டோரதி சேயர்ஸ், ஒரு இறையியலாளர், மனிதகுலத்தை மீட்பதற்காக கர்த்தராகிய ஆண்டவர் சந்தித்த மூன்று பெரிய அவமானங்களைப் பற்றி எழுதுகிறார். முதல் அவமானம் தேவன் ஒரு பௌதிக உடலின் எல்லைகளை எடுத்துக்கொண்ட மாம்சமாகுதல் ஆகும். இரண்டாவது சிலுவை அவர் பொது மரணதண்டனை மூலம் மரணத்தின் அவமானத்தை அனுபவித்தது. மூன்றாவது அவமானம் சபை.
தொட்டில்:
தேவன் ஆதாமை முழு வயது முதிர்ந்தவராகப் படைத்தது போல், தேவக் குமாரனை இஸ்ரவேலில், குறிப்பாக எருசலேம் சபைக்கு நடுவில் ஒரு வயது வந்தவராக இறக்கிவிட முடியுமா? ஆம், முடியும் தான்; ஆனால் தேவன் தம்முடைய ஞானத்தின்படி, கருவில் இருந்து காலியான கல்லறை வரை, மனிதர்களுடன் அடையாளம் காணும் செயல்முறையையே தெரிவு செய்தார். இறையாண்மையான தேவ குமாரன் மரியாளின் வயிற்றில் அடைக்கப்பட்டு, முழுமையாக மரியாளை சார்ந்தே இருந்தார், அவர் வளர்ந்தார், வறுமையை எதிர்கொண்டார், மேலும் அவர் 30 வயதை அடையும் வரை தச்சராக கடினமாக உழைத்தார்; நட்பற்ற சூழல், இளம் வயது சோதனைகள்.. இதற்கு நடுவில் சிலுவையையும் தாங்கினார்.
சிலுவை:
மோசேயின் சட்டத்தின்படி, சிலுவை மரணம் என்பது வெட்கக்கேடான மற்றும் சபிக்கப்பட்ட மரணம், திறந்த வெளியில் ஒரு மரத்தில் தொங்கவிடப்படுவார்கள், கொலைகாரர்களுக்கு அத்தகைய தண்டனை வழங்கப்பட்டது (உபாகமம் 21:21-23; கலாத்தியர் 3:13). மனிதர்களின் சார்பாக தேவனுடைய கோபத்தைத் தாங்கிக்கொண்டு, பிதாவிற்கு கீழ்ப்படிந்தவராகி அவமானகரமான மரணத்தை தன்னை தாழ்த்தி ஏற்றுக்கொண்டார் என்று பவுல் எழுதுகிறார் (பிலிப்பியர் 2:8). ஒரு மரத்தின் பழத்தின் மூலம் பாவம் உலகில் நுழைந்தது, மேலும் ஒரு மரத்தின் மூலம் (சிலுவை) மீட்பு மனிதகுலத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
சபை:
முதல் இரண்டும் வரலாற்று நிகழ்வுகள். சபை கறைதிரையற்ற நல் மணவாட்டி என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், வரலாறு முழுவதும், சபை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. முதலாவதாக, சபை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதால் ஒற்றுமை இல்லை, பலர் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள். இரண்டாவதாக, கொரிந்து போலவே தேவ ஜனங்களிடையேயும் பாவம் காணப்பட்டது மற்றும் தலைமைத்துவம் தோல்வியுற்றது. பரிசுத்தத்தை நிரூபித்து அதனை மாதிரியாக காண்பிப்பதற்குப் பதிலாக சபை பல குறைபாடுகளுடன் காணப்படுகிறது. மூன்றாவதாக, சபை ஒரு ஒளிரும் மெழுகுவர்த்தியைப் போன்றது. பூமிக்கு உப்பாக இருப்பதற்குப் பதிலாக, உப்புத்தன்மை இழக்கப்படுகிறது. நான்காவதாக, துரதிர்ஷ்டவசமாக பல கிறிஸ்தவரல்லாதவர்கள் கர்த்தரை நேசிக்கத் தேர்வு செய்கிறார்கள், ஆனால் சபையை வெறுக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமானதே.
இன்று கிறிஸ்தவத்தைக் குறித்த நிந்தனையான சொல்லுக்கு நானும் ஒரு காரணமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்