வேலையற்றவன் வேலை

கதிரவனின் கரங்களின் வெப்பம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. மதியம் மணி3. அரசினர் மருத்துவமனையின் பரபரப்பும், கலகலப்பும் குறைந்திருந்தது. அந்நேரம் மூன்று இளைஞர்கள் டேனியல், டேவிட், ஜோசப் மூவரும் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து ஆண்கள் பகுதிக்கு சென்றனர்.

முதல் படுக்கையருகே நின்று அந்த நோயாளிகளிடம் ஏதோ பேசினார்கள். ஒருவன் ஒரு நோட்டீஸ் போல் கொடுத்தான். இருவர் பிஸ்கட்டுகள் கொடுத்தார்கள். எதிர்வரிசையில் 4வது படுக்கையில் படுத்திருந்த மாரிமுத்து கவனித்துக் கொண்டேயிருந்தார். முதலில் யாரையோ பார்க்க வந்திருக்கிறார்கள் என்றே நினைத்தவர், அவர்கள் ஒவ்வொரு படுக்கையாகச் செல்வதைப் பார்க்கவும், இதில் ஏதோ விநோதமிருக்கிறது என எண்ணிக்கொண்டார்.

மாரிமுத்துவின் படுக்கைக்கு எதிரேயிருந்த படுக்கைக்கு மூவரும் வந்தனர். எதிர் படுக்கைக்காரர் கருணாகரன் முறுக்கி விடப்பட்ட மீசையும், கட்டான உடலும் அவரை ஒரு முரடனாகவே காட்டியது. அவர் கீழே விழுந்ததால் வலது கையும், வலது காலும் செயலற்று போய்விட்டது. இந்த மருத்துவமனையின் பெரிய டாக்டர் அவருக்கு மிகவும் வேண்டியவராக இருந்ததால் இங்கு வந்து சேர்ந்து சிகிச்சை பெறுகிறார். ஒருவார காலம் ஆகிறது. அவரைப் பார்க்க பலர் வந்தவண்ணம் இருப்பார்கள்! அட்டகாசமாக பேசிச் சிரிப்பார்.

இளைஞர்களைப் பார்த்து சிரித்த கருணாகரன் “ஏம்பா! உங்களுக்கு வேற வேலையே கிடையாதா? ரோடு, சுவர் எல்லா இடத்திலேயும்தான் “இயேசு ஒருவரே கடவுள்” அப்படின்னு எழுதுறீங்க! நோட்டீஸ் ஒட்றீங்க, ஹாஸ்பிடலுக்கு வந்தா அங்கேயும் வந்து கழுத்த அறுக்கிறீங்களே! வேலையற்றவன் வேலை செய்துகிட்டு இருக்கிறீங்க! ஏம்பா! உங்களுக்கு வேலைவெட்டி ஒண்ணும் இல்லை, அப்படித்தானே! வீட்டிலே சாப்பிட்டு சும்மா இப்படி ஊர் சுத்துறீங்களாக்கும்?”

“இல்லை ஜயா! நாங்க மூன்று பேரும் காலேஜில் படிக்கிறோம். பி.எஸ்.ஸி. பைனல் இயர்! எங்க சபையில் நாங்கள் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்! சுகமில்லாதவர்களை தேடிப்போய் சுகம் கொடுக்கும் தெய்வம் எங்க இயேசு! அவரைப்பற்றி உங்களுக்கெல்லாம் சொல்லணும், நீங்களும் இயேசுவை அறிந்து அவரிடம் கேட்டு சுகம் பெறணும் என்றுதான் வந்திருக்கிறோம்” பணிவாக பதிலளித்தான் டேனியல்.

“ஓஹோ....ஹோ” சத்தமாகச் சிரித்தார் கருணாகரன். “இயேசு சுகம் கொடுப்பார்ன்னா ஏன் ஊர் ஊருக்கு கிறிஸ்டீன் ஹாஸ்பிடல் கட்டியிருக்காங்க! சர்ச் மட்டும் கட்டியிருக்கலாமே! அங்க நோயாளிகளைக் கொண்டுபோய் ஜெபம் பண்ணியே சுகம் கொடுத்திடலாமே” ஏளனம் தொனித்தது அவர் பேச்சில்.

