தொடர் - 3
ஜெபசிங்கின் தந்தை மதுரை மாநகரிலே பிரபலமான புகழ்பெற்ற வக்கீல் டேனியல் சுந்தர்சிங்! வாதாடுவதில் மன்னன்; சட்ட நிபுணர்; அவரிடம் வந்த வழக்குகள் ஒன்றுகூட தோல்வி அடைந்ததில்லை. ஆலயப் பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் அவர்தான் பொருளாளர்! ஆலயத்திற்கென. நன்கொடைகளை அள்ளி வழங்கியுள்ளார். அவரின் செல்லமகன்-சேஷ்டபுத்திரன் தான் ஜெபசிங்! தந்தையின் விருப்பப்படியே வாழ்ந்து வந்த ஜெபசிங் பள்ளியிறுதி வகுப்பு அடைந்தான். வேண்டாத, விரும்பத்தகாத நட்புகள் கிடைத்தன. சிகரெட், சினிமா என கெட்டப்பழக்கங்கள் அவனைப் பற்றிக்கொண்டன. சினிமா, சிகரெட் இவற்றைப் பெரும் பாவமாக டேனியல் கருதவில்லை. ஏனெனில் “செயின் சுமோக்கர்” எனப் பெயர் வாங்கியவர் டேனியல். ஆலயத்தினுள் சிகரெட் குடிப்பது மட்டுமே பாவம் எனக்கருதும் பக்திமான். எனவே மகனை கண்டிக்கவில்லை. தாய் கண்ணீர் வடித்தாள். தனயன் மனமோ இளகவில்லை. “பைத்தியக்கார அம்மா” என தாய்க்கும் பட்டம் சூட்டிவிட்டு பட்டாம் பூச்சியாய் மாயவுலகில் பறந்து திரிந்தான். ஒருநாள்....! அந்நாள் அவன் வாழ்வில் மறக்க முடியாத நாள். தன் நண்பர் குழாமுடன் அரட்டை அடித்துக்கொண்டு சினிமாவிற்காகச் சென்று கொண்டிருந்த ஜெபசிங், கூட்டங் கூட்டமாக பைபிளும் கையுமாகச் சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தான்.
“6 மணிக்கு தமுக்கம் மைதானம். வந்துவிடு” என்ற தந்தையின் கட்டளையும், தாயின் வேண்டுதலும் செவிகளில் தொனித்தது.
“போடா! பைத்தியக்காரா! புதுப்படம் ஜாலியாய் போய் பார்த்துட்டு வீட்டுக்குப்போ, நற்செய்திக் கூட்டம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு வர மணி பதினொன்று ஆகிவிடும். கூட்டத்துக்கு வந்திருந்ததாகச் சொல்லிவிட்டால் போகிறது!” அவன் மனம் குறுக்குவழி சொல்லிக்கொடுத்தது.
ஆனால் ஏதோ ஒரு குரல் அவனை “தமுக்கம் மைதானம் போ!” என ஆணையிடுவதை அவனால் உணர முடிந்தது. அவன் கால்கள் பின்னின. அவனால் நடக்க முடியவில்லை. “தனக்குத் தலை வலிப்பதாகக் கூறிவிட்டு நண்பர்களை விட்டுப் பிரிந்தான். அவன் பிடிவாதக்காரன். எனவே அவனை வற்புறுத்தாமல் நண்பர்கள் பிரிந்து சென்றனர். தமுக்கம் நோக்கிச் சென்றான். ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தான். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மேடையிலே நற்செய்தியாளர் உணர்ச்சிப் பிழம்பாக செய்தி கொடுத்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் ஆள்காட்டி விரல் ஜெபசிங் நின்ற திசையை நோக்கி நீண்டது.
“வாலிபனே! ” நீ எங்கேயிருக்கிறாய்?” அன்று ஆதாமைப் பார்த்துக் கேட்ட தேவன் இன்று உன்னைப் பார்த்துக் கேட்கிறார். “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதாமைப் போல பாவத்தில் வீழ்ந்து, தேவ சமூகத்தை விட்டு விலகி உன்னை ஒளித்துக் கொண்டிருக்கிறாயா? பாவத்தில் வீழ்ந்த ஆதாமைப் புறக்கணித்து அழித்துவிட தேவன் விரும்பவில்லை. ஏன் தெரியுமா? அவர் அன்பே உருவானவர். அவனைத் தேடிவருகிறார். ஒன்றும் அறியாதவர் போல் அவனோடு உரையாடுகிறார். “புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ? "தேவன் அறியாதவர் போல் கேட்கிறார். ஆதாம்” தன் குற்றத்தை உணர்ந்து அவர் பாதத்தில் வீழ்ந்து, கண்ணீர்விட்டுக் கதறி தன் பாவத்தை அறிக்கையிடவில்லை. “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்தீரியானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன்” என்றான். எனக்கருமையானவர்களே! இந்த இடம்தான் நாம் சிந்திக்க வேண்டியது. தவறை ஒத்துக்கொள்ளும் மனப்பான்மை இல்லை ஆதாமுக்கு. அடுத்தவன் மீது பழியைப் போடுகிறான். ஓ! இன்று நீயும் கூட அப்படித் தானே செய்கிறாய்! நண்பர்களுக்காக சினிமாவிற்குப் போகிறேன்.
