ஜெப ஆலயத்தின் தலைவரான யவீருவின் மகள் சுகவீனமாக இருந்தபடியால், கர்த்தராகிய இயேசுவை வந்து தன் மகளைக் குணப்படுத்தும்படி யவீரு அழைத்தான். இயேசு அப்படி போய் கொண்டிருந்த போது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் நோயுற்றிருந்த ஒரு பெண், அவரை இரகசியமாகத் தொட்டு, குணமானாள். அவள் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவும் மற்றும் அவளுடைய விசுவாசமே அவளை முழுமையாக்கியது என்று அவளுக்கு உறுதியளிக்கவும் ஆண்டவர் விரும்பினார். இதற்கிடையில் யவீருவின் மகள் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. ஆனால் இயேசு அவனிடம் பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர்கள் யவீருவின் வீட்டை அடைந்ததும் துக்கம் நிலவியது. பேதுரு, யாக்கோபு, யோவான், யவீரு மற்றும் அவனது மனைவி என் இவர்கள் மாத்திரம் இறந்து கிடந்த அவன் மகளின் அறைக்குள் கர்த்தர் அழைத்துச் சென்றார். கர்த்தராகிய இயேசு யவீருவின் மகளை உயிரோடு எழுப்பியபோது மூன்று வகையான ஜனங்களை வெளியே வைத்திருந்தார் (லூக்கா 8:40-56).
1. அவிசுவாசிகள்:
இரண்டு வகையான மக்கள் உள்ளனர்: ஒன்று 'வரையறுக்கப்பட்ட மனநிலை' உள்ளவர்கள் மற்றும் 'விசுவாச மனநிலை' உள்ளவர்கள். மக்களின் வரையறுக்கப்பட்ட மனநிலை எப்படி இருக்கும் என்றால் அவர்களின் உணர்வுகளின் அடிப்படையில் அல்லது மனதிற்கு தோன்றும் விதமாக அல்லது விஷயங்களை உணர்ந்து புரிந்துகொள்வதற்கான காரணங்களைப் பொறுத்தது எனலாம். 'விசுவாச மனப்பாங்கு' உள்ளவர்கள் பகுத்தறிவுக்கு அப்பால் சென்று தேவனை நம்புகிறவர்கள். போதிய நம்பிக்கை இல்லாத சீஷர்களையும் மற்ற உறவினர்களையும் கர்த்தராகிய இயேசு வெளியே வைத்தார்.
2. துக்கம் அனுசரிப்பவர்கள்:
துக்கப்படுபவர்கள் எப்போதும் கடந்த காலத்தில் வாழ முனைகிறார்கள். இந்த சம்பவத்தில் கூட அங்கு இருந்தவர்கள் சிறுமியின் மரணம் குறித்து கவலைப்பட்டனர். அந்தப் பெண் உயிருடன் இருப்பதாக இயேசு கூறியபோது அவர்கள் அவரை ஏளனம் செய்தனர். ஜெருசலேம் ஆலயம் மீண்டும் கட்டப்பட்ட அர்ப்பணிக்கப்பட்ட போது, மூத்த குடிமக்கள் (முதியோர், பிதாக்கள்) பழைய ஆலயத்தையும் மற்றும் அதன் மகிமையையும் நினைத்து ஏக்கத்தால் அழுதனர் (எஸ்றா 3:12); இளைஞர்களை ஏற்றுக்கொள்வதற்கும், அங்கீகரிப்பதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் பதிலாக, வயதானவர்கள் அவர்களைக் கண்டனம் செய்தனர். இந்த துக்கம் அனுசரிப்பவர்களுக்கு திடீர் மறதி நோய் வந்து விடும் போல; எப்படியென்றால் இஸ்ரவேல் ஜனங்களும் இப்படிதான் எகிப்தின் அடிமைத்தனத்தை மறந்து நல்ல உண்டு களித்து இருந்தோமே என்று மோசேக்கு எதிராக முறுமுறுத்து துக்க முகமாக இருந்தனர் (யாத்திராகமம் 16:3).
3. தூற்றுபவர்கள்:
தேவனின் வாக்குறுதிகள், தேவ வல்லமை, தேவனின் அன்பு மற்றும் அவரின் கிருபை ஆகியவற்றின் மீது சந்தேகம் கொண்டவர்கள் இவர்கள். வீட்டில் கூடியிருந்தவர்கள், சிறுமி உயிருடன் இருக்கிறாள் என்று இயேசு கூறியதை கேட்டு கேலி செய்தனர். கேலி செய்பவர்கள் தேவ வார்த்தையைப் புறக்கணித்து, அவருடைய வருகையைப் பற்றி கேலி செய்கிறார்கள்(சங்கீதம் 1:1, 2 பேதுரு 3:3-4). தேவ ஊழியரான எலிசாவை கேலி செய்ததில் நாற்பத்திரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர் (2 இராஜாக்கள் 2:23-25).
அவிசுவாசிகள், புலம்புபவர்கள் மற்றும் தூற்றுபவர்கள் தேவனின் பெரிய திட்டத்தின் பங்காளர்களாக இருக்க முடியாது என்பதை எப்போதும் நினைவில்/மனதில் கொள்வோம்.
இந்த மூன்று வகைகளையும் நான் தவிர்க்கலாமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்