"பார்க்கிறீர்களே! (நெகே 2:17)
எசேக்கியாவின் அடுத்த அடி, தன்னோடு எழுந்து கட்ட வந்தவர்களை நோக்கி, "எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் 'பார்க்கிறீர்களே!' " என்று சவாலிட்ட நெகேமியாவின் அறைகூவலுக்கு நிகரான ஒன்று.
தன்னோடு கூடிய ஆசாரிய, லேவியரைப் பார்த்து,"லேவியரே கேளுங்கள்..நம்முடைய பிதாக்கள் துரோகம் பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து.. அவருக்கு முதுகு காட்டினார்கள். அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் தூபங்காட்டாமல், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள். இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிர கோபம் நம்மை விட்டுத் திரும்பும்படிக்கு... நீங்கள் உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம் பண்ணி, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டு போங்கள்.." (2 நாளா 29:5-10) என்று எசேக்கியா சொன்னது, "நாம் இருக்கிற சிறுமையைப் பார்க்கிறீர்களே!" என்ற நெகேமியாவின் வேதனை நிறைந்த வார்த்தைகளுக்கு எவ்வளவும் குறையாததல்லவோ?
மீதியான தேவ ஜனமே, தேவ சபை பாழாயிருக்கிறதையும், தேவ ஜனத்தின் ஆவிக்குரிய அலங்கங்களும், பரிசுத்த வாசல்களும், கிறிஸ்தவக் குடும்பங்களும், வாலிபரின் வாழ்க்கைகளும் பாழாகி, சத்துருவால் சுட்டெரிக்கப்பட்டுக் கிடப்பதையும், ஊழியர்களின் பரிதாப நிலைமைகளையும் பார்க்கிறீர்களே!
நம்முடைய ஜனம் துரோகம்பண்ணி, தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவருக்கு முதுகு காட்டியதே! அவர்கள் நம்முடைய பரிசுத்த ஸ்தலங்களில் ஜெபதூபம் காட்டாமலும், ஆவியிலும் உண்மையிலும் தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்யாமலும், வேதவசன வெளிச்ச விளக்குகளை அணைத்துப்போட்டு, ஆலய மண்டபங்களின் கதவுகளைக் கர்த்தருக்குப் பூட்டிப்போட்டார்களே!
சபையின் நிலையைப் "பார்க்கிறீர்களே!"
■ விசுவாச வாலிபரின் நிலையைப் "பார்க்கிறீர்களே!"
■ ஊழியர்களின் வாழ்க்கையைப் "பார்க்கிறீர்களே!"
■ சபையின் ஆட்டபாட்டக் கொண்டாட்டங்களைப் "பார்க்கிறீர்களே!"
■ சபை தேவனைவிட்டும், பூர்வ பாதைகளைவிட்டும் தூரம் போய் நிற்பதைப் "பார்க்கிறீர்களே!"
■ சபையின் பரிசுத்தவித்து ஜாதிகளோடே கலந்து போனதைப் "பார்க்கிறீர்களே!"
■ செழுமை கொழுமை வளமை இளமை என்னும் செழிப்பு உபதேசங்களைப் "பார்க்கிறீர்களே!"
■ பெருகி ஓடும் கள்ள உபதேச வெள்ளங்களைப் "பார்க்கிறீர்களே!"
■ விசுவாசிகளை வழிவிலகச் செய்யும் கள்ளத் தீர்க்கதரிசிகளைப் "பார்க்கிறீர்களே!"
■ சபைகளுக்குள்ளும் போதகர்களுக்குள்ளும் நடக்கும் சண்டைகளைப் "பார்க்கிறீர்களே!"
■ சபையைக் கலக்கும் அரசியலையும், அரசியலுடன் கலக்கும் சபைகளையும் " பார்க்கிறீர்களே!"
■ ஆடுகள் சூறையாடப்படுவதையும், எளியவர்கள் கைவிடப்படுவதையும் "பார்க்கிறீர்களே!"
■ ஜெபமின்றி வறண்டு கிடக்கும் ஆவிக்குரிய வறட்சியைப் "பார்க்கிறீர்களே!"
■ பிரசங்க பீடங்களில் ஆவியின் அக்கினி அணைந்துகிடப்பதைப் "பார்க்கிறீர்களே!"
■ ஆத்தும பாரமும் கண்ணீரும் காணாமல் போனதைப் "பார்க்கிறீர்களே!"
■ சுவிசேஷ ஊழியம் சுத்தமாய் நின்று போனதைப் "பார்க்கிறீர்களே!"
■ பண ஆசையிலும், ஜாதிப் பெருமையிலும், வெளிநாட்டு மோகத்திலும், உலக மயக்கங்களிலும், மாம்ச இச்சைகளிலும் விழுந்து கிடக்கும் விசுவாசிகளையும் ஊழியர்களையும் "பார்க்கிறீர்களே!"
