பைபிளில் உள்ள வரலாற்றுப் புத்தகங்களில் ஐந்தாவது நூல் 2சாமுவேல்.இந்நூல் 1சாமுவேல் புத்தகத்தின் தொடர்ச்சியாகும். எப்பிரோனிலே ஏழு ஆண்டுகள் யூதாவிற்கும் பின்பு 33 ஆண்டுகள் இஸ்ரவேலையும் சேர்த்தும் அரசாண்ட தாவீதின் 40 ஆண்டுகால ஆட்சியின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் நமக்குப் போதிக்கிறது. 2 சாமுவேல் புத்தகத்தை நாத்தான் தீர்க்கதரிசி எழுதியிருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர். 1 மற்றும் 2 சாமுவேல் ஆகிய இருநூல்களும் எபிரேய மொழியில் "Sefer Sh'muel" என்று மூலப்பிரதியில் சாமுவேலின் இரண்டு நூல்களும் ஒரே புத்தகமாக இருந்தது என்கிறார்கள் வேத வரலாற்று அறிஞர்கள். இந்நூல் தெற்குப்பகுதியான யூதாவின் மேல் துவங்கி வடபகுதியான இஸ்ரவேல் முழுவதையும் வென்று, தாவீது ஆட்சி செய்த வரலாற்றை விரித்துரைக்கிறது. விரிவாக்கிய ஆட்சி அதிகாரம் பாவவினையாலும் வஞ்சகர்கள் மற்றும் விரோதிகளாலும் எவ்வாறு வீழ்ச்சியை நோக்கிய பயணத்தை துவங்குகிறது என்பதுடன் முடிவடைகிறது.
நோக்கம்:
கடவுளுடைய உடன்படிக்கைப்படி எவ்வாறு தாவீது கீழ்படிந்தான் என்றும், அதனால் கடவுள் அவனுக்குக் கொடுத்த வெற்றி மற்றும் ஆசீர்வாதங்களைக் கொடுத்தார் என்றும், அதே வேளையில் அவன் பாவம் செய்தபோது அதற்குரிய இக்கட்டையும் தண்டனையையும் கொடுத்தார் என்றும் குறிப்பிடும்படியாக 2 சாமுவேல் புத்தகம் எழுதப்பட்டது.
வளர்ச்சி: (1-10)
தாவீது அரசனாக அபிஷேகம் பெற்றிருந்தாலும், அரசனாக அரியனையில் அமர்வதற்காக கடவுளின் நேரத்திற்காக காத்திருந்தான். இறுதியில் அவனது 30வது வயதில் அரசனாய் ஏற்படுத்தப்பட்டான். எருசலேமை அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைமையிடமாக உருவாக்கினான். கடவுளின் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவந்தான். நீதியோடும் உண்மையோடும் அரசாண்டான். தனது வெற்றிக்கு காரணம் கடவுளே என்று அவரைப் புகழ்ந்தான். கடவுளுக்கென ஒரு ஆலயத்தைக் கட்ட ஆசைப்பட்டான். கடவுளின் இருதயத்திற்கு ஏற்றவன் என்பதை தக்கவைத்துக்கொண்டான்.