“ஐயா! மருந்தைப். படைத்ததும் ஆண்டவர்தான். மனிதனைப் படைத்ததும் ஆண்டவர்தான். மருந்துகளைக் கையாளும் அறிவினை மனிதனுக்குக் கொடுப்பதும் ஆண்டவர்தான். அதை மறந்துவிடாதீர்கள்”.

“தம்பி! இது இருபதாம் நூற்றாண்டு! அணுசக்தியல் யுகம்! வெண்ணிலவிலேயே தேனிலவு கொண்டாட முடியுமா என முயலும் காலம் இது”

“சந்திரனில் குடியிருக்க முடியாது என்றுதான் விஞ்ஞானிகள் அறுதியிட்டு இறுதியாகக் கூறிவிட்டார்களே” வேகமாகப் பதிலிறுத்தான் ஜோசப்.

“சந்திரனைக் காலக் குறிப்புக்காகப் படைத்தார்” (சங்.104:10) என்று அன்றே தாவீது கூறிவிட்டார். “நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும்” (ஒப.1:4) என்றும், பூமி குடியிருப்புக்காகப் படைக்கப்பட்டது (ஏசா.45:18) என்றும் எங்கள் வேதம் கூறுகிறது” டேவிட் திட்டமாகக் கூறினான்.

டேனியல் தொடர்ந்தான் “கடைசி காலத்தில் என்னென்ன நடக்கும்ன்னு கூட எங்க வேதம் சொல்லியிருக்கு அதெல்லாம் நடந்து வருகிறது. இயேசு சீக்கரம் வரப்போகிறார். நீங்க இப்படி பேசுவதை விட்டு அவரை நம்புங்கள். நல்ல சுகம், சமாதானம், மீட்பு கிடைக்கும்.”

“தம்பி! இயேசு வரப்போகிறார் என்று நான் சின்னப்பையனா இருந்தப்ப இருந்து சொல்லிகிட்டே இருக்காங்க! ஆனா அவரைத்தான் காணோம்! அட! அவர் இருந்தாத்தானே வருவார்! நான் சொல்வதைக்கேள்! வருங்காலத்தை எண்ணி நடுங்குவதைவிட்டு நிகழ்காலத்தைப்பார்! அதுதான் நிச்சயம்! இளமைப் பருவம் கிடைக்காத ஒன்று. நன்றாக அனுபவிக்கவேண்டியது. தீய வழியில் நட என்று நான் சொல்லவில்லை! நூல் நிலையத்திற்குப்போ! நல்ல, நல்ல புக்ஸ்படி! அறிவு வளரும்! பக்கத்துவீட்டில் இருக்கிற பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடு. அவர்களும் நன்றாகப்படிப்பார்கள்! உனக்கும் நல்ல காரியம் செய்த திருப்தி ஏற்படும்! இந்த வேலையற்றவன் வேலையை விட!” பெரிய சொற்பொழிவே செய்தார் கருணாகரன்.
மூவருக்கும் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை! “உங்களை இயேசுகிறிஸ்துதான் மாற்ற வேண்டும்.” அமைதியாகக் கூறிவிட்டு நகர்ந்தனர்.

மாரிமுத்துவின் படுக்கையருகே வந்தனர்! மழைமுகம் கண்ட பயிர்போல் மகிழ்ந்தார் மாரிமுத்து! இருகரம் குவித்தார். கண்கள் மளமளவென்று கண்ணீரைக்கொட்டின! டேவிட் ஆதரவாகப் பற்றினான். “அழாதீங்கையா! என்ன சொல்லணும், சொல்லுங்கையா”.

“தம்பி! நான் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து இரண் டு மாசமாச்சு! இங்கு வந்தவங்க எல்லாம் வீட்டுக்குப் போயிட்டாங்க! நான் மட்டும்” தேம்பினார்.