சினிமா பார்ப்பது பாவமா? சிகரெட் குடிப்பது பாவமா? பைபிளில் எங்கே போட்டிருக்கிறது?” என்று கேட்கிறாய் இல்லையா? உன் முன் ஒரே ஒரு வசனத்தை மாத்திரம் வைக்கிறேன். பிரசிங்கி 11:9 “வாலிபனே! உன் இளமையில் சந்தோஷப்படு உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட” ... ஆம் உன்: இருதயம் மகிழும்படி நீ என்ன வேண்டுமானாலும் செய் சிகரெட் தேவையா குடி! சினிமா வேண்டுமா? பார்! எல்லாவற்றையும் செய்.
ஆனாலும்.... வசனத்தில் பின் பாகத்தை கவனி! “ஆனாலும்.... இவை எல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறி”. மறந்துவிடாதே! ஒருநாள்.... நீ தேவாதி தேவனை சந்திப்பாய்! அவர் முன் நின்று பதில் சொல்லியாக வேண்டும் அதற்கு முன் சீர்திருந்து! அருமையான சகோதரனே! கிருபையின் காலம் முடிந்துவிடவில்லை! ஆதாமைப்போல பழியை வேறு ஒருவர் மீது சுமத்தாதே அதனால் ஆதாம் தனக்கும், தன் குடும்பத்திற்கும், தன் பின் சந்ததிக்கும் தீராத பாவத்தை, சாபத்தைக் குவித்துக் கொண்டான். நீ உன் பாவங்களை ஒத்துக்கொள். தேவசமுகத்தில் கண்ணா்விட்டு கதறு! தேவனோடு ஒப்புரவாகு! தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்! உயர்த்துவார்!” அவர் பேசப் பேச ஜெபசிங்கின் உள்ளம் உடைந்து சுக்கு நூறாகியது! கண்கள் கண்ணீரைக் கொட்டின. அவனால் அங்கு நிற்க முடியவில்லை! ஓடினான்! வீடு நோக்கி! இரவு உணவை மறந்து விட்டான். தனி அறைக்குள் சென்று கதவை அடைத்தவன் படுக்கையில் வீழ்ந்து கதறினான்! சின்னஞ்சிறு வயதில் தேவனோடு நடந்த அவன், தற்போது அவரை விட்டு எங்கோ விலகிச் சென்றுவிட்டதை உணர்ந்தான்.
முழங்காலில் வீழ்ந்தான். தன் பாவப்பாரத்தை இறக்கி வைக்க ஆரம்பித்தான். நிமிடங்கள், மணிகளாக உருண்டன! அவன் உள்ளம் இலேசாகியது! ஓர் ஒளிக்கதிர் அவன் மீது பாய்வதை உணர்ந்தான். ஆணி அடிக்கப்பட்ட கரம் அவன் தலை மீது இருந்து அவனை ஆசீர்வதித்தது. அவன் இதயம் மகிழ்வில் பொங்கியது. “நன்றி இயேசப்பா! நன்றி!” இதழ்கள் இடைவிடாமல் இசைத்தன. முழங்காலினின்று எழுந்தான்! புதுப்பாதை , விசாலமான, பஞ்சு மெத்தைப் பாதையல்ல! குறுகலான, திடீரென தோன்றும் பள்ளங்களும், மலைகளும், கல்லும், முள்ளும் நிறைந்த பாதை! ஆனால், அப்பாதையில் அவனோடு இணைந்து , அவனருகே நிற்பவர் அவனுக்காக உயிரையே கொடுத்த ஒப்பற்ற நண்பரும், நற்தந்தையும், பாசமிகு அன்னையுமாய்த் திகழும் அன்பர் இயேசு! அவன் நடக்க ஆரம்பித்தான்! பழைய உல்லாச வாழ்வு மறைந்தது! பழைய நண்பர்கள் நழுவினர். பள்ளியில், இவன் பக்தி வாழ்வை பரிகசித்து மகிழ்ந்தவர் பலர்! முதலில் ஒரு இனம் புரியாத தனிமையுணர்வு தோன்றினாலும், வேத வாசிப்பிலும், ஜெபத்திலும் நேரத்தை செலவழிக்க ஆரம்பித்ததும், அவனை தேவனின் இனிய பிரசன்னம் நிரப்பிற்று. அவனுடைய நண்பா்கள் பிரிந்ததைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் அவனுடைய அன்புத் தந்தையும் அவனிடமிருந்து பிரிக்கப்படுவார் என்பதை அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை!
இதன் தொடர்ச்சி நீயா இல்லை நானா? என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.