"மிகுதியானவர்கள் அல்ல..மீதியானவர்கள்"
"அவன்.. ஆசாரியரையும் லேவியரையும் அழைத்து வந்து ..அவர்களைக் கூடிவரச் செய்து..."(2 நாளா 29:4)
தனியனான ஒரே ஒரு எசேக்கியா, தன்னைப் போன்ற பாரமும் இருதய வேதனையும் கொண்ட, தேசத்தில் மீதியான சிலரைத் தன் வேலையில் தன்னோடு சேர்த்துக்கொண்டு, கூடிவரச் செய்ததே அவனது இரண்டாவது செயல் திட்டம்.
அப்படியே, சபைக்காகவும் தேசத்துக்காகவும் அங்கலாய்க்கும், ஆங்காங்கே சிதறியிருக்கும் மீதியான ஒரு கூட்டத்தைத் தேவன் கூட்டிச்சேர்க்கும் காலமிது!
# பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து மீண்டு வந்த மீதியான கூட்டத்திலுள்ள, இஸ்ரவேலின் தேவனுடைய வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும் உத்தம வேதபாரகனாகிய எஸ்றாவோடு கூடிக்கொண்டது போலவும்...( எஸ்றா 9:4),
# சிறையிருப்பிலிருந்து மீந்து தப்பினவர்கள் எருசலேமின் அலங்கங்களை எழுந்து கட்ட நெகேமியாவோடு கூடிக்கொண்டது போலவும், தேசத்தின் இன்றைய இடிந்து தகர்ந்த நிலையை ஜெபத்தில் எழுந்து கட்ட தம்முடைய மீதியானவர்களை தேவன் கூட்டிச்சேர்க்கும் காலமிது!
மீதியானவர்கள் என்றால் யார்? (Remnants)
1. முதலாவது: இவர்கள் தேவனுடைய இராஜ்யம் பெலத்தோடு வரக் காத்திருப்பவர்கள். தேவன் தமது சபையின் மீதும், அழியும் ஆத்துமாக்கள் மீதும் வைத்திருக்கும் அழியா அன்பினிமித்தம் தமது வல்லமையை வெளிப்படுத்தும் அந்த உண்மையான எழுப்புதலுக்காக இரவும் பகலும் ஏங்கிக்கிடப்பவர்கள்..
2. இரண்டாவது: இவர்கள் தங்கள் அழைப்பை நன்கு அறிந்தவர்கள். அதாவது தேவன் தங்களை முதலாவது தாங்கள் வசிக்கும் ஊருக்காகவும், இடத்துக்காகவும், அதன் பிறகு, தாங்கள் ஐக்கியம் கொண்டிருக்கும் உள்ளூர் சபைக்காகவும் அழைத்திருக்கிறார் என்பதே. தாங்கள் ஐக்கியம் வைத்திருக்கும் சபையில் தங்கள் பொறுப்புகளை அவர்கள் உண்மையாய் நிறைவேற்றி வந்தாலும், அவர்கள் இருதயமோ, அவர்கள் இருக்கும் நகரத்துக்காகவும், அதிலே அன்றாடம் அழியும் ஆத்துமாக்களுக்காகவுமே அடித்துக் கொண்டேயிருக்கும்!
3. மூன்றாவது: அவர்கள் ஜெபத்தையே தங்கள் வாழ்க்கை முறையாகவும் உயிர்மூச்சாகவும் கொண்டவர்கள். தாங்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடியவர் தேவன் மாத்திரமே என்று அவர்கள் திட்டவட்டமாக நம்புவதால் அவர்கள் இடைவிடாமல் ஜெபித்துக்கொண்டே இருப்பவர்களாயிருப்பார்கள்.
4. நான்காவது: அவர்கள் குழுவோடு இணைந்து பணிபுரியும் தாழ்மையானவர்கள். தாங்கள் மட்டுமே தனியாக எதையும் சாதிக்க இயலாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பவர்களாதலால், ஒரு போதும் அவர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாய் இருக்க மாட்டார்கள்.
5. ஐந்தாவது: இவர்களுக்கு தேவ ராஜ்யமும், தேவ சித்தமும், தேவ நோக்கமுமே முதன்மையும் முழுமையுமாக இருப்பதால், இவர்கள் தங்களுக்கென்ற எந்தத் தனிப்பட்ட மறைவான உள்நோக்கத்தையும், சுயலாபத் திட்டங்களையும் கொண்டிருப்பதில்லை.
இப்படிப்பட்ட உண்மையான மீதியானவர்களின் கூட்டமொன்று தேவனுக்காய், தேசத்துக்காய் வைராக்கியம் கொண்டு ஜெபத்தால் கட்டியெழுப்ப எழும்பட்டும்!
Author : Pr. Romilton