையும், மனிதகுலத்திற்கு எதிரான இந்த குற்றத்தில் வேண்டுமென்றே ஈடுபட்டவர்களுக்கு தண்டனையையும் தர விரும்பினர். நாட்டை விட்டு வெளியேறி தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டு பல்வேறு நாடுகளில் குடியிருந்தோரையும் நீதியின் முன் அழைத்துக் கொண்டு வந்தனர்.
எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச சட்டம் நியாயத்தை விசாரணைக்கு கொண்டு வந்து துன்மார்க்கமான அதிகாரிகளை தண்டிக்க முடிந்தால், தேவன் துன்மார்க்கரை நியாயந்தீர்க்க மாட்டாரா? "நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்" (யாத்திராகமம் 23:7) என்கிறார் தேவன்; இது தேவனுடைய பிரமாணம் மாத்திரமல்ல வாக்குறுதியும் கூட. ஆம், நீதியை விரும்பும் பரிசுத்த தேவன், துன்மார்க்கரை தண்டனையிலிருந்து தப்ப அனுமதிக்க மாட்டார். அவர்கள் உலகின் எதாவது ஒரு மூலையில் சென்று மறைந்து உருவத்தை மாற்றிக் கொண்டு அல்லது மறைத்து அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் அங்க அடையாளங்களை மாற்றுவதன் மூலம் அல்லது நாடுகளின் சட்டங்களில் உள்ள பிற ஓட்டைகள் அல்லது காவல்துறை அல்லது நீதிபதிகளின் இயலாமையின் மூலம் தப்பிக்க முடியும். ஆயினும்கூட, அவர்கள் தேவனின் அவதானிப்பு, தண்டனை மற்றும் தீர்ப்பு ஆகியவற்றிலிருந்து தப்ப முடியாது.
சங்கீதம் 73ஐக் காண்போமேயானால், ஆசாப் பொல்லாதவர்கள் செழிப்பதை விவரிக்கிறான், அதைக் குறித்து எரிச்சலடைகிறான், புலம்புகிறான். பின்பு அவன் தேவனின் பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரும்போது, துன்மார்க்கரின் முடிவு எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொள்கிறான் (சங்கீதம் 73:1-17).
தேவனின் நீதியையும் நியாயத்தையும் நான் உணர்ந்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்