சவுலின் வீழ்ச்சியில் தாவீதின் வளர்ச்சி (1)
யூதாவின் அரசன் (2)
சவுல் பிள்ளைகளின் வஞ்சனையால் வளர்ச்சி (3-4)
யூதா மற்றும் இஸ்ரவேல் இரண்டிற்கும் அரசன் (5)
பெலிஸ்தரை வீழ்த்தி; வளர்ச்சி (5)
வெற்றிக் கொண்டாட்டம் (6-8)
சவுலின் குடும்பத்திற்கு விருந்தோம்பல் (9)
அம்மோனியர் ரூ சீரியர்களை விரட்டியடித்து வளர்ச்சி (10)
வீழ்ச்சி: (11-23)
ஆவிக்குரிய வாழ்வில் சோம்பலுற்றவனாய் பெரும் பாலியல் பாவத்திலும் கொலைப் பாதகத்திலும் விழுந்தான். பாவத்தை மறைக்க முற்பட்ட போது கடவுள் நாத்தான் மூலம் அதனை உணர்த்தியதும் மனமாற்றம் அடைந்தான். ஆனாலும் விதைத்தனை அறுக்கவேண்டும் என்னும் விதிக்கு ஏற்ப, அவனது பாவங்கள் அவனது பிள்ளைகளை தொற்றிக்கொண்டது. அதனால் பிள்ளைகளிடையே பாலியல் உறவால் விரோதம், பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே பாலியல் பாவத்தால் பகைமை, இறுதியில், தன் சொந்த பலத்தைக்காட்டும் பெருமை என்னும் பாவத்தால் அவனுடைய வாழ்வும், இஸ்ரவேல் ஆட்சியும் வீழச்சியடைவதற்கு காரணமானது.
வீழ்ச்சி (11)
கடமையிலிருந்து விலகல்
விபச்சாரம்
குற்றமற்றவனைக் கொலை செய்தல்
வீழ்ச்சியின் விளைவு: (12)
பாவஅறிக்கை,
பாவத்தின் தண்டனை,
பாவமன்னிப்பு
வீழ்ச்சியின் வளர்ச்சி (13)
கற்பழிப்பு – அம்மோன் சகோதரி தாமாரை
பழிக்குப்பழி – அம்மோன் அப்சலோம் - சகோதரர்களிடையே வஞ்சகர்களின் கூட்டுறவு (14)
தகப்பன் தாவீது மற்றும் மகன் அப்சலோமிடையே வஞ்சக மகனால் வீழ்ச்சி (15-16)
மகனுக்கு தப்பித்து ஓடும் தாவீது வஞ்சனைக்கு வஞ்சனை (17-18)
அப்சலோம் மரணம் வெற்றியிலும் வேதனை (19)
வீழ்ந்தவர்களை வலிமைப்படுத்தும் தாவீது (சிமயி, மெபிபொசேத், பர்சில்லாய்)
விரோதியான சேபா (20)
வறட்சியும் வம்ச அழிவும் (21)
வீழ்த்தப்பட்ட பெலிஸ்தியர்களால் வீழ்ச்சி (தாவீதின் வம்சத்தினரின் மரணம்)
வீழ்ச்சியிலும் வெற்றி (22-24)
கடவுளின் வெற்றியைக் கொண்டாடும் தாவீது
விடைபெறும் தாவீது – வீரர்களின் பட்டியல் (23)
வாதையும் விடுதலையும் (24)
மக்கள் தொகையைக் கணக்கிட்ட பாவத்தால் கொள்ளைநோயும் விடுதலையும் வளர்ச்சிக்கு வித்திட்டது:
அபிஷேகிக்கப்பட்டவருக்கு அநீதி செய்யக்கூடாது: சவுல் தாவீதை அழிப்பதற்காக தொடர்ந்து வந்தாலும், தாவீதுக்கு சவுலைக் கொலை செய்ய பலமுறை வாய்ப்புகள் கிடைத்தபோதும், அவனைக் கொல்லவில்லை. அவனுடைய மரணத்தை மகிழ்ச்சியின் செய்தியாக ஏற்காமல் சவுலை கருணைக்கொலை செய்தவனை கருணையின்றி கொலை செய்தான் தாவீது. (2 சாமுவேல் 1,4).
தேவசித்தத்தை தேடுதல்: எவ்வளவு உயரத்திற்கு தாவீது சென்றாலும், எங்கு போகவேண்டும், எதை செய்யவேண்டும் என்று கடவுளிடம் கேட்கவும் அவருடைய வழிகாட்டுதலை நாடுவதற்கும் எப்போதும் முதலிடம் கொடுத்தான். (2 சாமுவேல் 2,5,21).
