நீலவண்ண வானத்தில் வெண் முகில் கூட்டங்கள் பலவித உருவங்களை அமைத்தும், கலைத்தும் கவிஞனின், கற்பனைக்கு வித்திட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அந்த சின்ன ஓட்டுவீட்டின் பின்வாயிற்படியில் அமர்ந்து, முகிற் கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஜாஸ்மினின் உள்ளத்தில் தான் இதுவரை எண்ணி, எண்ணி மகிழ்ந்த எண்ணங்களெல்லாம் முகில் சமைத்த உருபோல் மாறிவிடுமோ என்ற எண்ணம் எழுந்தது. அவள் நெஞ்சமே வெடித்து விடும்போல் இருந்தது. அவள் நினைவு ஏடுகள் கடந்த காலம் நோக்கிப் புரண்டது.
அவள் பணியாற்றும் அலுவலகத்திற்கு எதிரே இருந்த அந்த அழகிய “கோபால கிருஷ்ண 'இல்லம்” என்ற பெயர் பூண்ட பங்களாவின் முன்புறம் பெயருக்கேற்றபடி கண்ணன் குழல் ஊதும் சிலை பூச்செடிகளின் மத்தியில் அழகாக அமைந்திருந்தது. அலுவலகம் முடிந்து திரும்பும் ஜாஸ்மின் அவளை அறியாமலேயே அந்த சிலையை பார்த்து ரசிப்பது வழக்கம். நாளடைவில் அந்த சிலைக்குப் பின்னால் பங்களாவின் வராண்டாவில் நின்ற படி உயிருள்ள சிலை தன்னைப் பார்ப்பதை உணர்ந்தாள். கட்டான உடலும், சிவந்த மேனியும், சுருண்ட கேசமும், குறுகுறுத்த விழிகளும் கொண்ட அவன் ஜாஸ்மின் உள்ளத்தை ஆட்கொள்ள ஆரம்பித்தான். பார்வைகள் பேச்சுகளாக மாற, பேச்சுகள் புது உறவுக்கு வழி திறந்தன. அந்த உறவு தொடருமா? துண்டிக்கப்படுமா? என்பது இப்பொழுது ஜாஸ்மின் கரத்தில் இருந்தது. இன்று, கண்ணன் (அந்த பங்களாவின் ஏகவாரிசான அவன் பெயர்) முடிவாகக் கூறிய சொற்கள் ஜாஸ்மினின் செவிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
**ஜாஸ்! என்னுடைய அப்பா வைஷ்ணவ பக்தி வைராக்கியமுடையவர். கிறிஸ்தவ பெண்ணை தன் ஒரே மகனுக்கு எடுக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டார். நான் என் அம்மாவிடம் உன்னைப் பற்றிக் கூறி, அவர்களைக் கெஞ்சி கூத்தாடி **அப்பாவிடம் எப்படியாவது சம்மதம் வாங்கிக் கொடுங்கம்மா. இங்க வந்த பின்னால் உங்களை மாதிரியே ஆசாரமா நடந்துக்குவா. நல்ல பெண்ணுமா !** என்றெல்லாம் உன்னைப் பற்றி சொல்லி வைச்சிருக்கேன். இந்நிலையில் நான் கிறிஸ்தவனாகி உன்னைத் திருமணம் செய்வேன் என்று நினைக்காதே. என்னா நான் தான் ஆண் மகன்! என் பின்னால் நீ தான் வரவேண்டும். பணத்தோடே என் மாமா மகள் மாலாவும் பட்டத்தோடே அத்தை மகள் அனிதாவும் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவங்க ரெண்டு பேரையுமே ஒதுக்கிட்டு பணமும், பட்டமும் இல்லாத உன்னை நான் மணம் செய்ய ஆசைப்படுகிறேன். என்றால் நான் உன் மீது வைத்திருக்கிற அளவு கடந்த அன்பு தான் காரணம். ஒன்று நீ உன் வீட்டில் உன் அப்பா அம்மாவிடம் பேசி இந்து முறைப்படி உன்னை எனக்கு திருமணம் செய்து கொடுக்கச் சொல்! அல்லது உன் வீட்டை மறந்து நீ வந்துவிடு நான் என் அப்பாவிடம் எப்படியாவது சம்மதம் வாங்கி விடுகிறேன். கடந்த! ஒரு மாத காலமாக நான் சொல்லி வருகிறேன், நீ மெளனம் சாதிக்கிறாய் நாளை மறுநாள் எனக்கு முடிவு தெரிய வேண்டும்”” என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
ஜாஸ்மினால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. கிறிஸ்தென்ற கன்மலையில் அஸ்திபாரம் போட்டு தன் இல்லத்தைக் கட்டியிருக்கும் பக்தியுள்ள தந்தையோ தாயோ ஒரு இந்து மணமகனைத் தனக்குத் தேர்ந்தெடுக்க சம்மதிக்க மாட்டார்கள் என்பது