எசேக்கியத் திட்டத்தின் ஒன்பதாவது அம்சம்

கர்த்தருக்குப் பஸ்கா :
"அதன் பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல், யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதுமன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்... (2 நாளா 30:1)

" தேசத்திற்காக தேவ சமூகத்தில் எழுந்து நிற்போம் வாருங்கள்" என்ற அறைகூவலை எருசலேமில் தொடங்கிய எசேக்கியா, தன் ராஜ்யத்தின் எல்லையான யூதாவெங்கும் பறைசாற்றுவிக்கிறான். அது தவிர தன் தரிசனத்தின் பாரத்தை, தேசத்தின் நிலைமையை தன் சகோதர தேசமான இஸ்ரவேலிலும் அறிவிக்கும்படி எப்பீராயீம், மனாசே, செபுலோன் கோத்திரங்களின் எல்லை வரைக்கும் நிருபங்களை அனுப்புகிறான்.

எசேக்கியா தேசமெங்கும் எழுதியனுப்பிய நிருபத்தின் சாராம்சம்: (2 நாளா 30:6-9)

■  உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள். அப்பொழுது அவர் உங்களிடத்துக்குத் திரும்புவார்!

■  கர்த்தருக்குத் துரோகம் பண்ணின உங்கள் பிதாக்களைப் போலவும் உங்கள் சகோதரரைப் போலவும் இராதேயுங்கள்!

■  உங்கள் பிதாக்களைப் போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்!

■  கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் பரிசுத்தம்பண்ணின அவரது சமூகத்துக்கு வந்து சேர்ந்து அவரையே சேவியுங்கள்!

■  உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமும் உள்ளவர். நீங்கள் அவரிடத்துக் திரும்பினால் அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை.

■  வாருங்கள்! பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய தேவகுமாரனின் சிலுவைக்குத் திரும்பிப் பஸ்காவை ஆசரிப்போம்! 

எசேக்கியாவின் இந்தப் பத்து அம்சத்திட்டம் பழைய ஏற்பாட்டுக்கு மட்டும் தான் பொருந்துமோ? அப்படியானால் புதிய ஏற்பாட்டின் நிலைப்பாடு என்ன?

● "எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும்.."(லூக் 24:47)

● "எருசலேம் துவக்கிச் சுற்றிலும் இல்லிரிக்கம் வரைக்கும்..."(ரோ 15:19)

● "எருசலேம் தொடங்கி பூமியின் கடைசிபரியந்தமும்..." (அப் 1:8)
என்பதே புதிய ஏற்பாட்டின் கட்டளை.

எருசலேமில் தொடங்கிய எசேக்கியாவின் எழுப்புதல் அலை தெற்கு முதல் வட எல்லைவரை ஜனத்தைக் கூட்டிச் சேர்த்ததுபோல, தேவனின் ஜெப அலை ஒன்று மையப்புள்ளியான ஒரு இடத்தில் துவங்கி, சுத்திகரிப்பும் பரிசுத்தமாகுதலும், ஜெப கூடுகையும், தேசத்திற்கான விண்ணப்பங்களும் மன்றாட்டுகளும் தேசத்தின் ஒரு முனை யிலிருந்து கடைமுனை வரை பரவியே ஆக வேண்டாமோ?

எசேக்கியாவின் ஜனம் யூதா, இஸ்ரவேல் என்ற பிரிவினையையும், பாகுபாடுகளையும் களைந்து ஒரே சகோதரராய் எருசலேமில் பஸ்காவை ஆசரிக்க ஒன்றுகூடியது போல இன்றைய சபை தன் சபைப்பிரிவுகளையும், சாதிப் பிரிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் மறந்து நமக்காக பலியான நமது பஸ்காவாகிய இயேசுவின் பாடுகளின் ஐக்கியத்தில் பங்குபெற்று மகிழ்வதாக! அதற்காகக் கிறிஸ்துவின் அன்பு ஒன்றே நம்மை நெருக்கி ஏவுவதாக! சிலுவையினடியில் சபையானது ஏகோபித்து இன்னும் ஒரு முறை ஒன்றுகூடுவதாக! 

பாவம் என்னும் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்! ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே! (1 கொரி 5:7,8)

அப்பொழுது, "அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.." (2 நாளா 30:27)

எசேக்கியாவின் பத்து அம்சத்திட்டத்தின் முதல் திட்டம் முதல் ஒன்பதாம் திட்டம் வரையிலான ஒவ்வொன்றும் ஒழுங்காய் செயல்வடிவிலே நம் மத்தியில் செய்யப்படுமானால், தேவசேனையின் சத்தம் கேட்கப்பட்டு, ஜெபவீரர்களுடைய விண்ணப்பம் தேவனுடைய பரிசுத்தவாசஸ்தலத்தில் வந்து எட்டி, அதினாலே தேசமெங்கிலுமிருந்து தேசத்துக்காக செய்யப்படும் வேண்டுதலைத் தேவன் கேட்டருளுவார். (2 சாமு 24:25)

Author : Pr. Romilton



Topics: Daily Devotions bible study

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download