தவறுகளிலிருந்து திருந்துதல்: பத்சேபாலுடனான தவறான பாலியல் பாவத்தை நாத்தான் சுட்டிக்காண்பித்தபோது, மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்டான். அத்துடன் மக்கள் தொகையைக் கணக்கிட்டு தன்பலத்தைக் குறித்த பெருமையை கடவுள் சுட்டிக்காண்பித்தபோது “நான் புத்தியீனமாய் பாவம் செய்தேன், என் அக்கிரமத்தை மன்னியும்” என்று கெஞ்சி மன்னிப்புக் கேட்டான். (2சாமுவேல் 11,24).
கடவுளுக்கு கோவில்: தனக்கு ஒரு வீடு கட்டவேண்டும் என்னும் ஆசையைவிட கடவுளுக்குக் கோவில் கட்டவேண்டும் என்ற ஆசைக்கு மாறாக கடவுள் அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொடுப்பதாக வாக்குக்கொடுக்கிறார். (2சாமுவேல் 7).
உடன்படிக்கைக்கு உத்தமன்: யோனாத்தானுடன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு உத்தமமாய் அவனுடைய குடும்பத்தாருக்கு தயவு பாராட்டினான். அவர்களுக்கு வேண்டியவைகளைக்கொடுத்து நிறைவாய் வாழ வழிவகுத்துக்கொடுத்தான். தாவீது சொன்னவாக்கை எப்போதும் நிறைவேற்றினான். நட்புக்கு நேர்மையானவனாயிருந்தான். (2சாமுவேல் 9).
கடவுளுடனான கூட்டுறவு: கடவுளைத் துதிப்பதும் அவருக்கு முன்பாக தாழ்மைப்படுவதிலும் தாவீதைப்போன்று கடவுளுக்கு புதுப்புது நாமங்களைச் சூட்டி அவரைப் புகழந்தது இதுவரை யாரும் இல்லை. கடவுளின் ஒவ்வொரு செயல்களையும், அவரைப்பற்றி ஒவ்வொரு சத்தியத்தையும் அவருடைய நாமமாக உருவாக்கியவன் தாவீது. அத்துடன் அவருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்துவதிலும் இன்றும் ஒரு நல்ல முன்மாதிரியாக திகழ்கிறான். தாவீது ஒரு ஆராதனை வீரன். கடவுளோடு கொண்டுள்ள உறவில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அவனிடம் காணப்பட்டது. (2சாமுவேல் 2,6,24).
மன்னிக்கும் மாண்பு: தாவீது தன்னை வெகுவாக தூஷித்த சிமேயியை பழிவாங்காமல் விட்டான். (2சாமுவேல் 16).
தாவீது அரசன் அவனது ஆட்சிக்காலத்தில் விக்கிரக வழிபாட்டை இஸ்ரவேலில் கொண்டுவரவுமில்லை, அனுமதிக்கவுமில்லை.
வீழ்ச்சிக்கு வித்திட்டது:
பாலியல் பாவம்: பல்வேறு போராட்டங்களில் தாவீது அவனுடைய இளைப்பாறுதலை, “என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்” என்ற கடவுளிடம் தேடாமல், பெண்களிடம் தேடினான். அதுவரை இஸ்ரவேல் மக்கள் மத்தியில் இல்லாத பாலியல் பாவம் அவனைப்பற்றிக்கொண்டது. அநேக மனைவிகள், வைப்பாட்டிகள் வைத்திருந்தான். அவனுடைய பாலியல் பாவம் அவனுடைய பிள்ளைகளையும் பற்றிக்கொண்டது. அவர்களுடைய பிள்ளைகளால் பல்வேறு சோதனைகள், பாவங்கள் நுழைந்து இறுதியில் 40 வருடங்களாக கட்டி எழுப்பிய இஸ்ரவேல் இராஜ்ஜியம் இல்லாமல்போகும் வீழ்ச்சி நிலைக்கு இவனுடைய பாலியல் பாவம் வழிவகுத்தது. (2சாமுவேல் 3,5,11,13).
