தொடர் - 9 "பேஷன் ரெடிமேட்? ஸ்டோரின் உரிமையாளர் ஜெயக்குமார் தன் கடைக்கு வந்த சார்லஸ்-ஐ அமோகமாக வரவேற்றார். அவர் உள்மனம் மகிழ்ந்தது. வழக்கமாக கிறிஸ்மஸ் சமயம் மலைவாழ் மக்களின் பிள்ளைகள் அல்லது ஏழைகளுக்கு என்று நிறைய டிரஸ் எடுப்பார். அதேபோல் ஈஸ்டருக்கும் கொடுக்கலாம் என்று வந்திருப்பார் போலும் என எண்ணினான். “வாங்க அண்ணே! வாங்க! டீ சாப்பிடுறேங்களா? காபி சாப்பிடுறேங்களா?” "எனக்கு ஒண்ணும் வேண்டாம். ஆமா, கதிரேசன் எங்க? நல்ல பொறுப்பான பையன். வேலையை விட்டுட்டுப் போயிட்டானா?” “மஞ்சுளாவோட சண்டை போட்டுகிட்டே இருக்கான். அதுதான் நிறுத்திட்டேன்” "அப்படியா? வேற ஒரு ஆள் போட்டுக்கக்கூடாது? சாப்பாட்டுக்கு எப்படி மாத்தி விடுவ?” “முதல்ல மஞ்சுளா ஒரு மணிக்குப் போயிட்டு 2 மணிக்கு வந்திடுவா. கீதாவும், கலாவும் 2 மணிக்கு போயிட்டு 4 மணிக்கு வருவாங்க.” பேசிக் கொண்டிருக்கும்போதே மஞ்சுளா வந்தாள். கீதாவும், கலாவும் வீட்டிற்குப் போகப் புறப்பட்டனர். “சொல்லிட்டு வா குமார். வீட்டுக்குள்ள போவோம்.” விவரம் தெரியாமல் குமார் குழம்பினாலும் மஞ்சுளாவிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான். “சாப்பிடு குமார். உன் கூட கொஞ்சம் பேசணும்.” திக்கென்றது குமாருக்கு. “பேசுவோம்ண்ணே! அப்புறம் சாப்பிட்டுக்கிறேன். எனக்குப் பசிக்கலை. லேட்டாதான் சாப்பிடுவேன்.” “லில்லிக்கு நீ புத்தி சொல்லக்கூடாதா? இப்படி விவரம் தெரியாத பிள்ளையா இருக்காளே!”* “லில்லியா? ஏண்ணே! என்ன தப்பு பண்றா? எனக்கு ஒண்ணும் தெரியாதே.” “அப்பவே நினைச்சேன். உனக்கு தெரியாதுன்னு, நம்ம ஹாஸ்பிடல் தலைமை மருத்துவர் ரொம்ப நல்ல மனுஷன். லில்லியை நல்லா பாராட்டுறார். ஷோஷியல் டைப். ஆறு மாதத்திற்கு முன்னாடிதான், அவர் ஒய்ப் இறந்து போனாங்க மனுஷன் ரொம்ப துடிச்சுப் போயிட்டார். அதுல மனசு ஓடிஞ்சு போனவர், நம் ஊருக்கு மாறுதலாகி வந்திருக்கிறார். லில்லியின் சுறுசுறுப்பு...... அவரை ரொம்ப கவர்ந்திருச்சு” நிறுத்தினார். குமாரின் நெஞ்சு வெகு வேகமாகத் துடித்தது. 'எந்த ஆப்ரேஷன் என்றாலும் லில்லி கூட இருக்கனும்ன்னு நினைக்கிறார். லில்லி ரொம்ப ஒதுங்குறா. பேசினாக்கூடவா தப்பு? கேஸ் விஷயமாத்தான் ஏதாவது வந்தாலும், அந்த மாதிரி சந்தர்ப்பங்களை தவிர்க்கிறா. ஹெட் நர்ஸ் பிரமோஷன் அவர் கையில்தான் இருக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணினா என்ன?” குமாரால் அடக்க முடியவில்லை.”