சில நெருக்கடியான சூழ்நிலைகளில் நமது ஜெபங்களுக்கு உடனடியாக பதில் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது விரக்தியடைந்ததாலோ அல்லது வேதனை அடைந்ததாலோ அல்லது ஒடுக்கப்பட்டதாலோ நாம் விரைவான தீர்வை விரும்புகிறோம். எவ்வாறாயினும் தேவன் நம்மைப் போல 'அவசரப்படுவதில்லை' என்று தெரிகிறது. தாவீதிற்கும் இதே போன்ற அனுபவங்கள் இருந்தன. அவன் தலையில் உள்ள முடியின் எண்ணிக்கையை விட எதிரிகள் அதிகம் என்று அவன் உணர்ந்தான். ஆனாலும், விரோதமான (பகைமையான) சூழ்நிலைகளிலும் சரியான அணுகுமுறையோடு கூடிய ஜெபம் நமக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்கிறது.
"ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்" (சங்கீதம் 69:13). இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஐந்து அம்சங்கள் உள்ளன.
1) கர்த்தர்:
கர்த்தர் என்ற சொல்லுக்கு இறையாண்மையின் தேவன் என்று பொருள். தன்னுடைய சூழ்நிலை உட்பட அனைத்து படைப்புகளிலும் யெகோவாவின் ஆளுமையை தாவீது ஒப்புக்கொள்கிறான். அற்புதங்களைச் செய்யக்கூடிய சர்வவல்லமையுள்ள தேவன் மீது அவனுக்கு அபார நம்பிக்கை. இறையாண்மையுள்ள தேவன் பூமியை நீதியின்படி அரசாளுகிறார், எனவே அவரிடம் முறையிடுவது பொருத்தமானது.
2) தேவன்:
உடன்படிக்கையின் தேவனானவரை தன்னுடைய நெருக்கத்தின் நேரத்தில் தாவீது அழைக்கிறான். அவர் தனது ஜனங்களுடன் உடன்படிக்கைச் செய்து, அவருடைய மக்கள் தோல்வியடைந்தாலும், அவருடைய கடமையை நிறைவேற்றுகிறார். இந்த விசுவாச உடன்படிக்கையும் உறவும் ஜெபத்திற்கான அடிப்படையாகும்.
3) ஏற்றுக்கொள்ளக்கூடிய நேரம்:
தேவன் தனது சொந்த கால அட்டவணையில் தனக்கான பணியைச் செய்கிறார் என்பதை தாவீது புரிந்துக் கொண்டுள்ளான். அவசரம் ஆண்டவரே என்றாலும் காலதாமதம் ஆகிவிட்டதே என்று அழுத்தம் கொடுத்தாலும் சரி ஆண்டவர் அவசரப்படுவதில்லை. ஆனால் தேவனுடைய பிள்ளை தேவனுக்கான நேரத்திற்காக எதிர்பார்த்து மற்றும் அதை அறிந்தவனாய் நிதானத்தோடு காத்திருப்பான்.
4) அன்பின் மிகுதி:
"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று" (ரோமர் 8:28) தாவீது நன்கு அறிந்திருந்தான். ஒரு நபரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் அன்பான பிதாவினால் அனுமதிக்கப்படுகிறது. அவருடைய அன்பு நம் நன்மைக்காகவும், நற்பலனை அடையவும், வளர்ச்சியடையவும் மற்றும் நலனுக்காகவும் உள்ளது. உண்மைதான், அவருடைய அன்பு நிபந்தனையற்றது மற்றும் விவரிக்க முடியாதது.
5) இரட்சிப்பின் சத்தியம்:
நம் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் பலவீனத்தை தேவன் அறிவார்; எனவே நம்மை அழிக்கக்கூடியளவு அதிக சுமையை அவர் அனுமதிப்பதேயில்லை. சோதனையின் மத்தியிலும், கர்த்தர் நம்மை காப்பாற்ற ஒரு குறிப்பிடத்தக்க வழியை உருவாக்குகிறார். நாம் தப்பிக் கொள்ளும்படியான போக்கை உண்டாக்குகிறவர் நம் தேவன் (1 கொரிந்தியர் 10:13). நம் ஆண்டவர் இரட்சிக்க வல்லவர், இரட்சிப்பதற்கும் எப்போதும் தயாராக இருக்கிறார் மற்றும் இரட்சிக்க ஆவலாகவும் காணப்படுகிறார்.
துன்பத்தின் போது நான் எப்படி ஜெபிக்க வேண்டும்?
Author : Rev. Dr. J. N. Manokaran