“அழாதீங்க! உங்களுக்கு என்ன உடம்புக்கு?” டேனியல் அக்கறையாக விசாரித்தான்.

“நான் பக்கத்து ஊர்-மடத்துக்குளம்! சொந்த நிலம் கொஞ்சமிருக்கு! நல்லா உழைப்பேம்பா! வாட்ட சாட்டமா இருப்பேம்பா!” எலும்புக்கூடுபோல் இருந்த தன் உடம்பைப் பார்த்துக் கொண்டார். பரிசோதனைச் சாலையிலுள்ள எலும்புக்கூடுதானோ என எண்ணும்படி இருந்த அவரை மூவரும் இரக்கத்தோடு பார்த்தனர்... தொடர்ந்தார்... “நெஞ்சுவலி வந்தது! சாப்பிட முடியலை! மயக்கம் மயக்கமா வர ஆரம்பிச்சிது! சிலசமயம் இரத்த வாந்தி வரும். இங்க வந்தேன். ஆரம்பத்தில் க்ளுகோஸ் ஏற்றினார்கள். இது என்ன வியாதின்னு கண்டுபிடிக்க முடியலை!”

“எக்ஸ்ரே... அதுதான் போட்டோ எடுத்தாங்களா” இடைமறித்தான் டேனியல்!

“எடுத்தாங்க, ஏதோ ஆப்ரேஷன் பண்ணனுமாம்! எனக்கு போதுமான இரத்தம் இல்லையாம். என்னோட இரத்தம் மாதிரி இரத்தம் இந்த ஆஸ்பத்திரியில இல்லையாம். எங்கேயோ எழுதி கேட்டிருக்காங்களாம். என் பெஞ்சாதி இரத்தம் தரேணுச்சு! அது இரத்தம் எனக்குச் சேராதுண்ணு சொல்லிட்டாங்க! எனக்கு நாலு பிள்ளைக! பெஞ்சாதியையும், பிள்ளைகளையும் கண்ணப்போல வச்சிருந்தேன்! இப்ப..... இப்படிப் படுத்திட்டேன்! அவ காட்டுவேலைக்குப் போறாளாம்!” விம்மினார்.

எதிர்படுக்கை கருணாகரன் கத்தினார், “இந்தாப்பா! இதையெல்லாம் டாக்டர்கிட்டே சொல்லி அழு! சின்னப் பையன்கள்கிட்ட சொல்லி என்ன பிரயோசனம்?”

ஜேசாப் கருணாகரனை நோக்கி திரும்பினான். “ஐயா! தயவுசெய்து பேசாமல் இருங்க! அவர் மன பாரத்தை எங்களோடு பகிர்ந்து கொள்கிறார். நீங்க குறுக்கிடாதீங்க!”

“தம்பி! நீங்க சொன்னீங்களே அந்த இயேசு எனக்குச் சுகம் கொடுப்பாரா? நான் பழைய மாரிமுத்து ஆகிவிடுவேனா?” ஆவலாகக் கேட்டார்.

டேனியல், “ஐயா! இயேசுசாமி இந்த உலகில் வாழ்ந்தபோது பெதஸ்தா என்ற குளமும் அதைச்சுற்றி 5மண்டபங்களுமிருந்தது. அந்த மண்டபங்களில் வியாதியஸ்தர்கள் படுத்திருந்து, குளத்தின் தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று பார்த்திருப்பார்கள். அக்குளத்தின் தண்ணீரை தேவதூதன் கலக்குவான். தண்ணீர் கலங்கியதும் முதலில் யார் குளத்தில் இறங்குகிறார்களோ, அவர்கள் எப்பேர்பட்ட வியாதியஸ்தராய் இருந்தாலும் சுகமடைவா். ஒரு நாள் இயேசு அங்கு போனார். 34 வருஷமாய் வியாதியில் படுத்திருந்த ஒருவனைக் கண்டு “நீ சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டார். உடனே அந்த நோயாளி, “ஆண்டவரே! தண்ணீர்  கலங்கும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விட ஒருவரும் இல்லை” என்று வேதனையோடு சொன்னான். உடனே ஆண்டவர் “நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே சுகமாகி படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தான்! அந்த இயேசு இன்றைக்கும்” உயிரோடு இருக்கிறார் ஜயா! நீங்க நம்புங்க! கடவுள் கிட்டே கேளுங்க! சுகம் கிடைக்கும்.”

