உலகம் முழுவதும் சுவிசேஷம் எங்கு பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பலன் தருகிறது (கொலோசெயர் 1:6) . தேவனுடைய வார்த்தை மக்களை, அவர்களது குடும்பங்களை, குழுக்களை, பொருளாதாரத்தை, சமூகத்தை, தேசத்தை மாற்றுகிறது.
நெருக்கி ஏவும் அன்பு
மக்கள் பல்வேறு இடங்களில் வாழ்கின்றனர், சிலர் எவ்வித தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பாலைவனங்கள், வனப்பகுதிகள், மலைகள், தீவுகள் போன்ற பகுதிகளிலும் வசிக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு அவருடைய சீஷர்களை உலகின் தொலைதூர பகுதிகளுக்கு மற்றும் இதுபோன்ற வளர்ச்சியடையாத இடங்களுக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்துகிறது. ஆம், "கிறிஸ்துவினுடைய அன்பு நெருக்கி ஏவுகிறது" (2 கொரிந்தியர் 5:14).
நேபாளத்தில் உள்ள செப்பாங் மக்கள்
இது இமயமலையில் உள்ள ஒரு சிறிய தேசம், ஒரு காலத்தில் இந்து ராஜ்யமாக அறிவிக்கப்பட்டது, புத்த மதத்தை நிறுவிய புத்தர் இங்கு பிறந்தவரே. தொலைதூர நேபாளத்தில், செப்பாங் என்ற இனக்குழு உள்ளது. இந்த மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், மற்ற பிராந்தியங்கள் நன்கு வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் மற்றும் செழிப்பையும் அடைந்த போதிலும்; கல்வியில் குறைபாடுகளுடனும் மற்றும் பொருளாதார பற்றாக்குறையுடனும் இவர்கள் வறுமையில் வாழ்கின்றனர்.
போட்டி இல்லை
சில மிஷனரிகள் அந்த பகுதிகளுக்குச் சென்று நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் மாற்றத்தையும் ஏற்படுத்தினர். அத்தகையவர்களுக்கு சேவை செய்வதில் போட்டி இல்லை. அரசு அதிகாரிகள் உட்பட யாரும் அவர்களிடம் செல்ல விரும்பவில்லை. ஊழியம் செய்ய அழைக்கப்பட்டு, அன்பினால் நெருக்கப்பட்டு, மிஷனரிகள் நற்கிரியைகள் செய்யச் சென்றனர்.
மாற்றம்
ஒரு வயதான செப்பாங் மனிதரின் சாட்சி; "நாங்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன்பு, எங்கள் குழந்தைகள் ஏழு வயதில் புகைபிடிக்க ஆரம்பித்து, இறக்கும் வரை புகைபிடிப்பதைத் தொடர்ந்தனர். மேலும் அறுவடை முடிந்ததும், நாங்கள் அரிசி பீர் செய்து, அதையே குடித்து முடித்தோம். பின்பு மூன்றே மாதங்களில் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று. குடிப்பழக்கம் காரணமாக சமூகத்திற்குள் நிறைய சண்டைகள் ஏற்பட்டு காவல்துறையை அழைக்க வேண்டியதாயிற்று. அவர்கள் இரு தரப்பினரிடமும் லஞ்சம் கேட்பார்கள். போலீசுக்குப் பணம் கொடுப்பதற்காக கால்நடைகளை விற்க வேண்டியிருந்தது. அது மாத்திரமல்ல கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன்பு, எங்களில் யாராவது நோய்வாய்ப்பட்டால், நாங்கள் எங்கள் விலங்குகளை ஆற்றங்கரை ஓரமாக உள்ள மரத்தின் கீழ் பலியிடுவோம், இப்போது நாங்கள் கிறிஸ்தவர்களாகிவிட்டோம், சிகரெட், குடி என பணத்தை வீணாக்காமல் சேமித்துள்ளோம். இப்போது வருடம் முழுவதும் சாப்பிட சோறு இருக்கிறது. எங்கள் விலங்குகள் எங்களின் உடைமையாக இருக்கிறது; எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள்".
நான் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டதன் மூலம், இப்படிப்பட்ட மாற்றத்தை அனுபவித்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்