■ தாங்களும் வஞ்சிக்கப்பட்டு, மற்றவர்களையும் வஞ்சிக்கும் கூட்டங்கள் மலிந்துகிடப்பதைப் "பார்க்கிறீர்களே!"
தேசத்தின் நிலையைப் "பார்க்கிறீர்களே!"
■ சகலத்திலும் காணப்படும் சர்வாதிகாரத்தைப் பார்க்கிறீர்களே!,
■ தன் கட்சியல்லாத மாநிலங்களும் மக்களும் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்படுவதையும் பார்க்கிறீர்களே!
■ தன் மதமல்லாத சிறுபான்மையினர் நசுக்கப்படுவதைப் பார்க்கிறீர்களே!
■ Stan Swamy என்ற வயதான கத்தோலிக்க குருவானவரை வதைத்துச் சாகடித்ததைப் பார்த்தீர்களே!
■ மதர் தெரஸா அவர்களின் ஙண்ள்ள்ண்ர்ய்ஹழ்ண்ங்ள் ர்ச் இட்ஹழ்ண்ற்ஹ் ஸ்தாபனத்தின் கழுத்தை நெரித்ததைப் பார்த்தீர்களே!
■ போதகர்களும், ஊழியர்களும், மிஷினரிகளும் மதமாற்றம் என்ற பெயரில் அடித்துத் துவைக்கப்படுவதைப் பார்க்கிறீர்களே!
■ நாடு முழுவதிலும் அதே சட்டம் எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றப்படலாம் என்ற கத்தி கிறிஸ்தவர்களின் தலைமேல் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்களே!
■ 2020 கொரோனா முதல் அலையின்போது நகரங்களில் வேலை செய்ய வந்த வேற்று மாநிலத் தொழிலாளிகள் வேலையும் உணவுமின்றி தங்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல அரசாங்கம் அவர்களுக்கு இரயில், பஸ் வசதி செய்து கொடுக்காத ஒரே காரணத்தால், தங்கள் குழந்தைகளை இடுப்பிலும் தலையிலும் சுமந்து ஆயிரக்கணக்கான மைல்கள் பாதங்கள் வெடிக்க நடந்தே சென்றதையும், வழியில் இறந்த எத்தனையோ பேரையும் பார்த்தீர்களே!
■ பஞ்சாப் மற்றும் வடஇந்திய விவசாயிகள் மட்டுமன்றி, தமிழக விவசாயிகளும் டெல்லி வரை வந்து எலிக்கறியும் மண்சோறும் தின்று அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய அவலத்தைப் பார்த்தீர்களே!
■ நேற்று பாபர் மசூதி.. இன்று க்யான்வியாபி..நாளை என்னவென்று பொறுத்திருந்து பார்ப்பீர்களோ?
■ ஹோட்டலுக்குப் போய் 2 இட்லி சாப்பிட்டு, ஒரு காபி குடித்தாலும் அதற்கும் GST போட்டுக் கொல்லுவதைப் பார்க்கிறீர்களே!
■ பெட்ரோல் விலையை விடுங்கள். அன்றாட ஆகாரம் சமைக்கும் சமையல் வாயு சிலிண்டர் ஒன்றின் விலையைப் பார்க்கிறீர்களே!
■ பள்ளிகளில் பிள்ளைகளை ஆசிரியர்கள் கண்டித்து அடிக்கும் காலம் போய், கற்பிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கத் துணியும் நாட்களைப் பார்க்கிறீர்களே!
■ எத்தனை ஆணவக்கொலைகள்! எத்தனை சிசுக்கொலைகள்! எத்தனை சிறுமியர் பலாத்காரக் கொலைகள்! - நாடெங்கிலும் பார்க்கிறீர்களே!
■ விக்கிரக ஆராதனையிலிருந்தும், அறியாமை இருளிலிருந்தும், பாவக்கட்டுகளிலிருந்தும், பாரம்பரியக் கட்டுகளிலிருந்தும் விடியலின்றித் தவிக்கும் தேசத்தின் ஜனத்தை நாலாபக்கமும் தவித்து நிற்கப் பார்க்கிறீர்களே!"
பார்க்கிறீர்களே! பார்க்கிறீர்களே! பார்க்கிறீர்களே!
தேசத்தையும் நகரத்தையும் அவைகள் இருக்கிறவண்ணமாகவும், தான் பார்த்தவண்ணமாகவுமே, "பார்க்கிறீர்களே!" என்று சொல்லித் தங்களோடு நின்றவர்களையும் பார்க்கவைத்ததே எசேக்கியாவின் 10 அம்சத்திட்டத்தின் மூன்றாவது படி.
அதையே இன்று தேவனின் பாரமாக மீதியான ஜனத்துக்குள் வைப்போம். "கர்த்தரின் பாரம்" என்ற, வேதத்தில் ஆங்காங்கே காணும் அந்த வார்த்தையையே தேவன் நமது உள்ளங்களில் பாரமாய் வைப்பாராக!
Author : Pr. Romilton