“கேட்கிறேன் தம்பி! எனக்கு சுகம் கிடைத்தால் போதும்”

“அந்த மனிதர் சுகமாகி நடந்த அன்று ஓய்வுநாள். ஓய்வு நாள்ன்னா ஒரு வேலையும் செய்யக்கூடாது என்ற சம்பிரதாயம் அப்போ இருந்தது! அதனால் அங்கிருந்தவர்கள் இன்றைக்கு ஓய்வுநாள்! நீ போகாதே! என்றார்கள். அவர் என்ன செய்திருப்பார்ன்னு நீங்க நினைக்கிறேங்கய்யா?”

“அவரை சுகமாக்கிய இயேசு நீ போன்னு சொல்லிட்டாரே! அதனால அவர் போயிருப்பார்ன்னு நம்புறேன்! அவர் போகலைனா சுகம் கிடைக்காம போனாலும் போயிடும்”

மூவர் முகத்திலும் புன்னகை விரிந்தது.

“கரெக்ட்! உண்மை. ஐயா உண்மை! அவர் நடந்து சுகமா போய்விட்டார்! அதைப் போலத்தான் கடவுள் என்ன சொல்றாரோ அதை நம்பணும்! யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தக்கூடாது”

“சரிங்க தம்பி!”

ஜோசப், “ஐயா! இன்றைக்கு நாங்க மூன்று பேரும் உங்களுக்காக பாஸ்டிங் அதாவது விரதமிருந்து ஜெபிக்கப்போறோம்! நீங்களும் ஜெபியுங்கள்! இயேசு அற்புதம் நடத்துவார்!”

“எனக்காக இவர்கள் விரதம் இருப்பதா?” மாரிமுத்துவின் உள்ளம் ஆச்சரியப்பட்டது. கைகளை கூப்பினார். அவர் விழிகள் நீரில் மிதந்தன.

“போய்விட்டு வரோம் ஐயா!” மூவரும் அடுத்த படுக்கைக்கு நகர்ந்தனர்.

சத்தம் போட்டு சிரித்தார் கருணாகரன் “என்னய்யா எலும்புக்கூடு! நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போகப் போறயாக்கும்!” கேலியும் கிண்டலும் அவர் சொற்களில் துள்ளியது.

இரவு வந்தது! அந்த ஹாஸ்பிடலில் ஒரு சிலர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அரைத் தூக்கத்தில் முனங்கிக் கொண்டிருந்தனர், சிலர். ஆனால் மாரிமுத்து உறங்கவேயில்லை. ஒரு சிறு வித்தியாசம்! விடிவுகாலமே இல்லையே என்ற வேதனையில் உறங்காமலிருப்பார் எப்போதும்! ஆனால் இன்றோ விடிவுகாலம் உண்டு என்ற நம்பிக்கையில் “இயேசுவே சுகம் தாரும்” என்று கேட்டுக்கொண்டேயிருந்தார்! படுத்திருப்பார், சிறிது நேரம்! பின் உட்காருவார்! ஆனால் “இயேசுவே சுகம்தாரும்” என்று அவர் இதழ்கள் இசைப்பது மட்டும் நிற்கவேயில்லை! இரவும் ஓடியது. அதிகாலை 4மணி. “மகனே!” அன்பின் அழைப்பு! கண்களைத் திறந்து பார்த்தார் மாரிமுத்து.

