நீல நிற பங்களாவின் முன் கோட்டும், சூட்டும், டையுமாக ஸ்கூட்டரில் அமர்ந்திருந்தார் புரபசர் பிரகாஷ் பட்டுச்சேலை சரசரக்க அழகிய கைப்பை பளபளக்க, பங்களாவை விட்டு வெளியே வந்த அவர் மனைவி விரிவுரையாளர் விமலா, ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்தாள். அவள் வலக்கரம் அவர் தோளில் அமர, ஸ்கூட்டர் கிளம்பியது. பார்ப்பவர்கள் எல்லாம் எவ்வளவு ஒற்றுமையான தம்பதியினர்? என்று ஆச்சரியப்படுவார்கள். அவர்களுக்கு பின்னால் சைக்கிளில் வந்து கொண்டிருந்த சகோதரன் ஜெயகரன் மட்டும் பெருமூச்சு விட்டார். ஒரு சில மாதங்களுக்கு முன் அவரும் கூட மற்றவர்களைப் போலத்தான் இவர்களைக் குறித்து படிப்பு, அழகு, வேலை எல்லாவற்றிலும் பொருத்தமான தம்பதியினர், இவர்கள்!” என்றே எண்ணியிருந்தார்.
அவர் மனம் பின்நோக்கி நகர்ந்தது. அன்றொரு நாள், வாலிபர்களுக்கான ஒரு நாள் ஆசீர்வாத முகாமில் "வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்? உம்முடைய வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்கிறதில்தானே!' என்ற வசனத்தின் அடிப்படையில் செய்தி கொடுத்து, வாலிபர்களை ஜெபத்தில் வழிநடத்தினார், சகோ. ஜெயகர்-- கூட்டம் முடிந்த பின் இவரை சந்திக்கத் தயங்கித் தயங்கி வந்தான் ஓர் இளைஞன். அருகில் வந்து அவரது முகவரியை பெற்றுக் கொண்டான், அன்றிரவே அவரை அவர் வீட்டில் சந்தித்தான். அவன் வேறு யாருமல்ல! பிரகாஷ்- விமலா தம்பதியினரின் 'சேஷ்ட புத்திரன் ஜெய்சிங்!
அவன் மூலம் கேட்ட செய்தி அவர் நெஞ்சைப் பிளந்தது. வீட்டிற்கு வெளியே ஜோடிப் புறாக்களாகச் சிறகடித்து பறந்து செல்லும் பிரகாஷ்-விமலா தம்பதியினர், வீட்டினுள்ளே கீரியும், பாம்புமாக வாழ்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதேயில்லை. வேலைக்காரி சமைத்துப் போட்ட உணவை அவரவரே போட்டுக் கொண்டு உணவருந்தினோம் எனப் பேர் பண்ணி கிட்டு, ஏனோ, தானோவெனை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
தாயின் அரவணைப்போ தந்தையின் கண்டிப்போ, பரிவோ, ஜெயசிங்கிற்கோ, அவன் தம்பி விஜயசிங்கிற்கோ கிடைக்கவில்லை. பாசமற்ற சூழல்! பேசினால் கோபமும், எரிச்சலும் தாண்டவமாடும் அந்த இல்லம்... இல்லமாக அல்ல! இருண்ட கானகமாகக் காட்சியளித்தது. ஜெய்சிங்கிற்கு தவறான தொடர்புகள் நாடி வர போதை மருந்துக்கு அடிமையானான் இன்று பள்ளியிறுதி வகுப்புப்படிக்கும் அவனை ஆசீர்வாத முகாம் மூலம் பரம தகப்பன் இயேசு தொட மனங்கசந்து அழுது தன் பாவங்களை அறிக்கையிட்டு இரட்சிப்பைப் பெற்று கொண்டதாகவும், மேலும் ஆலோசனை பெறவே அவரை நாடி வந்திருப்பதாகவும் கூறினான். அவன் விழிகள் கலங்கியிருந்தன. ஜெயகரின், கண்களினின்று கண்ணீர் வழிந்தது. அவனைப் பாசத்தோடு அணைத்துக் கொண்டார்.
அநாதி சினேகத்தால் சிநேகிக்கும் ஆண்டவரைப் பற்றி அவனுக்கு மேலும் எடுத்துரைத்தார். இருவரும் ஜெபித்தனர் தெளிந்த மனதோடு விடை பெற்றுச் சென்றான். அதன் பின் ஜெயகர்-ஜெய்சிங் தொடர்பு அண்ணன் தம்பி உறவாக மலர்ந்தது.
வாழ்விலே மாற்றம், வேதவாசிப்பும், ஜெபமும் அவன் மூச்சாகியது. தீய நண்பர்கள் அவனை விட்டு விலகினர். 10 வயது நிரம்பிய தம் தம்பிக்குத் தானே அன்னையும், தந்தையுமாய்த் திகழ ஆரம்பித்தான். தம்பி அண்ணனின் அன்பில் மூழ்கினான். அவன் உடல், மனம், ஆன்மிகத்தில் ஒரு வளர்ச்சி! மலர்ச்சி! அந்த வறண்ட பாலைவனத்தில் ஒரு சிறிய சோலைவனம் உதயமாகியது.
இதையெல்லாம் எண்ணிப்பார்த்த ஜெயகர் ஜெயசிங் வாழ்வில் மலர்ச்சியைக் கொண்டு வந்த இயேசுவே, “பிரகாஷ்-- விமலா” தம்பதியினரின் வாழ்விலும் ஒரு மலர்ச்சியைக் கொண்டு வாருமப்பா! என மன்றாடினர்.