*அண்ணே! நீங்களா பேசுறீங்க? ஒரு ஆண்மகனோட ஒரு பெண் அளவுக்கு மீறி பேசுறது தப்புதானண்ணே! ஒரு ஆண் ஒரு பெண்ணை இச்சையோட பார்த்தாலே அவளோடு விபச்சாரம் செய்துவிட்டான் என்றுதானே தேவன் சொல்றார். அது எப்படிண்ணே அந்த டாக்டர், மடையன், லில்லியை இந்த மாதரி எதிர்பார்க்கலாம்..?” கோபத்தில் வார்த்தைகள் கொப்பளித்தன. “அதுதான் நேற்று ராத்திரி நான் வி.ஆர்.எஸ் (சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினமா செசய்தல்) கொடுக்கப்போறேன்னு லில்லி சொன்னா போல. நான் கூட விவரம் தெரியாமல் திட்டிட்டேன்.” மூச்சு விட்டுக் கொண்டான். “வேலையின் நிமித்தம் ஒரு ஆண் தனக்கு கீழ வேலை பார்க்கிற பெண்ணோட பேசறது தப்பா? பொறுப்பா இருக்கிற பெண் ஊழியர் கிட்ட பாசம் காட்டறது தப்பா? அவங்க என்ன தப்பாவா நடந்துக்கிறாங்க?” “வழுக்குப் பாறையில கால் வச்சிட்டா.... வழுக்கிட்டே போய் விடுவோமே தவிர எதிர்த்து ஏற முடியாது. அதிகப்படியான வீண்பேச்சு, தகாத உறவுக்கு வழி நடத்தி விடும். அப்புறம் அழுது பயன் இல்லண்ணே! லில்லி வேலை பார்க்கணும்ன்னு, அவசியம் இல்லை அவ கற்புள்ளவளா, உண்மையா இருந்தா போதும்” ஆத்திரத்தோடு பேசினான் குமார். “அப்படியா ?.....குமார்.” அழுத்தமாகச் சொன்னவர் “அப்ப நீ தெரிஞ்சேதான் வழுக்குப் பாறையில காலை வச்சிருக்க... அப்படித்தானே! அவ....உனக்கு கற்புள்ளவளா, உண்மையா இருக்கணும். ஆனா....நீ கற்புக்குலைந்தவனா.... தறி கெட்டுப்போகணும் அப்படித்தானே ?'' சாட்டையடி வார்த்தைகள் அவனை துடித்தெழச் செய்தது. அண்ணே!'” அலறினான் குமார். “நீ. மஞ்சுவோட பழகுறது, பேசறது எல்லாமே சரிதானா? உன் மனசாட்சியைக் கேள். அது உனக்குத் தீர்ப்பு வழங்கும். லில்லி வேலை பார்க்கிற இடத்தில ஒரு பிரச்சனையும் இல்லை. அவ நெருப்பு நெருப்புகிட்ட ஒரு புழுவும் வராது. நான் சொன்னதெல்லாம் பொய். உன் தவறை உனக்கு உணர்த்தத்தான் சொன்னேன். உன் நடவடிக்கைகளைப் பார்த்தவள், குடும்ப மானம் கப்பலேறாமா இருக்கட்டுமேன்னு நினைச்சு” வேலையை இராஜினமா செய்றேன்னு சொல்லியிருப்பா. வேற ஒண்ணும் இல்லை.” தலைகுனிந்தான் குமார். மெழுகுவர்த்தியா உருகுகிறவளுக்கு நீ செய்கிற கைமாறு இது. இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனான உனக்கு ஏன் புத்தி இப்படி போச்சு?” மாறி மாறி அவனை யாரோ சம்மட்டி கொண்டு அடிப்பது போல் இருந்தது. “என்னை மன்னிச்சிடுங்கண்ணே! என் கண்ணைத் திறந்து விட்டிட்டீங்க. நான், தாயில்லாப் பொண்ணு பாவம்ன்னுதான் மஞ்சுவுக்கு வேலை கொடுத்தேன். அவ... பேபச்சு... சிரிப்பு... என்னை விழத்தட்டிருச்சுண்ணே நான் தப்பு பண்ணிட்டேன். நான் நல்லவனே இல்லை. ஆனா...