அலுவலகத்திலிருந்து திரும்பிய ஆனந்த் மேஜைமீது கிடந்த அன்றைய தபால்களை எடுத்துப் பார்த்தார். நாளிதழுக்குக் கீழ் இருந்த கனமான உறை அவர் கண்ணில்பட்டது. ஆச்சரியத்துடன் அதை எடுத்தார். உள்ளே நூறு ரூபாய் நோட்டுக்கற்றைகள்.
“கீதா” பதற்றத்துடன் தன் மனைவியை அழைத்தார். “இதோ வந்திட்டேங்க!” என்று அவள் மறுமொழி கொடுத்தபடி கையில் காபியுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்த அதே கணம், வெளி வாசலிலிருந்து இரு கான்ஸ்டபிள்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார்.
“சார்! நீங்க என்ன சொல்றீங்க? நான்...” தடுமாறினார் ஆனந்த். விஷமப் புன்னகையுடன் உள்ளே நுழைந்தார் சாமுவேல்.
“ஒண்ணும் தெரியாதவர் மாதிரிப் பேசுறீங்க. இவர் கடைக்கு நீங்க விஸிட் போனீங்க! அவர்கிட்டே லஞ்சம் கேட்டிருக்கிறீர்கள். அதன்படி அரை மணி நேரத்திற்கு முன் லஞ்சம் வாங்கியிருக்கிறீர்கள். வாங்கின பணம்தான் உங்க கையிலேயே இருக்கிறதே!”
“இல்லை, இல்லை எல்லாம் பொய்!” கத்தினார் ஆனந்த். கீதாவின் கையிலிருந்த காபி டம்ளர் கீழே உருண்டது.
“எது பொய்? இந்த பணம் ஏது? எங்களை வந்து கலந்த பின்தான் இந்த ரூபாயை உங்களிடம் கொடுத்தார் சாமுவேல்”.
“நான் வாங்கவில்லை. இப்போதுதான் வந்தேன். இது எப்படி வந்ததுன்னு தெரியாது” ஆனந்தின் கூவலை யாரும் கேட்கத்தயாராகவில்லை.
“நடங்க சார் ஸ்டேஷனுக்கு எல்லாம் அங்க சொல்லுங்க” கொடூரமாகப் பதிலளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்
“அவரை விட்டிருங்க...” கத்திய கீதா அப்படியே மயங்கிச்சாய்ந்தாள்.
தெருவில் இறங்கி நடந்த ஆனந்தை அண்டை அயல் வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வந்து வேடிக்கை பார்த்தனர். என்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகியது. அவமானம் அவரைக் கெளவியது. இரு தினங்களுக்கு முன் இதே சாமுவேல் தன் வீடு தேடி வந்த சம்பவம் நினைவுத் திரையில் ஆடியது.
தூய வெண்ணிற வேஷ்டியும் சட்டையும் அணிந்து நீண்ட துண்டினையும் தோளில் போட்டு கம்பீரமாக வாசலில் புன்னகையுடன் நின்றிருந்த அந்த மனிதனைப் பார்த்தார் ஆனந்த்.
“சார்! உள்ளே வரலாமா?” மிடுக்குடன் கேட்டார் வந்தவர்.
“வாங்க ஐயா! யார் நீங்க? எனக்குத் தெரியலையே” அமைதியாக வரவேற்றார் ஆனந்த். உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தவர்
என் பெயர் சாமுவேல். இந்த ஊரிலே நமக்குத் தெரியாதவங்க யாருமில்லைன்னு வச்சுக்கங்க. நான் சுண்டு விரலை அசைச்சாப் போதும். இந்த ஊரே ஆடும்” பெருமையுடன் சிரித்தார்.
“அப்படியா ஐயா? தாங்கள் வந்த விஷயம்? ” கேட்டார் ஆனந்த்.
“நீங்க இப்பத்தானே இந்த ஊருக்கு சானிடரி இன்ஸ்பெக்டரா மாறுதலாகி வந்திருக்கீங்க. உங்களுக்கு என்னைப்பற்றி தெரியாதுல்ல, அதான் சொன்னேன். சிறிது நிறுத்தியவர் தொடர்ந்தார். “முதலிலேயே உங்களைப் பாரத்திருக்கணும். நீங்க இவ்வளவு சீக்கிரமா கடைக்கு வருவீங்கன்னு நினைக்கவே இல்லே. பையன் சொன்னான். என்னன்னவோ சொன்னீங்களாம்!”
“எந்தக் கடை?”
“கடம்பவனம் போற சாலையிலே இருக்கிற பெரிய கடைதான் நம்ப கடை!”
ஓ..... அந்தக் கடையா? உள்ளதைச் சொன்னேன். என் கடமையைச் செய்தேன்”
“தம்பி! இந்தாங்க! காஞ்சீபுரப் பட்டுப்புடவை. அம்மாவுக்கு கொடுங்க.” அட்டைப் பெட்டியை நீட்டினார் சாமுவேல்.
பாம்பை மிதித்தவர் போல் திடுக்கிட்டார் ஆனந்த். “இது எதுக்கு? லஞ்சமா?” கோபமாகக் கேட்டார்.
“லஞ்சமா? சேச்சே! அப்படியெல்லாம் இல்லை, நம்ம பிஸினஸ்ல நீங்க குறுக்கிடாம இருக்கணும். அப்ப நாங்களும் வாழமுடியும். நீங்களும் நல்லா வாழமுடியும்... தம்பி உலகம் தெரியாத சின்னப்பிள்ளையா இருக்கேங்களே! உங்க சம்பளத்தை மட்டும் நம்பியிருந்தா... ஓட்டாண்டியா என்னைக்கும் இருக்க வேண்டியதுதான் புரிஞ்சு நடந்திடுங்க!”