அவள் அறிந்ததுதான். இரண்டாவது அவள் வீட்டை விட்டு போவதா? தன்மீது பாசத்தைக் கொட்டி வளர்த்த தன் தாய் தந்தையர்க்கு மாபெரும் அவமானத்தை ஏற்படுத்துவதா? மேலும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகும் தன் தந்தைக்கு இந்த முடிவு அதிர்ச்சியைத் தராதா? வேலை தேடி அலையும் தன் தம்பிக்கு வேலை கிடைக்கும் வரையிலாவது அவள் வருமானம் வீட்டிற்குத் தேவையல்லவா? கல்லூரிபடிக்கு தன் தங்கை வேறு இருக்கிறாளே? என்றெல்லாம் சிந்தித்த ஜாஸ்மினால் ஒரு முடிவுக்குவும் வரமுடியவில்லை! வீட்டை விடவும் முடியவில்லை! ஆடம்பர வாழ்க்கைமீது ஆவல் கொண்ட அவளால் கண்ணனை மறக்கவும் முடியவில்லை! அழகுப் பதுமையாக ஆபரணங்கள் ஜொலிக்க அந்த பங்களாவை தான் வளைய வருவதாகவும், ஒயிட் பியட் காரில் கண்ணனோடு அமர்ந்து செல்வது போலவும் அவள் கட்டிய கோட்டைகள் நீர்க் குமிழிகளாக மணற்கோபுரமாக இடிந்து சிதைவதா ஐயோ! அவளாள் தாங்கமுடியவில்லை. வாழ்வே கசந்தது. நேரமோ ஓடிக்கொண்டிருந்தது இயந்திரம் போல் உணவருந்தினாள். குடும்ப ஜெபத்தில் கலந்துகொண்டாள். படுக்கையில் விழுந்தாள். உறக்கம் .... வரவில்லை! தன் தந்தை, தம்பி, தங்கை அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர் என்பதையும் தன் தாய் மட்டும் சமயலறையில் அடுத்த நாளைக்காகப் பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருப்பதை அறிந்தாள். சுவர்க் கடிகாரம் பத்து அடித்தது. சமயலறை விளக்கு அணைக்கப்படுவதை அறிந்த ஜாஸ்மின் தன் கண்களை இருக மூடிக் கொண்டாள். தன் படுக்கையருகே காலடியோசை கேட்டது. தன் தாயின் கரம் தன் தலைமீது இருப்பதை அறிந்தாள்.
அன்பே உருவான இயேசப்பா கடந்த பகல் முழுவதும் எங்களைக் காப்பாற்றி வந்த கிருபைக்காக ஸ்தோத்திரம்பா! எங்களுக்கு நீர் கொடுத்த அருமையான மூத்த மகளை உம் பாதத்திலே கிடத்துகிறேன் சாமி அவளுக்கு நீர் செய்த எல்லா நன்மைகளுக்கும் ஸ்தோதிரமப்பா ஆண்டவரே! விசுவாசமுள்ள ஒரு நல்ல கிறிஸ்தவ மணவாளனை அவளுக்கு நீர் தரவேண்டுமென்று கெஞ்சுகிறேன் சாமி! அதற்காக அவள் தந்தை எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதியும், பணமோ, பட்டமோ, பதவியோ நான் கேட்கவில்லையப்பனே! இவையனைத்தும் மாயை ஆண்டவரே! நித்திய வாழ்க்கைக்கு, அந்தப் பரலோ சாம்ராஜ்யத்திற்குப் பங்குள்ளவர்களாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு உண்மை கிறிஸ்தவரைக் காட்டுமப்பா! இந்த உலகின் கறைகள் என் மகளின் தூய்மையான உள்ளத்தைக் கறைபடுத்திவிடாதபடி காத்துக் கொள்ளும் தேவா'' ஜெபம் தொடர்ந்தது. கண்ணீர் முத்துக்கள் ஜாஸ்மின் முகத்தில் விழுந்தது. ஒருவாறு ஜெபத்தை முடித்த தன் தாய், தன் தம்பியின் படுக்கையருகே செல்வதை உணர்ந்தாள்! இத்தனை நாட்களாக அலுவலகப் பணி, பஸ் பிரயாணம் இந்த அசதியில் தூங்கிவிடுவதால் ஒவ்வொரு பிள்ளைக்காகவும் தன்தாய் ஜெபிப்பதை அன்றுதான் ஜாஸ்மின் கண்டாள். ஜான்வெஸ்லியின் தாய் சூசன்னாள் 19 பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தாலும் வீட்டு வேலைகளை முடித்து தன் ஒவ்வொரு பிள்ளைக்காகவும் ஜெபிப்பார்கள் என்பதை புத்தகத்தில் வாசித்திருக்கிறாள்! இங்கு அதே போன்று தன் தாய் ஜெபிப்பதை பார்த்த அவள் உள்ளம் இழகியது. தன் மீது அளவு கடந்த நம்பிக்கையும், அன்பும் கொண்ட தன் தாயை ஏமாற்றுவதா? எப்படியோ கண் அயர்ந்தாள்.