முழுநீள அங்கியில் ஓ்ர் இளைஞா் நின்றிருந்தார். கட்டான உடல்! களையான முகம்! சுருண்ட தங்க நிறக்கேசம்! கருணை பொங்கும் விழிகள்! அதில் அன்பும் அருளும் அருவியென பொழிந்தது. அவர் கரத்தில் ஒரு கண்ணாடி டம்ளர். அதில் சிவப்புநிற திரவம். தன் கரத்தை மாரிமுத்துவை நோக்கி நீட்டிய அவர்,
“மகனே! குடி!” என்றார்.

“மகனே!” என்றழைக்கின்றாரே, யார் இவர்? என மாரிமுத்துவின் உள்ளம் அலைமோதியது. மாரிமுத்துவிற்குத் தந்தை யார்? என்றே தெரியாது. மிகச் சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவர். பாசமிகுந்த அழைப்பும், அன்புக் கட்டளையும் கேட்டு அடிபணிந்தார். மாரிமுத்து குடித்தார். அவர் உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதுபோல் உணர்ந்தார். ஓர் புதிய சக்தி அவர் உடலில் பொங்கியது! தன்னருகே நின்றவரைப் பார்த்தார். பேச நாவெழவில்லை. வந்தவர் முகத்தில் புன்னகை மிளிர்ந்தது. “மகனே! என்னைத் தெரியவில்லையா? உனக்காக சிலுவையில் அறையப்பட்ட இயேசுதானப்பா நான்!” திருவாய் மலர்ந்தார்.

திரும்பி நடந்தார். இதோ வார்டை கடக்கப் போகிறார். மாரிமுத்துவால் அடக்கமுடியவில்லை. படுக்கையை விட்டுக் குதித்தார்.

“இயேசப்பா! போகாதீங்க! நான் வரேன்! நான் வரேன்!” கத்திக்கொண்டே ஓட ஆரம்பித்தார். அதற்குள் இயேசு வார்டைக் கடந்து வராண்டாவில் நின்று திரும்பினார். மாரிமுத்து முழங்கால்படியிட்டார். கண்ணீர் வெள்ளம் புரண்டது. இயேசு தன் ஆணி துளைத்த கரத்தை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

“இயேசப்பா! இயேசப்பா” மாரிமுத்துவால் வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை. மாரிமுத்துவின் சத்தத்தால் வார்டில் அனைவரும் பரபரப்புடன் எழுந்தனர். நர்சு ஓடி வந்தார். கருணாகரனும் விழித்தார். கலவரத்திற்குக் காரணம் மாரிமுத்து என அறிந்ததும் “கிறிஸ்தவ பையனுகள் வந்துவிட்டு போனானுகல்ல! எலும்புக்கூடுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு! நம்ம உயிரை வாங்குது!” கோபமாக கத்திவிட்டு படுத்துக்கொண்டார். ஒருசிலர் “இப்பத்தான் கண் அசந்தேன். பாவி... கெடுத்துட்டான்” முணங்கினர்! நாஸ் வரண்டாவிற்கு வந்தார்.

இயேசு மெல்ல மெல்ல உயரச் சென்றார். மாரிமுத்து கூப்பிய கரங்களோடு மேலே பார்த்துக் கொண்டே நின்றார். வானத்தில் மறைந்து போனார் இயேசு.

மாரிமுத்து! என்ன இது ஏன் இப்படி கலாட்டா பண்றே?” கோபமாகக் கேட்டார் நர்ஸ்.
“நர்ஸ். இயேசு சுவாமி இங்கே வந்தார் "
“என்ன மாரிமுத்து உளர்ற? கனவு கண்டாயா?”

“இல்லைங்க! நான் என் கண்ணால் பார்த்தேன். என் படுக்கை அருகே வந்தார். எனக்கு ஒரு டம்ளரில் சிவப்பா ஒரு மருந்து கொடுத்தார். குடிக்கச் சொன்னார். குடித்தேன்... இங்கே வந்து... என்ன ஆசீர்வதிச்சிட்டு மேலே போய்விட்டார்” உற்சாகமாக, உரத்த சத்தத்தில் சொன்னார் மாரிமுத்து.