பிள்ளைகளின் பிரிவினை: அம்மோன் சொந்த சகோதரி தாமாரைக் கற்பழித்தான். அதனால் அம்மோனுக்கும் அப்சலோமுக்கும் இடையே பகைமை. இதனால் அவர்களுக்குள் பழிவாங்குதல்: அப்சலோம் அம்மோனைக் கொலை செய்கிறான், அப்சலோம் தன் தகப்பன் தாவீதின் மறுமனையாட்டிகளிடம் பாலுறவை ஏற்பத்திக்கொண்டான். இதனால் தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. பிள்ளைகளிடையே யாரை நேசிப்பது? யாரைப் பகைப்பது? என்கிற தவிப்பில், யாருடைய பாவம் பெரியது? யாருடைய பாவம் மன்னிக்கத்தக்கது என்ற பாசக் குழப்பத்தில் தாவீது இருந்தான். பிள்ளைகள் பெற்றோரைப் பார்த்து வளர்கிறார்கள். (2சாமுவேல் 13-18)..
கடவுளைக் கோப்படுத்தினான்: தாவீது தனது படைகளையும், படைவீரர்களையும் கணக்கிட்டான். அத்துடன் மக்கள் தொகையையும் கணக்கிட்டான். கடவுளின் ஆற்றலின் மேல் நம்பிக்கையின்றி, தனது பெலத்தை நம்ப ஆரம்பித்தது கடவுளை கோபமடையச்செய்தது. அதனால் கடவுள் கொள்ளைநோய்யை அனுமதித்தார். அதனால் 70,000 பேர் மரித்தார்கள்.
கற்றுக்கொள்ளும் பாடம்
நாம் விதைத்ததை நாம் அறுப்போம். பாவத்தை விதைத்தால் பாவத்தை அறுப்போம். நீதியையும் கீழ்படிதலையும் விதைத்தால் ஆசீர்வாதத்தையும் வெற்றியையும் பெறுவோம். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பிரதிபலன் உண்டு.
முக்கியப் போதனைகள்:
பைபிள் மட்டுமே ஒருவருடைய வாழ்வின் இருபக்கத்தையும் வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. அவ்விதமாகவே தாவீதின் வெற்றியையும் வீழ்ச்சியையும் வெளியரங்கமாய் அதன் காரணங்களோடு விவரிக்கிறது 2 சாமுவேல் புத்தகம். இந்நூலில் தாவீது பாடிய விடுதலையின் பாடல் 18ம் சங்கீதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியே பத்சேபாலுடன் கொண்ட உறவின் பாவத்தை நாத்தான் சுட்டிக்காட்டியபோது தாவீதின் பாவஅறிக்கை பாடல் 51ம் சங்கீதத்தில் உள்ளது. இஸ்ரவேல் என்னும் ஒரு வல்லரசை உருவாக்க பல வெற்றிக்கு அஸ்திபாரம் போட்டு நல்லாட்சி புரிந்தான் தாவீது. அவை இன்று வரை தாவீதைப் போன்ற ஒரு அரசனின் ஆட்சி வேண்டும் என்று ஏங்கும் மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அவனுடைய மகன் சாலொமோன் ஆட்சியை நிலைநிறுத்துவான், அவன் மூலம் எனக்கு ஆலயம் கட்டுவான் என்று கடவுள் தாவீதுக்கு வாக்குக் கொடுத்தார். இசையில் நாட்டமும் திறமையுள்ள தாவீது, ஆவியானவரால் ஏவப்பட்டு அநேகப் பாடல்கள், கவிதைகளை எழுதினான். உலக இரட்சகரான இயேசுவை தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படும் உன்னத ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறான் தாவீது..
Author: Rev. Dr. C. Rajasekaran