தகாத உறவு எதுவும் நடக்கலைண்ணே! என்னை நம்புங்க. நான் திருந்திட்டேன். எனக்காக, என் விருப்பத்திற்காக ஆசையையெல்லாம் குழி தோண்டி புதைச்சு, உழைச்சு, உழைச்சு ஓடா, தேயுறவளை சித்ரவதை பண்ணிட்டேன். இப்படி நடக்க மாட்டேன். நான் என்ன செய்யனும்?சொல்லுங்க” “மஞ்சுளாவை வேலையை விட்டு நீக்கு.” திடமாய் வந்தது சார்லஸின் பதில் “என்ன சொல்லி வேலையை விட்டு நீக்குறது தெரியலையே!” கதிரேசனை சட்டுன்னு நிறுத்திட்டைல்ல. கடவுளே அவளை வேலையை விட்டு நிறுத்த வழி செய்வார். அந்த சமயம் புத்தியாய் நடந்து கொள் ஜெபிப்போமா?”” இருவரும் முழங்கால்படியிட்டனர். குமாரை ஜெபிக்க சொன்னார். தன் தவறுகளை கண்ணீரோடு அறிக்கையிட்டான். தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதற்கு நன்றிசெலுத்தி ஜெபத்தை முடித்தான். சார்லஜீம் ஜெபித்தார். கருமுகில் மறைத்த நிலவு, வெளியே வந்தது போல் குமாரின் முகம் பிரகாசித்தது சார்லஸ் விடைபெறச் சென்றார். “அவர் எப்பொழுது போவார் என்று காத்திருந்தது போல், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் மஞ்சு. என்ன இவ்வளவு நேரம் ரம்பம் போட்டாரா?” மஞ்சுளாவின் பேச்சு குமாருக்கு கசந்தது. நீ கடைக்குப் போ. வீட்டுக்கு வராதே.” குரல் கண்டிப்புடன் வந்தது. இதை சற்றும் எதிர்பாராத மஞ்சுளா, ஒருகணம் திகைத்தாள். “என்ன சொன்னீங்க? வீட்டுக்கு வரக்கூடாதா? அப்ப நான் வீட்டுக்கு போறேன்.” பொய்க் கோபத்துடன் திரும்பினாள். “மஞ்சுளா, நில்” கட்டளையிட்டான் நின்றாள். புன்சிரிப்புடன் திரும்பினாள். சட்டைப் பையில் கையை விட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்து எண்ணி அவளிடம் நீட்டினான். மகிழ்ச்சியில் பெற்றுக் கொண்டாள். “இன்றைக்கு தேதி 23. இந்த மாதச் சம்பளம்தான் நான் கொடுத்தது. நீ உன் வீட்டுக்கு போகலாம். இனி வேலைக்கு வர வேண்டாம்.” என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசினான். தன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தாள். “ஏன்? ஏன்?” அவளால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனோ வேகமாக உள் வீட்டிற்குச் சென்று விட்டான். “உன்னைத் தன் உடன்பிறந்த தங்கை போல் நடத்திய லில்லிக்கு துரோகம் செய்ய நினைத்த உனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்” என உறங்கிக் கிடந்த அவள் மனசாட்சி விழித்தெழுந்து அவளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. தலை குனிந்தபடி வெளியேறினாள் மஞ்சுளா.
இதன் தொடர்ச்சி ஒலிவ மரக்கன்றுகள் என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.