நரகத்தை நம்பாத பலர் உள்ளனர். தேவன் அன்புள்ளவர், ஆதலால் மக்கள் துன்பப்படுவதை அவர் அனுமதிக்க மாட்டார் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். அதில் முட்டாள்தனம் என்னவென்றால், அவர்கள் தேவனின் பரிசுத்தத்தை புரிந்து கொள்ளவில்லை. பரிசுத்தமான தேவன் பாவத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார். அன்பான தேவன் இரட்சிப்புக்கான வழிமுறைகளை செய்துள்ளார்; அதே சமயம் பரிசுத்தமான தேவன் சாத்தானுடன் சேர்ந்து பாவிகளை அக்கினிக் கடல் என்று அழைக்கப்படும் நித்திய நரகத்திற்கு வெளியேற்றுவார். வேதாகமம் இதை மூன்று வார்த்தைகளில் விவரிக்கிறது. 'பாதாளம்' என்பது ‘இறந்தவர்களின் இடம்’ என்று பொருள்படும் எபிரேய வார்த்தை. பாதாளக் குழி (வெளிப்படுத்துதல் 9:1) மற்றும் அந்தகாரம் என்பது பேய்களின் சிறை (லூக்கா 8:31; 2 பேதுரு 2:4; யூதா 6). ‘கெஹென்னா’ என்பது கிரேக்கத்திலும் எபிரேய மொழியிலும் பயன்படுத்தப்படும் மூன்றாவது வார்த்தையான இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கிறது, அது எருசலேமுக்கு வெளியே மோளேகுக் வழிபாடு மற்றும் மனித பலியின் கொடூரமான நடைமுறைகள் செய்யப்பட்டன (2 நாளாகமம் 28:1-3; எரேமியா 32:35) "பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்" (மத்தேயு 25:41).
1) நித்திய பிரிவினை:
நல்ல உயர்ந்த வாழ்க்கை என்று ஒன்று இருந்தால், அது தேவ சமூகத்தின் நித்திய ஜீவன். தேவ பக்தியற்றவர்களுக்கு ஆழமான மரணமாக இரண்டாம் மரணம் ஒதுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தவான்களுக்கு இனி மரணம் இல்லை; இரண்டாவது மரணத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இனி வாழ்க்கை இல்லை.
2) நித்திய வேதனை:
மரணம் என்பது வாழ்க்கையை இல்பொருளாக்குகின்றது. இதன் பொருள் என்னவென்றால், தரமான வாழ்க்கைக்கு தேவையான அமைதி, மகிழ்ச்சி, அன்பு... எனப் போன்றவை இல்லாமல் ஆகின்றது. ஆம், நரகத்தில் வேதனைப்படுபவர்கள் கூட ஒருவருக்கொருவர் அர்த்தமுள்ள உறவை கொண்டிருக்க மாட்டார்கள், கொண்டிருக்கவும் முடியாது.
3) நித்திய துக்கம்:
அவர்கள் இறக்க விரும்புவார்கள், ஆனால் மரணம் அவர்களை ஆட்கொள்ளாது. பிசாசு மற்றும் நரகத்தில் தள்ளப்பட்டவர்களின் வேதனை கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும், இரக்கமோ ஆறுதலோ இல்லாமல், நித்திய துக்கங்களும், அழுகைகளும், பற்கடிப்பும் இருக்கும். "அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்" (மத்தேயு 13:42).
4) நித்திய கவலை:
தன் வீட்டில் லாசரைப் புறக்கணித்த பணக்காரன், தண்ணீருக்காக ஏங்கினான். லாசரைக் காண முடிந்தது, அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது, ஆனால் ஆபிரகாமின் மடியை அடைய முடியவில்லை. சுவிசேஷத்தை நிராகரிப்பவர்கள் நரகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். "பிற்பாடு அவன் (ஏசா) ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்" (எபிரெயர் 12:17). ஆம், நரகத்திற்கு சென்ற பின் மனந்திருந்த நினைத்தாலும் அதில் ஒரு பிரயோஜனமில்லை.
நான், கிருபையின் வரமான நற்செய்தியைப் பெற்றுள்ளேனா (அறிந்துள்ளேனா)?
Author : Rev. Dr. J. N. Manokaran