“என்ன சொல்ற நீ?” நர்ஸும் இன்னும் ஒரு சிலரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

“நான் சொல்றதுல நம்பிக்கை உங்களுக்கு ஏற்படலையா? சரி என்னப்பாருங்க. நான் எப்படி இருக்கேன்? நல்ல சுகமாயிட்டேன். இப்ப கூடவா நம்ப முடியலை?” கைகளை சிறுபிள்ளையைப் போல் நீட்டி மடக்கினார். ஒரு ஜாம்பவான்போல கம்பீரமாக நடந்து தன் படுக்கைக்குச் சென்றார். மாரிமுத்துவின் பேச்சில், திரும்பத் தூங்க நினைத்தவர்களும் எழுந்து உட்கார்ந்து அவரைப் பார்த்தனர். அவர்கள் கண்களை அவர்களாலே நம்ப முடியவில்லை. பாத்ரூம் செல்லக்கூட தட்டுத் தடுமாறி யார் துணையாவது கிடைத்த பின் நகரும் மாரிமுத்துவா இவன்?

“மாரிமுத்து சுகமடைந்துவிட்டான்! அப்படியானால்... அப்படியானால்... இயேசு உண்மையாக வந்து சுகம் கொடுத்திருக்கிறார்” ஒவ்வொருவர் உள்ளமும் பேசியது. “நான் நம்பாமற்போனேன்! எனக்கும் சுகம் கிடைத்திருக்குமே!” தன்னையே நொந்து கொண்டனா்

சிலர். மாரிமுத்து தன் சாமான்களை மூட்டை கட்டிக் கொண்டான். விடிந்தது...! காலை மணி எட்டு!

“மிஸ்டா கருணாகரன்! உங்களுடைய வலது காலிலும் கையிலும் வலியோ, உணர்ச்சியோ சிறிதும் இல்லை. என்னால் முடிந்தவரை முயற்சியெடுத்துவிட்டேன்! நீங்கள் இங்கிருப்பதால் பயன் இல்லை. வேலூர் வேண்டுமானால் போய்ப்பாருங்கள்” கருணாகரனின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அடுத்த படுக்கைக்கு நகர்ந்தார் பெரிய டாக்டா் தாமோதரன். அவரைப் பின்தொடர்ந்தார் டாக்டா் டேவிட்.

எந்த டாக்டரை நம்பி வந்தாரோ அந்த டாக்டர் கைவிரித்துவிட்டதை அறிந்து திடுக்கிட்டார் கருணாகரன். அடித்து வைத்த சிலையானார். மாரிமுத்துவின் படுக்கைக்கு வந்தனர்.
“வணக்கம் டாக்டர் நான் நல்லா சுகமாகிவிட்டேன். இயேசு எனக்கு சுகம் கொடுத்துவிட்டார். வீட்டுக்குப் போகிறேன் டாக்டர்!” உற்சாகமாகச் சொன்னார் மாரிமுத்து வார்டுக்கு வரும் முன்பே அதிகாலை நடந்த விவரங்களை ஓரளவு இருவரும் கேட்டிருந்தனர்!

“என்ன மாரிமுத்து? இயேசு சுகம் கொடுத்தாரா? எப்படி?” உண்மையான ஆவலுடன் கேட்டார் டாக்டர் தாமோதரன்!

நேற்று மதியம் மூன்று இளைஞர்கள் வந்து சொன்னதிலிருந்து இன்று அதிகாலை நடந்ததுவரை அனைத்தையும் உற்சாகமாகச் சொன்னார் மாரிமுத்து.

டாக்டர் டேவிட்டின் உள்ளம் பேசியது. ஆம்... அவர் மனசாட்சி கேள்வி கேட்டது. “நீ பலமுறை மாரிமுத்துவையும் அவரைப் போன்ற பல நோயாளிகளையும் அன்றாடம் சந்தித்தும் கூட ஒரு முறையாவது ஒருவரிடமாவது இயேசுவைப் பற்றி சொன்னாயா?” என்று. தான் ஒரு கிறிஸ்தவனாக இதுவரை வாழவில்லை என எண்ணினார்! இனிமேலாவது அருமருந்தாம்
அருமை இரட்சகரை மற்றவர்களுக்கு தன்னால் முடிந்தபோது அறிவிக்க வேண்டுமென உறுதி செய்துகொண்டார் டாக்டர் டேவிட்.

“மாரிமுத்து! உனக்கு நாளைக்கு எக்ஸ்ரே... உம் போட்டோ எடுக்கலாம் என்று உள்ளோம்! எடுத்துப்பார்த்து விடலாமே! உனக்கும் சுகமாயிட்டோம் என்று நிச்சயம் ஏற்படும் அல்லவா?

“வேண்டாம் டாக்டா்! எனக்கு நல்லா சுகமாயிட்டது. சுகம் மட்டுமல்ல! நல்ல சக்தியும் கிடைச்சிருக்கு! சந்தேகமிருந்தாத்தானே போட்டோ எடுக்கணும். கடவுள்... ஆமா... என் இயேசப்பா கொடுத்த அதிசயமான சுகத்தை நான் சந்தேப்படலை! நான் வீட்டுக்குப் போறேன் டாக்டர், “மாரிமுத்துவிடம் காணப்பட்ட அசைக்க முடியாத விசுவாசம் டாக்டர் டேவிட்டை அசைத்தது.

“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்ற வசனத்தை நினைவுகூர்ந்தார் டாக்டா் டேவிட். புன்சிரிப்போடு விடை கொடுத்தார் தாமோதரன்.

கருணாகரனின் படுக்கையருகே வந்தார். கருணாகரனுக்கு பேச நாவெழவில்லை. தனது நம்பிக்கை இடிந்து சரிந்து ஒன்றுமில்லாமல் போனதையும் வேலையற்றவன் வேலை என்று தான் கேலி செய்த காரியம் ஆச்சரியமான விடுதலையைக் கொண்டு வந்ததையும் அவரால் கிரகிக்க முடியவில்லை.

“ஐயா! உங்க வாய்க்குச் சர்க்கரைதான் போடணும். நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி போகப்போறன்னு சொன்னீங்க! இயேசு சாமியின் கருணையால அது அப்படியே நடந்துருச்சி! நான் போறேன்”.

“மாரிமுத்து” நாத்தழுத்தது கருணாகரனுக்கு “என்னை மன்னிச்சிடுப்பா! உன்னை எப்படியெல்லாமோ கேலி செய்தேன். அதுக்கு எனக்கு தண்டணை கிடச்சிருச்சுப்பா” திடகாத்திரமான சரீரம் குலுங்கியது. அழுதே பழக்கப்படாத அவர் விழிகள் கண்ணீரைச் சிந்தின.

“கவலைப்படாதீங்கையா! கடவுள். ஒருத்தர் இருக்காரய்யா! அவர் இரக்கமுள்ளவர் ஜயா! நீங்க அவர் இல்லைன்னு சொன்னதுக்கு அவர்கிட்ட மன்னிப்பு கேளுங்கையா! இயேசு சாமியால் எல்லாமே செய்ய முடியும். கேளுங்கையா! கிடைக்கும்” என்ற வார்த்தைகளை அனைவர் காதிலும் விழட்டும் என்ற எண்ணத்தோடு. சத்தமாகச் சொன்னார்.

பின் வேகமாகத் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்! இவ்வுலக வீடுநோக்கி மாத்திரமல்ல! பரலோக வீட்டிற்குப் பங்காளியாவதற்கேற்றபடி நடக்க ஆரம்பித்தார். தன் அன்புத் தந்தை இயேசுவைப் பற்றி தன்னைப்போல் நோயால் வாடும் மக்களுக்கு, பிரச்சனையில் வாடும் மக்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களும் தானடைந்த மகிழ்ச்சியடைய வேண்டும்” என்ற உறுதி பூண்டவராக நடக்க ஆரம்பித்தார். எம்பெருமான் இயேசுவின் உள்ளம் பூரித்தது

இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story இதயம் தந்த பரிசு - கதை

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download