மாலை நேரம்! மணி 6. வாசலையே வைத்த விழி' வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் விஜய்! வேகமாக வந்த ஜெய்சிங், சாரி விஜய்! லேட்டாகி விட்டது. 5 நிமிடத்தில் புறப்பட்டு வந்து விடுவேன். பொருட்காட்சி பார்க்கப் போகலாம்!'” என்று கூறியபடி மாடிப்படிகளில் வேகமாக ஏறினான். இன்னும் இருபடிகளே இருந்தன. கால் இடறி, மட மட வென உருண்டு கீழே விந்து விழுந்தான்.
அண்ணா! விஜியின் கதறல் பங்களாவின் சுவரில் மோதி எதிரொலித்தது. வாசலில் ஸ்கூட்டர் சத்தமும் கேட்டது. இரத்த வெள்ளத்தில் மிதந்தான் ஜெய்சிங் மகனைக் கண்ட பெற்றோர் உள்ளம் துடித்தது. காரியங்கள் துரிதமாக நடைபெற்றன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் ஜெய்சிங்.
டாக்டர் திலக், “புரபஸர் சார்! உங்க மகனுக்கு அதிக இரத்தம் வீணாகி விட்டதால் உடனே இரத்தம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவனைக் காப்பாற்ற முடியும்... ஆனா... அவன் குரூப் இரத்தம் எங்களிடம் தற்போது இல்லை...”?
குறுக்கிட்டான் விஜய், டாக்டர் சார்! என் இரத்தத்தை எடுத்து அண்ணனுக்குக் கொடுங்க சார், அண்ணன் இல்லாமல் நான் இந்த உலகத்திலே இருக்கமாட்டேன் சார்?' கதறினான் விஜய்.
டாகடர் அவனை அன்போடு பார்த்தார். பொறு தம்பி! நீ சின்னப் பையன்! என்று கூறும் போதே.
“டாக்டர்! நான் செத்துப் போனாலும் பரவாயில்லை... என் இரத்தத்தை எடுத்துக்குங்க டாக்டர்! அண்ணன் இல்லாம நான் இருக்கவே மாட்டேன். எனக்கு அண்ணனைத் தவிர யாருமே இந்த உலகத்திலே இல்ல டாக்டர்! கத்தினான்.
டாக்டர் மட்டுமல்ல... பிரகாஷும், விமலாவும் துடித்து நிமிர்ந்தனர். விமலாவின் நெஞ்சில் யாரோ சம்மட்டி கொண்டு அடிப்பது போலிருந்தது. ஓரிரு வினாடிகள் ஓடி மறைந்தன.
“டாக்டர்! எங்க இரத்தத்தை டெஸ்ட் செய்யுங்க! "மெளனத்தைக் கலைத்தார் புரபஸர்.
காரியங்கள் துரிதமாக நடைபெற்றன. பிரகாஷ், விமலா இருவரின் இரத்தமும் ஒரே குரூப், எனவே இருவரின் வேண்டுகோளின்படி இருவர் இரத்தமும் ஜெய்சிங்கிற்கு செலுத்தப்பட்டது.
கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ஜெய்சிங். அண்ணன் காப்பாற்றப்பட்டுவிட்டான் என்று முடிவு தெரிந்தபின் உணவருந்திய விஜய் இப்பொழுது தான் ஹாஸ்பிடலின் முன் வராண்டாவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சாளரத்தின் வழியே தன் பார்வையை ஓட்டியபடி நின்றிருந்தாள் விமலா.
அவள் நினைவலைகள் கடந்த கால நிகழ்ச்சிகளில் அலைமோதிக் கொண்டிருந்தது. பிரகாஷ் அறைக்குள் நுழைந்ததை அவள் கவனிக்கவே இல்லை.
பிரகாஷ் அவளருகே வந்தார். அவள் முகத்தைத் தன்பால் திருப்பி,
விமலா! உத்தமியாகிய உன்னை சந்தேகப்பட்டுப் பேசியது தவறு என்னை மன்னித்து விடம்மா!?
அவர் கண்கள் கலங்கியிருந்தன. அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின.
நீங்களும் என்னை மன்னித்து விடுங்கத்தான் உங்க சந்தேகத்தைப் போக்குவதற்கான முயற்சியில் நான் இறங்காமல், என்னை சந்தேகிச்சிட்டீங்களே என்ற வருத்தத்தில் நானும் வீராப்பா இருந்திட்டேன். வீட்டைக் கட்ட வேண்டிய நானே... வீட்டை இடிச்சுக்கிட்டிருந்திட்டேனே! தாயன்பு கூட காட்டாமல் என் பிள்ளைகளை அநாதையாக்கிட்டேனே! குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.
“நடத்ததை மறப்போம், நடப்பதை நினைப்போம். அழாதே அழாதேம்மா! கண்ணீரைத் துடைத்துவிட்டார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் அங்கு அன்பின் பிரவாகம்.
அறைக்குள் நுழைந்த விஜய் தன் தாயின் கண்ணீரைத் தகப்பன் துடைப்பதைக் கண்டான் அதிர்ச்சி கலந்த ஆனந்தம் அடைந்தான்! தானும் தன் அண்ணணும் அம்மாவும், அப்பாவும் இணைய வேண்டும் என ஜெபித்த ஜெபத்திற்கு நல்ல பதில் கிடைத்தது அறிந்து ஸ்தோத்திரம் இயேசப்பா! என அவன் இதழ்கள் இசைந்தன.
இடிந்து கொண்டிருந்த கோபுரம் எழுந்து நிமிர்ந்து நின்றது. இயேசுவின் இன்னருளால்.
Author: Sis. Vanaja Paulraj