நான் பயணம் செய்யும்போது, பொதுவாக பல இடங்களில், என் பொருட்களை எடுத்துச் செல்ல மக்கள் எனக்கு உதவுகிறார்கள். நமது கலாச்சாரத்தில் அதிகாரமுள்ள அரசியல் தலைவர்கள் அல்லது ஆசிரியர்கள் அல்லது குரு அல்லது முதியவர்கள் என மதிக்கப்படும் மக்களுக்கு சேவை செய்வது வழக்கம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மக்களுக்கு சேவை செய்வதில் ஒரு வித்தியாசமான மாதிரியைக் காட்டினார். "போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்" (யோவான் 13:4,5). மதத் தலைவர்கள் சீஷர்களையும் பக்தர்களையும் தங்கள் கால்களைக் கழுவ வேண்டும் என்று கூறியபோது, ஆண்டவர் இயேசு சீஷர்களின் கால்களைக் கழுவ கீழே குனிந்தார். இது ஒரு கூலித் தொழிலாளி அல்லது ஊதியம் பெறும் வேலைக்காரன் அல்லது ஒரு அடிமையின் பணி, மேலும் கர்த்தராகிய இயேசு இவர்களில் எவரும் அல்ல, அவர்களின் போதகர் அல்லது குருவாயிற்றே.
ரோமானியப் பேரரசில், ஒரு மைல் தூரத்திற்கு நாற்பது முதல் ஐம்பது கிலோகிராம் எடையுள்ள ஆயுதங்கள், தனிப்பட்ட உடமைகள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவொரு நபருக்கும் கட்டளையிட ஒரு சிப்பாய்க்கு அதிகாரம் இருந்தது. சிப்பாய் இரண்டாவது மைலுக்கு நாட்டின் குடிமகனை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது சீஷர்களுக்கு "ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ" என்பதாக இரண்டாவது மைல் தூரம் தானாக முன் வந்து சேவைச் செய்ய கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 5: 38-42). அதாவது, ஒரு நபர் ஒரு சிப்பாயுடன் இரண்டு மைல்கள் நடந்து முடிந்து, திரும்பி வர இரண்டு மைல் தூரம் நடக்க வேண்டும். ஆக நான்கு மைல் தூரம் நடக்க வேண்டும்.
1) அனைத்து வேலைகளும்:
சக சீஷர்கள் மற்றும் அந்நியர்களுக்குச் சேவை செய்வது என்பது கஷ்டமான, பயனற்ற, நேரத்தை வீணாக்கும், அழுக்கான, கடினமானது மற்றும் இரண்டாவது மைல் நடப்பது என்பது மிகுந்த சோர்வையும் தரும். ஆனால் கர்த்தராகிய இயேசு தம்மைக் காட்டிக் கொடுத்தவர் உட்பட தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவி சேவை செய்வது எப்படி என்பதை நிரூபித்தார்.
2) அணுகுமுறை:
விரும்பத்தகாத பணியை மகிழ்ச்சியுடனும், விருப்பத்துடனும், முழு மனதுடனும் செய்ய வேண்டும். இது மற்றொரு கடினமான எதிர்பார்ப்பு.
3) கட்டாய மைல்:
முதல் மைல் பேரரசின் சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கடமையாக செய்யப்படுகிறது.
4) உந்துதல் மைல்:
இரண்டாவது மைல் தேவன் மீதான அன்பினால் தூண்டப்படுகிறது; எனவே அது தியாகத்துடனும் அன்புடனும் சேவையாக செய்யப்படுகிறது.
5) தீமையை விட நன்மை:
தீமையை நன்மையால் வெல்லும் பயிற்சி இது. அவருடைய கிருபை மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியை இல்லாமல் தேவ எதிர்பார்ப்பின் உயர் தரநிலை சாத்தியமில்லை.
நான் இரண்டாவது மைல் தொலைவை முன்வந்து (நேசத்தோடு) நடக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran