ஒரு மிஷனரி தம்பதிகள் வட இந்தியாவில் பத்தாண்டிற்கும் மேலாக உழைத்தனர். உடல்நலக்குறைவு காரணமாக, தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பினர். முன்னதாக, அவர்கள் அரசாங்க பணியில் இருந்தனர். நல்ல பணியில் இருக்கும் அவர்களது நண்பர்கள், சகாக்கள் மற்றும் வகுப்புத் தோழர்கள் பதவி உயர்வு பெற்றனர், வீடுகள், கார்கள், சிறந்த கல்வி நிறுவனங்களில் குழந்தைகளின் படிப்பு என நல்ல உயர்குடி வாழ்க்கை முறையை அனுபவித்தனர். மிஷனரியாக இருந்து வந்த இந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் முட்டாள்களாகவும், பொருத்தமற்றவர்களாகவும், பல ஆண்டுகளை இழந்தவர்களாகவும் பார்க்கப்பட்டனர். வாழ்நாள் முழுவதும், அவர்கள் ஏழ்மை வாழ்க்கை வாழத் தீர்க்கப்படுவார்கள். தம்பதிகளும், அவரின் குழந்தைகளும் குழப்பமடைந்தனர், கலக்கமடைந்தனர். ரிச்சர்ட் ஃபாஸ்டர் தன் அனுபவத்திலிருந்து இவ்வாறாக கூறினார்; ஒப்பீட்டு வறுமை நோய்க்குறி. அவர்கள் ஏதேனும் தவறு செய்தார்களா? மிஷனரியாக சென்றது மோசமான முடிவா என்ன? அவர்கள் சபையால் கைவிடப்பட்டார்களா?
கிறிஸ்துவுக்காக முட்டாள்கள்:
கொரிந்து நகரத்திலுள்ள விசுவாசிகளும் சுற்றியிருந்தவர்களும் பவுலை ஒரு முட்டாள் என்று நினைத்தார்கள். "நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்" (1 கொரிந்தியர் 4:10) என்கிறார் பவுல். கூடாரம் கட்டுவது ஒரு செழிப்பான தொழிலாக இருந்தது, ஆனால் கிறிஸ்துவைப் பிரசங்கித்து பசி, தாகம் மற்றும் உபத்திரவத்திற்கு ஏன் பவுல் ஆளாக வேண்டும் அல்லது முட்டாளாக்கப்பட வேண்டும்? லூக்கா ஒரு மருத்துவராக இருந்தும் பவுலுடன் உடன் ஊழியராக இணைந்து பணி செய்தார்; லூக்கா ரோமில் உள்ள ஒரு மதிப்புமிக்க மருத்துவராகவே இருந்திருக்கலாமே, அதற்கு பதிலாக, அவர் பவுலுடன் சுற்றித் திரிகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத மக்கள் பவுலையும் மற்றவர்களையும் கேலி செய்வது மட்டுமல்ல; துரதிர்ஷ்டவசமாக, விசுவாசிகள் கூட கிண்டல் செய்கின்றனர். இன்றும் அப்படித்தான். செழிப்பையும் ஆசீர்வாதத்தையும் கண்ட கிறிஸ்தவர்கள், அருட்பணியை நேரத்தை வீணடிப்பதாகவும் அல்லது சில முட்டாள்களின் வேலையாகவும் கருதுகின்றனர்.
மகிமையின் ஆவி:
ஒப்பீட்டு வறுமை நோய்க்குறியை அனுபவித்தவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் ஊழியம் செய்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் அவமதிக்கப்படுவார்கள், கேலி செய்யப்படுவார்கள், அவமானப்படுத்தப்படுவார்கள் என்று பேதுரு எழுதினார். இருப்பினும், பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவில் அவர்களுடைய மகிமையையும் நித்திய வெகுமதிகளையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறார். ஆம், "நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடையய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்" (1 பேதுரு 4:14).
தேவனிடத்தில் ஐசுவரியவான்:
சுவிசேஷத்திற்காகவும் அவருடைய ராஜ்ஜியத்திற்காகவும் தங்கள் வாழ்க்கையைச் செலுத்திய கோடிக்கணக்கான தேவ ஊழியர்களும் பரிசுத்தவான்களும் ஏழைகளாகவும், பாராட்டப்படாதவர்களாகவும், புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் தேவனிடத்தில் ஐசுவரியவான்கள் என்பதை நினைவு கூர்வோம் (லூக்கா 12:21). அவர்களுடைய செல்வம் நித்தியமானது, அழியாதது, குறையாதது.
நான் என்னை மற்றவர்களோடு ஒப்பிடுகிறேனா அல்லது மகிமையின் ஆவியை அனுபவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்