நெகேமியா சூசான் அரண்மனையில் ஒரு முக்கிய பதவி வகித்தான். அவனுடைய உறவினரான ஆனானி அவனைப் பார்க்க வந்தபோது, நெகேமியா சூசானில் தனக்கு இருக்கும் மதிப்பு மரியாதை அந்தஸ்து பற்றி பேசவில்லை. மாறாக, சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தான்; மேலும் 1300 கிமீ தொலைவில் உள்ள எருசலேம் நகரத்தைப் பற்றியும் , எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது குறித்தும் கவலைப்பட்டான். பின்பு மனமுடைந்து, அதற்காக நான்கு மாதங்கள் அழுது, மன்றாடி, உபவாசித்து ஜெபித்தான், ராஜாவின் பார்வையில் அவனுக்கு தயவு கிடைக்கும்படி கர்த்தர் செய்தார், அவன் சென்று நகரத்தின் சுவரை மீண்டும் கட்டுவதற்கு நியமிக்கப்பட்டான். நெகேமியா எருசலேமில் தலைவர்களைச் சந்தித்து இந்தப் பெரிய பணிக்காக அவர்களை ஒன்று திரட்டினான் (நெகேமியா 2:17-18). 52 நாட்களில் சுவர்களைக் கட்டி முடிக்கவும் வாயில்களை நிறுவவும் பங்குதாரர்களாக ஆவதற்கு அவன் அவர்களைத் தூண்டினான்.
1. அடையாளம்:
நாம் துன்பத்தில் இருக்கிறோம் என்று கூறி நெகேமியா மக்களோடு மக்களாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். அவன் அவர்களுக்குப் பிரசங்கிக்கவில்லை, ஆனால் அவர்களுடன் களத்தில் நின்றான்.
2. விமர்சனம் இல்லை:
கடந்த நூறு ஆண்டுகளாக எருசலேமின் தலைவர்கள் எதுவும் செய்யவில்லை என்று அவன் விமர்சிக்கவில்லை. பின்னாய்வு செய்வதற்கு பதிலாக, அவர்களுக்கு ஒரு புதிய தரிசனத்தைக் கொடுத்தான்.
3. ஐக்கியத்திற்கான அழைப்பு:
நெகேமியா அனைவரும் இணைந்து பணி செய்ய அழைப்பு விடுத்தான், தன் கைகளை விரித்து வரவேற்றான். தான் ஒருவன் மாத்திரமே செய்ய முடியாது என்ற இயலாமையை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தன்னடக்கமாக இருந்தான்.
4. விளைவு பற்றிய தரிசனம்:
பணியின் மகத்தான தன்மை, அதில் உள்ள சிரமம் அல்லது ஆபத்து காரணிகளைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக நெகேமியா செய்ய வேண்டிய அல்லது முடிக்க வேண்டிய பணி எதுவோ அதை நோக்கிச் சுட்டிக்காட்டினான். இதன் முடிவாக நாம் அவமானத்திலோ அல்லது நிந்தையிலோ வாழத் தேவையில்லை என்று எடுத்துரைத்தான்.
5. தேவனின் அழைப்பு:
தேவனின் கரம் தன்மீது இருந்ததையும், நான்கு மாதங்கள் ஜெபித்தபோது அழைப்பை உணர்ந்ததையும், பானபாத்திரக்காரனாக இருந்த பணியிலிருந்து விடுப்பு எடுத்ததையும் நெகேமியா விளக்கினான்.
6. தேவனின் நேரமும் கட்டளையும்:
தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் பாதுகாப்பையும் முன்னேற்பாடுகளை வழங்குவதற்கும் தேவன் எவ்வாறு ராஜாவின் இதயத்தைத் தூண்டினார் என்பதை அவன் விளக்கினான்.
7. ஈடுபடுவதற்கான அழைப்பு:
நெகேமியா எந்த வெகுமதிகளையும் பிரதிபலனையும் வாக்களிக்கவில்லை, ஆனால் அது தேவனின் பணி என்பதால் அவர்களை ஈடுபாடுடன் பணி செய்ய, அனைவரின் பங்கும் இருக்க ஊக்குவித்தான்.
நெகேமியா நம்பிக்கை அளித்ததின் பேரில் ஜனங்கள் மனைவி பிள்ளைகள் என குடும்பம் குடும்பமாக அலங்கத்தைக் கட்ட வந்தனர்.
நான் நெகேமியாவைப் போல தேவனின் பணியில் மற்றவர்களை ஈடுபடுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்