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடண் பிணைபடாதிருப்பீர்களாக”* என்று கொரிந்து சபையாருக்கு பவுல் எழுதுகிறார். சபை குருவானவரின் கணீரென்ற குரல் எதிலும் கவனம் செலுத்தாது. ஆலயத்தில் அமர்ந்திருந்த ஜாஸ்மினைத் தட்டி எழுப்பியது. நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நுகமும் உண்டு! அது நமது இரட்சகர் இயேசு பெருமான் நமக்குத்தரும் நுகம் அவரே கூறுகிறார்" என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்று, அதை விடுத்து அந்நிய நுகத்திலே நம்மை நாமே பூட்டிக்கொள்வது விபரீதமாக முடியும். ஒரு வண்டியிலே பூட்டப்பட்ட இரு காளைகள் ஒத்த மனமுடையவைகளாய் நேர்பாதையில் நடக்குமானால், காளைகளும் வண்டியிலுள்ள நபர்களும், பொருட்களும் பத்திரப்பட்டிருக்கும். இரு காளைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு ஆளுக்கொரு பக்கத்திற்கு இழுத்துக் கொண்டு போகுமானால் காளைகளுக்கும் சேதம், வண்டியிலுள்ள பொருட்களுக்கும், நபர்களுக்கும் அழிவு, அதனால் தான் பவுல் அப்போஸ்தலர் நீதிக்கும், அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும், ஐக்கியமேது? கிறிஸ்துவுடனே, பேலியாளுக்கும் இசைவேது அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்று தொடர்ந்து கொரிந்து சபையாருக்கு எழுதுகிறார். சாலொமோன் தேவனால் அருளப்பட்ட ஞானம் படைத்தவர். அவருக்குச் சரியானவன் அதற்கு முன் இருந்ததுமில்லை . அவருக்குப் பின் எழும்பினதுமில்லை. இனி வரப்போவதுமில்லை அப்பேர்பட்ட ஞானியே மோவாயியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோனோருக்கும் மேடைகளைக் கட்டினான்! தேவன் இருமுறை அவனுக்கு தரிசனமாகி எச்சரித்தும் கூட அவனால் தேவனை உத்தமமாகப் பின்பற்ற முடியவில்லை! காரணம் அவன் மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், “சீதோனியரும் ஏத்தியருமாகிய அநேக ஸ்திரீகளை விவாகம் பண்ணியிருந்தான். ஆம்! அவனுடைய பொருத்தமற்ற ஐக்கியமே காரணம். அதனால்தான் வேதபாரகனாகிய எஸ்றா அந்நியச் சம்பந்தம் கலந்தவர்களைக் குறித்துக் கலங்கி, தன் சால்வையைக் கிழித்து, தலையிலும் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கி வேதனைப்பட்டான். சபையைச் சுத்திகரிப்பு செய்வதில் முனைந்தான். எனவே, எனக்கருமையான சபை மக்களே! நாம் உறவு கொண்டாடும் போதும், குறிப்பாக திருமண விஷயத்தில் கர்த்தர் பாதத்தில் நம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, அவர் காட்டும் வழி நடப்பது நன்மை பயக்கும்”.
குருவானவர் மூலம் தேவன் அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார் ! ஜாஸ்மினின் உள்ளக்கலம் கலங்கரை விளக்கத்தினைக் கண்டது.
மாலை நேரம்! மலர்ச்சியோடிருந்த ஜாஸ்மினைக் கண்ட கண்ணன்! அகமகிழ்ந்தான்.
என்ன ஜாஸ்! பெர்மிஷன் கிடைத்ததா மிஸ்டர் கண்ணன்! என் உள்ளம் உங்களைவிட அதிகமாக என்னை நேசிக்கும் ஒருவருக்குச் சொந்தமானது. அவரை ஒதுக்கிவிட்டு என்னால் வரமுடியாது”?
யாரவர்? கோபமும் திகைப்புமாகக் கேட்டான் கண்ணன். அவர்தான் எனக்காக கோரச்சிலுவையில் தன்னையே ஈந்த இயேசுகிறிஸ்து! எனக்கு கிறிஸ்துதான் வேண்டும். கிறிஸ்தற்ற கணவர் அல்ல! பட்டமுள்ள அனிதாவோ, பணமுள்ள மாலாவோ யாருடனாவது உங்களை இணைக்கும் திருமண இதழ்அச்சடிக்கச்சொல்லுங்கள், நான் வருகிறேன்! கடின நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக தன்னை விட்டுச் செல்லும் அவளைப்பார்த்தபடி சிலையாகச் சமைந்தான் கண்ணன்!
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே (பாகம் - 2) என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.