ஐயா உங்க அறிவுரைக்கு நன்றி; நான் ஓட்டாண்டியா வாழ்ந்தாலும் உத்தமனா வாழத்தான் விரும்புகிறேன். நீங்க போயிட்டு வாங்க”
தீர்க்கமாகப் பதில் தந்தவரை நிமிர்ந்து பார்த்தார் சாமுவேல். தீக்கங்குகளாக இருவிழிகளும் எரிந்தன. “யாருகிட்டப் பேசறோம்ன்னு தெரியாமப் பேசுறீங்க! நான் நினைச்சா இந்த ஊரை விட்டு மாத்திரமல்ல. இந்த உலகைவிட்டே உங்களை அனுப்பிவிடுவேன். நெருப்போட விளையாடாதீங்க! ஒருநாள் தவணை தர்றேன். உங்கள் முடிவை மாற்றிவிடுங்கள். அல்லது நான் எப்படி மாறுவேன்னு என்னால் சொல்ல முடியாது” கோபமாகக் கூறிவிட்டு வெளியேறினார்.
விளைவு இன்றைய நிகழ்ச்சி!
ஆனந்த் போலீஸ் ஷ்டேஷனை அடைந்தார். “பரிதானம் வாங்கியவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும் என்றுதானே வேதம் கூறுகிறது. பரிதானம் வாங்க மறுத்த எனக்கு ஏன் இந்த கதி? என் மனைவி என் மகன், என் குடும்ப கெளரவம்? ஐயோ! எல்லாம் அழிந்து போனதா? ஆனந்த் உள்ளம் அலைமோதியது. நெஞ்சில் ஏதோ ஒன்று அடைத்தது.
“ஐயோ” நெஞ்சைப்பிடித்தார். அப்படியே அமர்ந்தார். அவர் உயிர்ப்பறவை உடலாகிய சிறையினின்று விடுதலை பெற்று பறந்தே போய்விட்டது!
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. களையிழந்த அந்த பங்களாவின் கடைசி அறையில் ஒரு உருக்குலைந்த சரீரம் படுத்துக் கிடந்தது. கை கால்களை குஷ்டரோகம் தன் கோரப் பற்களால் குதறியிருந்தது. மகனும், மருமகளும் வெறுத்து ஒதுக்க” இந்தக் கிழடு சீக்கிரம் செத்துத் தொலைய மாட்டேங்குதே” என்ற ஏச்சு பேச்சுக்களை காதில் வாங்கியபடி வேலைக்காரி வெறுப்புடன் கொண்டு வந்து தரும் ஒருவேளை உணவை உண்டு காலம் கழித்து வரும் அந்த உருவம் வேறுயாருமல்ல! சாமுவேல்தான். சாக விரும்பினார். சாவு அவரைக்கண்டு ஓடியது. தன் தெய்வம் மன்னிக்கும் தெய்வம்; எவ்வளவு பாவம் செய்தாலும் மன்னிப்பு வேண்டினால் மன்னித்து மீட்பு தரும் தயாளன் தன் இரட்சகர் என எண்ணினாரோ! என்னவோ? பாவங்களை தன் வாழ்வில் குவித்துக் கொண்டார். அவர் பாவங்களெல்லாம் பூதாகரமாக எழுந்து அவரை வாட்டியது. உடல் வேதனை ஒரு புறம்! உள்ளத்தின் உறுத்தல் சித்திரவதை செய்தது. ஆனந்தின் மரணத்திற்குப்பின் அவர் மனைவியும், மகனும் கீதாவின் தந்தையார் வீட்டிற்குச் சென்றுவிட்டது மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது. சாமுவேல் கொடிய நரக வேதனையை அனுபவித்தார் என்றால் மிகையாகாது.
தன் பங்களா முன் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. அடுத்த சில நிமிடத்தில் தோட்டக்கார கந்தன் சாமுவேலின் அறைக்குள் வந்தான்.
“ஐயா! கடம்பவனத்தில் இப்பொழுது ஒரு பெரிய குஷ்டரோக ஆஸ்பத்திரி வைத்திருக்கிறாராம்! அந்த டாக்டர் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு பார்க்க வந்திருக்கிறார். வரச்சொல்லட்டுமா? மேல்நாட்டுக்கெல்லாம் போய்வந்தவர் என்று கேள்விப்பட்டேன்யா! உங்களுக்கு சுகமாயிடும்” என்ற கந்தனைப் பார்த்து விரக்திச் சிரிப்பு சிரித்தார் சாமுவேல்.
“வரச்சொல் என்றார்.
பூட்ஸ் சத்தம் ஒலிக்க, தன் அறைவாசலில் வந்து நின்ற இளைஞனைப் பார்த்தார். யாரது? இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த அதே ஆனந்த்! திகைத்தார், தடுமாறினார்.
“ஆனந்த் நீங்களா?” கூவினார். வந்த வாலிபன் திடுக்கிட்டான் “அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?” ஆச்சரியமாகக் கேட்டான்.
“என்னை மன்னிச்சிடுங்கய்யா, நான் செய்த பாவத்துக்கு தண்டனை கிடைச்சிடுச்சு” தடுமாறியபடி எழுந்த சாமுவேல் அந்த இளைஞனின் காலில் விழுந்தார். விழுந்தவர் மீண்டும் எழவில்லை. பரமனும் பாவ மன்னிப்பளித்தார்! பூலோக நரக வேதனை அவருக்கு முடிந்தது.!
இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.